இணைப்பிதழ்கள்

ஃபேஷன் படிக்க ஆசையா?

ஆர்.ஷபிமுன்னா

பிளஸ் டூ முடித்த இளைஞர்கள் அடுத்த என்ன படிக்கலாம் என்கிற தவிப்பில் இருப்பார்கள். தாம் பொறியாளராக முடியவில்லை, மருத்துவராக முடியவில்லை வழக்கறிஞராக முடியவில்லை என்பதற்காகத் தங்களுடைய குழந்தைகளாவது சாதிக்க வேண்டும் என எண்ணும் பெற்றோர் ஒரு பக்கம். சொந்தக்காரர்களின் குழந்தைகள் இந்தக் குறிப்பிட்ட படிப்பைப் படிக்கிறார்கள், அதையே தங்களுடைய குழந்தைகளும் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இன்னொரு பக்கம்.

“என்னோடு படித்த நண்பர்களெல்லாம் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் நானும் அதையேதான் படிப்பேன்” எனச் சக மாணவர்களிடமிருந்து இளைஞர்கள் வலிந்து பெற்றுக்கொள்ளும் அழுத்தம் இன்னொரு பக்கம். இப்படியான காரணங்களினால்தான் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் எதிர்காலம் கவலைக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் மாறிப்போகிறது.

இப்படி இல்லாமல் ஒரு மாணவர் தான் விரும்பிய படிப்பை, தன்னால் படிக்க முடியும் என்று நம்புகிற படிப்பைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் உதவிட வேண்டும்.

நம்பிக்கைத் துளிர்க்கிறது

- தேவதாஸ்

இம்முறை தமிழ் நாட்டில் 8.3 லட்சம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வை எழுதி அதில் 90%-த்துக்கும் அதிகம் பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களெல்லாம் வழக்கமான பொறியியல், மருத்துவ, கலை, அறிவியல் படிப்புகளையே தேர்ந்தெடுத்தால் என்னவாகும்? “இத்தனை காலம் இப்படியாக ஒரு சில துறைகளை மட்டுமே தேர்ந்தெடுத்ததினால் ஏராளமான வேலையில்லாப் பட்டதாரிகளும் தகுதிக்குக் குறைந்த வேலையைச் செய்யும் இளம் பட்டதாரிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய போக்கு பாதிக்கப்படும் இளைஞருக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் பெரும் சுமையாக மாறிவிடுகிறது.

சமீபகாலமாக இந்த நிலையில் சிறிதளவு நேர்மறை மாற்றம் வரத் தொடங்கியிருக்கிறது. புதிதாய் +2 முடித்த மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் தற்போது மாற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாணவர்களின் பணி வாழ்க்கை முன்னேற்றத்தை (Career development) கருத்தில் கொண்டு புதுப்புது துறை சார்ந்த ஏராளமான படிப்புகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது” என்கிறார் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் முன்னாள் இயக்குநர் தேவதாஸ்.

அந்த வகையில் ஃபேஷன் சம்பந்தமான படிப்புகள் இந்தக் காலகட்டத்தில் மாணவர்களை ஈர்த்துப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே அளிக்கப்பட்ட ஃபேஷன் படிப்பை இப்போது இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அளிக்கின்றன. இதற்கான வேலை வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.

படித்தவுடன் வேலை

இந்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (National Institute of Fashion Technology- NIFT)தான் இந்தியாவில் இதற்கான முன்னோடி. 1986-ல் புது டெல்லியில் மட்டும் ஒற்றை வளாகத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 15 நகரங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. அத்தனையும் இந்திய அரசால் நிர்மாணிக்கப்பட்டு இயங்கிவருகின்றன. இதைத் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஃபேஷன் படிப்பை அறிமுகப்படுத்தின. பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஃபேஷன் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களின் வரவேற்பைப் பார்த்து 2015-ல் மெக்கான்ஸ் ஊட்டி ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் அண்ட் டிசைன் என்னும் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்களுக்குப் பாடத்திட்டம், வகுப்புக்கான பயிற்சி போன்றவைக்கு NIFT-யுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஃபேஷன் டிசைன், ஃபேஷன் கம்யூனிகேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிசைன் உள்ளிட வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் பாடத்திட்டத்தைக் கொண்டு நான்காண்டு பி.டெஸ் (B.Des), இரண்டாண்டு எம்.டெஸ் (M.Des) படிப்புகளை இக்கல்லூரி வழங்குகிறது.

பி.டெஸ் படிக்க விரும்பும் மாணவர்களின் படைப்பாற்றல் நுழைவுத் தேர்வின் மூலமாகச் சோதிக்கப்படுகிறது. ஃபேஷன் படிப்பைப் பொருத்தவரை இளங்கலை, முதுகலை ஆகிய இரண்டிலும் ஏறக்குறைய 70% செய்முறையாக இருப்பதால் படித்து முடித்தவுடன் வேலை காத்திருக்கிறது. ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர், ஃபேஷன் பேட்டர்ன் மேக்கர்ஸ், ஃபேஷன் பத்திரிகையாளர் போன்ற ஏராளமான வேலைகள் கிடைக்கும். சுயதொழில் செய்து முன்னேறும் வாய்ப்பும் இத்துறையில் அபரிமிதமாக உள்ளது.

முக்கிய ஃபேஷன் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும்

www.nift.in

www.mcgansfashiondesign.com

www.b-u.ac.in

www.bdu.ac.in

SCROLL FOR NEXT