இணைப்பிதழ்கள்

கேள்வி மூலை 04: தங்கமீன்கள் மறதிப் பேர்வழியா?

ஆதி

அலங்கார மீன் வளர்க்கும் பெரும்பாலான குழந்தைகளின் முதல் தேர்வு தங்க மீன்களாகவே இருக்கும். இப்படித் தொட்டிக்குள் சுற்றிச் சுற்றி வரும் தங்க மீன்களைப் பார்க்கும் சிலர், மூன்று விநாடிகளுக்கு மேல் ஒரு விஷயத்தை இவற்றால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாதாமே என்று உச்சுக் கொட்டிக்கொண்டே பரிதாபப்படுவார்கள்.

இது மிகவும் தவறானத் தகவல். ஏனென்றால், புதிர்ப் பாதையில் தாங்கள் செல்ல வேண்டிய வழியை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய திறனைத் தங்க மீன்கள் பெற்றிருக்கின்றன. ஸ்பெயினில் உள்ள செவில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கவும், அதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன்களையும் தங்க மீன்கள் பெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

புதிர்ப்பாதைப் பரிசோதனையில் தொடக்கப்புள்ளி முதல் முடிவுவரை ஏற்கெனவே பழக்கப்பட்ட பாதைக்கு மாறாக, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து முடிவை அடையும் திறனையும் அவை பெற்றுள்ளன.

சில லிட்டர் தண்ணீர் மட்டுமே கொள்ளக்கூடிய தொட்டியில் தங்க மீன்களைப் போட்டு அடைத்துவிடும் மனிதர்களுடைய கரிசனம் வேண்டுமானால் குறைவு என்று சொல்லலாம். தங்க மீன்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் வரை ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் வைத்துக்கொள்ள முடியும் என்று பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அப்புறம் மீன்களைப் பற்றி இன்னொரு விஷயம், மீன்களுக்கு இமை கிடையாது. அதனால் அவை கண்களை மூடித் தூங்குவதில்லை. ஓரிடத்தில் நின்றபடியே ஓய்வு எடுப்பதோடு சரி.

SCROLL FOR NEXT