கிங்பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா, அந்நிறுவனம் சார்பாக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முதல் தவணையாக 4,000 கோடியைச் செலுத்துவதாகத் தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். நேரில் ஆஜராக மே மாதம் வரை அவகாசம் கேட்டிருந்தார்.அது குறித்து மல்லையா கடன் வாங்கியிருந்த 17 வங்கிகள் முடிவெடுத்துப் பதில் சொல்லவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி 17 வங்கிகளும் சேர்ந்து கடனில் ஒரு பகுதித் தொகையாக மல்லையா அறிவித்த 4,000 கோடியை நிராகரிப்பதாகத் தெரிவித்தன. அத்துடன் மல்லையாவின் உறவினர் பெயரில் உள்ள சொத்துகள் உட்பட அனைத்துச் சொத்துகளின் விவரங்களையும் அவர் தெரிவிக்க வேண்டுமென்றும், விசாரணையின்போது நீதிமன்றத்தில் அவர் நேரடியாக ஆஜராக வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளன. நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் கிங்பிஷர் ஏர்லைன் நிறுவனம் சார்பாக 9,000 கோடி ரூபாயை வங்கிகளுக்கு பாக்கிவைத்துள்ளார் விஜய் மல்லையா. இவர் மாநிலங்களவை உறுப்பினரும்கூட.
ஏலம் போன எழுத்தாளர் இருக்கை
புகழ்பெற்ற ஹாரி பாட்டர் வரிசைக் கதைகளை எழுதிய ஜே.கே. ரவுலிங்கின் நாற்காலி கடந்த 6-ம் தேதி, நியூயார்க் நகரில் 3 லட்சத்து 94 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது. 1930-களைச் சேர்ந்த ஓக் மர நாற்காலி அது. ஒன்றுக்கொன்று பொருந்தாத நான்கு உணவு மேஜை நாற்காலிகளில் ஒன்றாக ரவுலிங்குக்கு 1995-ல் பரிசளிக்கப்பட்டது. அப்போது அவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் எளிய குடியிருப்பில் அதிகம் தெரியாத எழுத்தாளராக வாழ்ந்துவந்தார். தட்டச்சு செய்வதற்கு அந்த நாற்காலியை சௌகரியமாக உணர்ந்த ரவுலிங் அதில் அமர்ந்துதான் ‘ஹாரிபாட்டர் அண்ட் தி சார்சரர்ஸ் ஸ்டோன்’, ‘ஹாரிபாட்டர் அண்ட் தி சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ்’ ஆகிய உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதினார்.
ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண் நீதா அம்பானி
ஆசியாவின் 50 சக்தி வாய்ந்த பெண்மணிகள் என்ற பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் இயக்குனர் நீதா அம்பானியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் முதலிரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளனர். வங்கியியல், உயிர்-தொழில்நுட்பம், டேட்டா அனலட்டிக்ஸ், ஜவுளித் துறை, மருந்துகள், உடல்நலம் மற்றும் அழகு சாதனப் பிரிவுகளில் வெற்றிபெற்ற இந்தியப் பெண்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மு சிக்மா டேட்டா அனலட்டிக்ஸ் சேவை நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் அம்பிகா தீரஜ், வெல்ஸ்பன் இந்தியா ஜவுளி நிறுவனத்தின் திபாளி கோயங்கா, லுபின் மருந்து நிறுவனத்தின் வினிதா குப்தா, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் சாந்தா கோச்சார், விஎல்சிசி ஹெல்த்கேர் நிறுவனத்தின் வந்தனா லுத்ரா, பையோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் மஜூம்தார் போன்ற இந்தியப் பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய பனாமா ஆவணங்கள்
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக என்னும் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் பனாமாவில் தங்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கியதாக அவர்களது பெயர்களும் இந்த ஆவணத்தில் வெளியாகின. ரஷ்ய அதிபர் புதின், எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் தொடங்கி இந்தியாவின் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் வரை பெயர்கள் அடிபட்டன.
பனாமா ஆவணங்கள் தொடர்பாக அவசர முடிவுகளுக்கு வருவதற்கு முன்பு, சட்ட ரீதியானது எது, சட்ட விரோதமானது எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும்; அவசர முடிவுகளுக்கு வரக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை ஆய்வுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்திரா கடந்த 6-ம் தேதி தெரிவித்தார். பனாமா ஆவணங்களில் 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குலுக்கலில் அமெரிக்க விசா லாட்டரி
அமெரிக்காவில் வரும் நிதியாண்டில் (2017), தனித்திறன் கொண்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாக்களை 85 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதியோடு, எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களை வாங்கும் பணியும் முடிவடைந்தது. 85 ஆயிரம் விசாக்களில் 20 ஆயிரம் ‘அட்வான்ஸ்ட் டிகிரி எக்ஸம்ஷன்’ பிரிவின் கீழ் சிறப்புப் பிரிவில் வழங்கப்படும்.
இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள்தான் எச்1பி விசாக்களின் பெரும் பயனாளிகளாக உள்ளனர். அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தங்களது பணியாளர்களை எச்1பி விசாக்கள் மூலம் இந்த நிறுவனங்கள் வேலைக்கு அனுப்புகின்றன. கடந்த 2014- ல் அமெரிக்கா வழங்கிய எச்1பி விசாக்களில் 86% இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. பொது வகைமையில் 65 ஆயிரம் பேருக்கு எச்1பி விசா வழங்குவதற்கும், சிறப்பு வகைமையில் 20 ஆயிரம் பேருக்கு எச்1பி விசா வழங்குவதற்கும் லாட்டரி குலுக்கல் முறை பின்பற்றப்படும். ஏனெனில் 85 ஆயிரத்துக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன.