இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் அசுர வேகத்தில் வரத் தொடங்கின. . இதன் காரணமாக, நிறுவனங்களின் கணக்கு வழக்குப் பணிகளைப் பார்க்க அதிகப்படியான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். அக்கவுண்டிங் தொடர்பான பணிகளுக்குப் பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடியது ‘டேலி’ என்ற அக்கவுண்டிங் சாப்ட்வேர்தான். இன்றைய தினம் நம் நாட்டில் 99 சதவீத நிறுவனங்கள் டேலியைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் டேலியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது என்பதுதான்.
தற்போது முதல்முறையாக டேலி நிறுவனமே நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நேரடி டேலி பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில், பாடத்திட்டம், பயிற்சி, தேர்வுகள் என அனைத்தும் டேலி நிறுவனம் மூலம் நேரடியாக நடத்தப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல் டேலி நிறுவனமே இந்த மையங்களின் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கிறது. அத்தோடு படித்து முடித்ததும் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்கிறது. இதற்காக டேலி பயிற்சி பெற்றவர்களின் தகவல் தொகுப்பு (டேட்டா பேங்க்) ஒன்றும் உருவாக்கப்படுகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் டேலி நேரடி பயிற்சி மையமான பிரைட் காமர்ஸ் கேரியர் அகாடமியின் நிர்வாகி ஜெ.வெங்கட்ராமன் கூறுகையில், “நேரடி பயிற்சி மையத்தில் டேலி சாப்ட்வேர் பயிற்சியுடன் ஆங்கில பேச்சுப் பயிற்சி, ஆளுமை மேம்பாடு, அடிப்படை கணினி ஆகிய பயிற்சிகளும் சேர்த்தே அளிக்கப்படுகின்றன” என்கிறார்.
டேலி சாப்ட்வேர் பயிற்சியில் சேர ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு கட்டுப்பாடு ஒன்றுமில்லை. 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் என 3 நிலைகளில் பயிற்சி அளிக்கிறார்கள். 6 மாத கால பயிற்சிக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம். 3 மாதப் பயிற்சிக்கு ரூ.14 ஆயிரம், ஒரு மாதப் பயிற்சிக்கு ரூ.3,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை டேலி நிறுவனத்திற்கு நேரடியாகச் செலுத்திவிட வேண்டும். அக்கவுண்டிங் மீது ஆர்வம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் டேலி பயிற்சியை எளிதில் முடித்துவிடலாம்.
டேலி பயிற்சி பெற்றவர் களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து திருப்பூரைச் சேர்ந்த கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) எஸ்.பாலாஜி கூறும்போது, “தமிழகத்தில் 28 லட்சம் நிறுவனங்கள் அசல் டேலி சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றன. அதிகார பூர்வமாக இல்லாமல் லட்சக்கணக்கானோர் டேலியை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில், டேலி சாப்ட்வேர் பயிற்சி பெற்றவர்கள் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். பயிற்சி முடித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே ரூ.18 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வரை சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக உள்ளன. அமைப்புசாரா சிறிய நிறுவனங்களில்கூட ரூ.10 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் பெறலாம். டேலி பயிற்சியை முடிப்பவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் (எம்என்சி), தனியார் வங்கிகள், தொழில்நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்கிறார்.
டேலி பயிற்சி தொடர்பான அத்தனை விவரங்களையும் தமிழ்நாட்டில் எங்கெங்கு டேலி நேரடி பயிற்சி மையங்கள் உள்ளன என்ற விவரங்களையும் 9842185010, 9994335010 ஆகிய செல்போன் எண்களில் அறிந்துகொள்ளலாம்.