வேலைக்குத் தகுதியுள்ளவர்களாக மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பும் கடமையும் அவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தொழில்துறைகளுக்கும் உள்ளது.
கல்லூரிப் படிப்பு முடித்து வெளியே வரும் பட்டதாரிகள், வேலைக்கான தயாரிப்புகள் மற்றும் திறன்கள் இன்றி இருக்கிறார்கள் என்பது பொதுவான கருத்து. வெறுமனே 25 முதல் 30 சதவீதம் பட்டதாரிகள்தான் வேலைக்கு உடனடி தயார் நிலையில் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்குக் காரணங்கள் என்னவென்பதும், ஒருவர் வேலைக்குத் தகுதியாக இருப்பதற்குத் தேவையான திறன்கள் என்ன என்பதும் இதுவரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
அத்துடன் எத்தனை வேலைகளுக்கான காலியிடங்கள் போதுமான திறன்கள் இல்லாததால் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும் தெரியவில்லை. அந்தக் கணக்கீடு இருந்தால்தான் தேவையான திறன்களுக்கும், திறன் குறைபாடுகளுக்குமான இடைவெளிகளை நிரப்ப முடியும்.
இது மாணவர்கள் குற்றமா?
வேலைக்குத் தகுதியானவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக மதிப்பிடப்படும் நிலையில், உயர்கல்வியின் நிலையையும் அந்த மதிப்பீடு பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது. ஆக, எங்கே சிக்கல் இருக்கிறது? மாணவர்களின் கற்றல் திறனிலா? தொழில்துறையினரிடம் இருக்கும் வித்தியாசமான எதிர்பார்ப்பிலா?
இந்த இரண்டு அம்சங்கள் குறித்துப் போதிய தெளிவின்றி, மாணவர்களைக் குற்றம்சாட்டி அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்கிறோம். இப்படிப்பட்ட விமர்சனங்கள் மூலம் உயர்கல்வி அமைப்பையும் தரம் தாழ்த்துகிறோம். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் மேலோட்டமான மதிப்பீடுகளைக் கொண்டு விமர்சனங்கள் செய்வது ஆக்கபூர்வமானதல்ல.
தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகிவரும் வேலைகளுக்கான திறன்களை மாணவர்கள் கைக்கொள்வதற்கு தேசக்கட்டுமானத்தில் பங்காற்றிவரும் கல்வித்துறை, தொழில்துறை இரண்டும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும்.
கல்வித்துறையோ தொழில்துறையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கக் கூடாது. இரண்டு பேரும் சேர்ந்துதான் வேலைத்திறன்கள் சார்ந்து உணரப்படும் இடைவெளிகளை நிரப்ப வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் கையில்
மக்கள்தொகை ரீதியாக இந்தியா வேலை ஆற்றல் சார்ந்து, அதிகபட்சமாக இளைஞர் திறனைக் கொண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும்
அ) சந்தையின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வது அவசியம்.
ஆ) வேலைத்திறன் சார்ந்து அத்தியாவசியமாகத் தேவைப்படும் அம்சங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இ) தொழில்துறையில் கேட்கப்படும் தகுதி, திறன்கள் அடிப்படையில் மாணவர்களின் தகுதி, திறன்களை மதிப்பிட ஒரு முறையை உருவாக்க வேண்டும்.
ஈ) தொழில்துறையில் பணிசெய்வதற்கான திறன்களைக் கல்விக் காலம் முழுவதும் வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மாணவருக்குத் தேவைப்படும் திறன்கள்
பொறியியல் பயன்பாடுகள் சார்ந்து கணிதம் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தும் திறன்கள், பாடம் தொடர்பான கருத்தாக்கங்களுக்கும் சமகாலத் தொழில்துறை சிக்கல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதல், சோஷியல் இன்டலிஜென்ஸ் கோஷியண்ட் (எஸ்ஐக்யூ), எமோஷனல் கோஷியண்ட் (இக்யூ), தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்து அந்தச் சூழலைச் சரியாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்கும் திறன், ஒரு கருவி அல்லது தயாரிப்பை வடிவமைக்கும் திறன் ஆகியவை ஒரு மாணவருக்கு அவசியமானது.
சூழலுக்கேற்ற சிந்தனை மற்றும் அனுசரித்துப்போகும் திறன்.
பல்வேறு கலாச்சாரப் பின்னணியுடையவர்களுடன் சேர்ந்து அணியாகப் பணிசெய்யும் திறன்.
சோதனைகளை நடத்தும், வடிவமைக்கும் திறன். அத்துடன் விவரங்களைப் பகுப்பாய்வு செய்து அவற்றை உரைக்கும் திறன்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் திறன்.
ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன்
பொறியியல் சார்ந்து நடைமுறையில் இருக்கும் நவீன கருவிகளைப் பயன்படுத்தும் திறன்.
விமர்சனபூர்வமான சிந்தனை, புத்தார்வத் திறன்கள்.
இப்படி, நான்கு ஆண்டு கல்வியில் மாணவர்களிடம் மேற்கண்ட திறன்களை வளர்த்தால், அவர்கள் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும்போது வேலைக்கான முழுத் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள்.
பொறியியல் படிப்பு சார்ந்து ஒரு பட்டமும் சராசரியாக 60% மதிப்பெண்ணும் ஒருபோதும் ஒரு மாணவரை வேலைக்குத் தகுதியானவராக மாற்றாது. மாணவர்களின் திறனை மேம்படுத்த நிறைய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வாய்ப்புகளும் அவர்களுக்குக் கல்லூரியிலேயே வழங்கப்பட வேண்டும்.
பன்முகத் திறன்களை மெருகேற்ற
ஆங்கிலப் புலமைத் திறன் சார்ந்த சான்றிதழ் படிப்பு, ஆங்கிலம் தவிர்த்த அயல்மொழி அறிவு, மென் திறன் சான்றிதழ் படிப்புகள், ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் கருத்தரங்கில் ஆய்வுத்தாள் சமர்ப்பிக்கும் அனுபவம், பொதுவான கணிப்பொறி மென்பொருட்களான எக்செல், ப்ரைமவேரா மற்றும் பிற மென்பொருள்களைப் பயன்படுத்தும் திறன்களை ஒரு பொறியியல் மாணவர் பெற்றிருத்தல் அவசியம்.
பட்டப் படிப்போடு ஒரு பொறியியல் மாணவர் மேற்கண்ட திறன்களையும் பெற்றிருந்தால் போதும், அவர் தன்னம்பிக்கையுடன் எந்த வேலைக்கான நேர்காணலையும் எதிர்கொள்ள முடியும். பணியில் சேர்ந்த பிறகும் தனது நியமனத்தை நிரூபிக்க முடியும். உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் வேலைத்திறனை உயர்த்த இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்தல் அவசியம்.
கட்டுரையாளர் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் �தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: ஷங்கர்