கேலிச்சித்திரங்கள் எனச் சொல்லப்படும் கார்ட்டூன்கள் மொழி கடந்தவை. ஆர்.கே.லக்ஷ்மண், கே.சங்கர், கேசவ், மரியோ மிராண்டா, சுரேந்திரா, அஜீத் நைனன் தொடங்கி தமிழில் மதன், மதி வரை காலம்காலமாக கேலிச்சித்திரக்காரர்கள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பவர்களாக உள்ளனர். 46 ஆண்டுகளாக, சமூக, கலாச்சார, அரசியல், சினிமா செய்திகளையும் நிகழ்வுகளையும் கிண்டல் செய்யும் அமுல் சிறுமியின் கார்ட்டூன் தொடர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் ஒன்று. மகாகவி பாரதி, ‘தி இந்தியா’ இதழில் வெளியிட்ட கேலிச்சித்திரங்கள் அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் நிலையைப் பிரதிபலிப்பவை.
இந்தியாவில் கார்ட்டூன்கள் வெள்ளையர் காலத்தில் நுழைந்தன. ஆனால், சாதாரண இந்தியப் பிரதிநிதியின் சுதந்திரக் குரலாகச் சீக்கிரமே அவை குணமாற்றம் அடைந்தன. சங்கர் பிள்ளைதான், இந்தியக் கேலிச் சித்திரத்தின் தந்தை என்று கருதப்படுகிறார்.
இன்றைய ஒலி-ஒளி ஊடகம், இணையம், திரைப்படம், மல்டி மீடியா, விளம்பரத்துறை, விளம்பரத் தட்டிகள் அனைத்திலும் மக்களிடம் செய்திகளைக் கொண்டு செல்வதற்கு கேலிச்சித்திரம் இன்னமும் வலுவான ஊடகமாகவே உள்ளது.
கார்ட்டூனிஸ்ட் ஆவதற்கான தகுதி எது?
ஓவியம், சிற்பம் மற்றும் புகைப்படக்கலை போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க நிறைய பயிற்சிக்கூடங்கள் உள்ளன. ஆனால் கார்ட்டூன் வரைவதை முறையாகக் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை. கேலிச்சித்திரக்காரர்களைப் பணியமர்த்துவதற்குப் பொதுவாக ஊடக நிறுவனங்கள் ஓவியம், நுண்கலை, வரைகலை, அனிமேஷன் ஆகியவற்றில் இளங்கலை படிப்பைத் தகுதியாக வைத்திருக்கின்றன. அத்துடன் ஊடக நிறுவனங்களில் இடைநிலை, படிநிலை கேலிச்சித்திரக்காரர்களை அமர்த்துவதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டு அனுபவத்தையும் எதிர்பார்க்கிறார்கள். உயர்நிலைப் பணிகளுக்கு முதுகலை கலைப்படிப்பு மற்றும் ஐந்து முதல் ஏழாண்டுகள் அனுபவமும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையான திறன்கள்
நகைச்சுவைத் திறன், கலாரசனை, கற்பனைத்திறன், படைப்பாக்கத் திறன்,
ஒரே விஷயத்தைப் பல கோணங்களில் யோசிக்கும் திறன், நல்ல வரை திறன், புதுப்புது எண்ணங்கள், அதைப் படங்களாக மாற்றும் திறன் ஆகியவை தேவை. செய்தித்தாள்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலவரம்புக்குள் அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினை புரியுமாறு கேலிச்சித்திரங்களை உருவாக்குவது அவசியம். கணிப்பொறி பயன்பாடே நமது வாழ்க்கை முறையாகிவிட்டதால், கணிப்பொறி அறிவும் ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு அவசியம். கணிப்பொறியும் மென்பொருட்களும் ஒரு ஓவியரின் எண்ணத்தை முழுமையாக்க உதவுபவை.
ஒரு நல்ல கேலிச்சித்திரத்துக்குக் கூர்மையான கருத்தும் ஆழமான சிந்தனையும்தான் ஆதாரம். அதனால் ஒரு வெற்றிகரமான கேலிச்சித்திரக்காரர் அன்றாட நிகழ்வுகளையும் சர்ச்சைகளையும் ஊன்றிக் கவனிப்பவராகவும், துடிப்பான சிந்தனை கொண்டவராகவும், அவ்வப்போதைய சூழல்களுக்குத் தன் சித்திரங்கள் வழியாக எதிர்வினை புரிபவராகவும், நுண்ணுணர்வு கொண்டவராகவும் இருப்பது அவசியம்.
ஆர்.கே. லக்ஷ்மணன்
சுற்றியிருப்பதைப் பாருங்கள்
நீங்கள் கேலிச் சித்திரக்காரராக ஆசைப்பட்டால் உங்களுடைய ஸ்கெட்ச்புக்கில் தொடர்ந்து கிறுக்கிக் கொண்டே இருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் வீடுகள், மரங்கள், உயிரினங்கள், அன்றாட நிகழ்வுகளைக் காட்சிகளாகப் பதிவு செய்து கொண்டே இருங்கள். அரசியல் கட்சிகள், கொடிகளின் நிறங்கள், மதச் சின்னங்கள், புராண கதாபாத்திரங்கள், பிரபலங்கள், தலைவர்கள், கட்டிடங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். கிராஃபிக் மென்பொருள் திறனும் இன்று அவசியத் தேவை. ஆழமான வாசிப்புப் பழக்கம் ஒரு நல்ல கேலிச்சித்திரக்காரரைச் சிறந்த கேலிச்சித்திரக்காரராக மாற்றக்கூடியது.
அரசியல் கேலிக்கூத்துகளும், அபத்தங்களும், ஊழல்களும், சகிப்புத்தன்மையின்மையும் பெருகி வரும் சூழலில் அதிகாரத்துக்கு எதிராக, ஆளும் அமைப்புகளை விமர்சிக்க கேலிச்சித்திரக்காரர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்தபடிதான் இருக்கும்.
கார்ட்டூன் அனிமேஷனில் ஈடுபாடுள்ளவர்கள் படிப்பதற்கான கல்வி நிலையங்கள்
# இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்ட்டூன், பெங்களூரு
# சர் ஜே.ஜே. ஸ்கூல் ஆப் அப்ளைட் ஆர்ட்
# ஃபேகல்டி ஆப் பைன் ஆர்ட்ஸ், பரோடா பல்கலைக்கழகம்
# ஐஐடிகளில் உள்ள தி மாஸ்டர்ஸ் இன் அனிமேஷன் டிசைன்-ல் விருப்பப் பாடமாக உடலியல் மற்றும் சித்திரம் வரைதல் உள்ளது. இந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் ஒரு குழந்தைகள் புத்தகத்தின் உள்ளடக்கம் மற்றும் ஓவியங்களை ஒவ்வொருவரும் தயாரிக்க வேண்டும்.
# நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்
கார்ட்டூனிஸ்ட்கள் எங்கெல்லாம் தேவைப்படுகிறார்கள்
# அனிமேஷன் ஸ்டுடியோக்கள்
# திரைப்பட, வீடியோ ஸ்டுடியோக்கள்
# கார்ட்டூன் சேனல்கள்
# கேமிங் வீடியோ நிறுவனங்கள்
# செய்தித்தாள்கள், பதிப்பு நிறுவனங்கள்
மதன்