யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய 4 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை. எல்.ஐ.சி. நிறுவனம் ஆயுள் காப்பீட்டு சேவையை வழங்குவதைப் போல இந்த 4 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் வாகனங்கள், பொருள்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த காப்பீட்டு சேவைகளை வழங்கி வருகின்றன.
என்ன தகுதி?
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமானது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நேரடி நியமனம் மூலம் நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியில் 300 காலியிடங்களை நிரப்ப முடிவுசெய்துள்ளது. இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வை எதிர்கொள்ள
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நிர்வாக அதிகாரி பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஆன்லைன் வழியிலான அப்ஜெக்டிவ் தேர்வும், கேள்விக்கு விரிவாகப் பதிலளிக்கும் வகையிலும் (Descriptive type) வினாக்கள் கேட்கப்படும். நிர்வாக அதிகாரி பணிக்குத் தொடக்க நிலையில், சம்பளம் ரூ.48 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். முதல் கட்டத் தேர்வான ஆன்லைன் தேர்வு ஜூன் 12-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கு மே 6 முதல் ஆன்லைனில் (>www.uiic.co.in) விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 17 ஆகும்.
நேரடியாக நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் சேருபவர்கள் உதவி நிர்வாக மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர், கோட்ட மேலாளர் (மண்டல மேலாளர்), பொது மேலாளர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம். மேலும் நிறுவனத்தின் தலைமை பதவியான தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியையும் அடையலாம்.