இணைப்பிதழ்கள்

நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றம்

குள.சண்முகசுந்தரம்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி களிலும் கட்டமைப்பு மற்றும் கல்வி போதிக்கும் முறைகளை நவீனப்படுத்திவருகின்றன. இதன் பின்னணியில் இருப்பது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.

விருப்பம் முக்கியம்

இந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.சி.டி) உதவிப் பேராசிரியர் ஆசிர் ஜூலியஸ் வியத்தகு மாற்றங்களுக்கு விதை போட்டிருக்கிறார்.

“கணினி உள்ளிட்ட உரிய கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஏன் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு நடத்தினோம். அப்போதுதான், ஆசிரியர்களுக்கு அந்தந்தத் துறை சார்ந்த பயிற்சி இல்லாததுதான் காரணம் என்பது தெரியவந்தது” என்கிறார் ஜூலியஸ்.

இதைச் சரிசெய்ய வேண்டுமானால் முதலில் ஆசிரியர்களுக்கு நேர்த்தியான பயிற்சிகளைத் தர வேண்டும் என நினைத்தார். ஆனால் முன்பெல்லாம் பள்ளிக் கல்வித் துறையில் ஏதாவதொரு பயிற்சி என்றால் அனைத்து ஆசிரியர்களையும் கட்டாயம் வரவைப்பார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஆசிரியர்களும் அந்தப் பயிற்சியில் கலந்துகொள்வார்கள்.

இதனால் பயிற்சிப் பட்டறை முடிந்த பின்பும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடாது. எப்படி மாணவர்களை நிர்ப்பந்தித்துப் படிக்கவைக்க முடியாதோ அதுபோன்றே ஆசிரியர்களையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என முடிவெடுத்தார் ஆசிர் ஜூலியஸ்.

திறமைக்கு ஏற்ற வாட்ஸ் அப் குழு

“அதன்படி, யார் யாருக்கெல்லாம் என்னென்ன துறைகளில் திறமை இருக்கிறது என்கிற விவரத்தை அவர்களிடமே கேட்டுப் பெற்று, விருப்பத்துடன் அவர்களைப் பயிற்சிகளுக்கு வரவைத்தோம். இப்படித்தான் 5,200 ஆசிரியர்களின் ‘டேட்டா பேஸை’ உருவாக்கினோம்” என்கிறார் இவர்.

இந்த 5,200 ஆசிரியர்களில் வெவ்வேறு துறை சார்ந்த திறமையாளர்களும் இருக்கிறார்கள். இவர்களை 52 குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வாட்ஸ் அப் குழு வைத்திருக்கிறார்கள். கணிதம் சம்பந்தமான ஒரு பயிற்சிக்கு வர வேண்டும் என்றால் அது தொடர்பான குழுவில் இருப்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் அப் தகவல் அனுப்பப்படும். இவர்களில் படைப்புத் திறன் கொண்ட 500 ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இவர்களின் திறமைகளை வெளிக் கொணர ‘சென்டம் பாயிண்ட் டாட் காம்’ (centumpoint.com) என்ற இணையதளத்தை இயக்குகிறார்கள். இதில் இவர்களின் படைப்புகள் அனைத்தும் நெறியாளுகைக்குப் பிறகு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதால் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்துக் கொண்டு அதை மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

கற்பித்தல் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்குள் மறைந்து கிடக்கும் ஒளிப்படக் கலை, டப்பிங், எடிட்டிங், காணொலி ஒளிபரப்பு என மற்ற திறமைகளையும் வெளிக்கொணர பாலம் போட்டுக் கொடுக்கிறது ஐ.சி.டி. இத்தகைய திறமைகளைக் கொண்ட 240 ஆசிரியர்களை ஐ.சி.டி. தன்வசம் வைத்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்துக்காக மத்திய அரசு வழங்கும் விருதைக் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த 240 பேரில் இருப்பவர்களில் ஒருவர்தான் பெற்றிருக்கிறார்கள். ஐ.சி.டி. வழிகாட்டுதலில் செயல்படும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள ‘அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்’ அமைப்பின் முதல் மாநில மாநாடு மே 28, 29, 30 தேதிகளில் திருச்சியில் நடைபெறவிருக்கிறது.

“அந்தந்தப் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கற்பித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளித்துவருகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதால் மக்கள் அரசுப் பள்ளிகளைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றம் இதுதான்” எனப் பெருமை கொள்கிறார் ஆசிர் ஜுலியஸ்.

தொடர்புக்கு: 7373003359

SCROLL FOR NEXT