கடின உழைப்பு, துணிச்சல், சாகசம், கடல்பயணம் மற்றும் பன்னாட்டுச் சூழல் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஏற்ற இடம் இந்தியக் கடலோரக் காவல்படை. இதில் நாவிக் மற்றும் உதவி கமாண்டன்ட் பதவிகளில் நேரடியாகச் சேரலாம். நாவிக் பணிக்கு பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். உதவி கமாண்டன்ட் பதவியைப் பொறுத்தவரையில், பொதுப்பணி, தொழில்நுட்பம், குறுகிய கால பணி என 3 நிலைகள் உள்ளன. உரிய கல்வித்தகுதிக்கு ஏற்ப விருப்பமான பணியைத் தேர்வுசெய்யலாம். பெண்கள், குறுகிய கால பணியில் (Short Service commission) சேரலாம். 10 ஆண்டுகள் கொண்ட குறுகிய காலப்பணியை 14 ஆண்டுகள்வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
உதவி கமாண்டன்ட் (பொதுப்பணி), தேவையானவை:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு
பிளஸ்-2 (இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும்), டிகிரியில் 60 சதவீத மதிப்பெண்
வயது 24க்குள்.
உதவி கமாண்டன்ட் (தொழில்நுட்பப் பிரிவு-மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்):
பி.இ. அல்லது பி.டெக்.
பிளஸ்-2 (இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும்)
/ பாலிடெக்னிக், டிகிரியில் 60 சதவீத மதிப்பெண்
வயது 24க்குள்.
குறுகிய காலப் பணிப் பிரிவி்ல் சேர விரும்பும் பெண்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மதிப்பெண் தகுதி, வயது வரம்பு தகுதி மேற்கண்ட பதவிகளுக்குரிய அதே தகுதிகள்தான். ஒட்டுமொத்தமாக அனைத்துப் பதவிகளுக்கும் சேர்த்து, ஆண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், பெண்கள் 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை அவசியம்.
எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், என்சிசி ‘சி’ சான்றிதழ் பெற்றிருப்போருக்கும், தேசிய, சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கும் பட்டப் படிப்பில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், கண்டிப்பாக பிளஸ்-2-வில் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இறுதி ஆண்டு படிப்போரும் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத்தேர்வு (மனோதிடம், கலந்துரையாடல், ஆங்கிலத்தில் விவாதம்) மற்றும் உளவியல் தேர்வு, குழு பணி (Group Task), நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வே 3 நாட்கள் நீடிக்கும். தேர்வுசெய்யப்படுவோர் உரிய பயிற்சிக்குப் பின்னர் நேரடியாக உதவி கமாண்டன்ட் பணியில் அமர்த்தப்படுவர். தொடக்க நிலையிலேயே ரூ.60 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும். அத்துடன் ஏராளமான சலுகைகள், அலவன்சுகள் பெறலாம்.
தற்போது பொதுப்பணி, தொழில்நுட்பம், குறுகிய காலபிரிவு ஆகியவற்றில் உதவி கமாண்டன்ட் தேர்வுக்கான அறிவிப்பை இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ளது.
கடலோரக் காவல்படையின் www.joinindiancoastguard.gov.in என்னும் இணையதளத்தில் ஜூன் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்தை 2 செட் பிரிண்ட்-அவுட் எடுத்துவைத்துக்கொண்டு ஒரு பிரதியை முதல்நிலைத் தேர்வுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் கொண்டுவர வேண்டும்.
முதல்நிலைத் தேர்வு, சென்னை, மும்பை, கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது இந்த இணையதளத்தைப் பார்த்து வர வேண்டும். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 9-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும்முறை, தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.