வளங்கள் குறைவாகவும் மக்கள்தொகை அதிகமாகவும் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அரசுக் கொள்கை வகுப்பது சவாலான காரியம். குறைவாக இருக்கும் வளங்களை யாருக்கு அளிப்பதென்பதை மையமாகக் கொண்டிருக்கும். குறிப்பாக ஏழைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இப்படி, குடிமக்களின் நலன் என்பதை முன்னிறுத்திய அரசின் கொள்கையே பொதுக்கொள்கை எனப்படுகிறது.
ஒரு அரசு எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று தீர்மானிக்கிறதோ அதுதான் பொதுக்கொள்கை என்று அரசியல் விஞ்ஞானி தாமஸ் ஆர்டை குறிப்பிடுகிறார். பொதுமக்களின் நலன்களைப் பொறுத்து அரசின் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் ஆராய்வதாகப் பொதுக்கொள்கை சார்ந்த ஆய்வுகள் உள்ளன.
பொதுக்கொள்கை சார்ந்த கல்வி என்பது ஒரு நாடும் சமூகமும் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள உதவும். மாறிவரும் குடிமக்களின் பிரச்சினைகள், பொருளாதார நிலை, சுற்றுச்சூழல் சர்வதேசப் பிரச்சினைகளின் அடிப்படையில் புதிய கொள்கைகளை வகுக்கத் துணைச் செய்யும்.
மத்திய அரசின் ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், தேசிய நீர் கொள்கை, உயர்கல்விக் கொள்கை, இடஒதுக்கீடு கொள்கை, பிரதான்மந்திரி ஜன்தன் யோஜனா ஆகியவை மனித மேம்பாட்டுக்கான பொதுக்கொள்கைகளுக்கு உதாரணங்கள்.
படிப்பும் வேலைவாய்ப்பும்
பொதுக்கொள்கை பட்டப்படிப்பாக இந்தியாவில் மிகவும் தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் பொதுக்கொள்கைக்கான பட்டயப் படிப்பின் மூலம் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு உண்டு. இதைப் படித்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்லூரி ஆசிரியர், ஆராய்ச்சி மையங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைகளைப் பெறலாம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பொதுக்கொள்கை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் சார்ந்த வேலைகளில் சேரப் பொதுக்கொள்கையில் ஆராய்ச்சிப் படிப்பு அவசியமாகிறது.
ஆசிரியர் பணி
பொதுக்கொள்கை சார்ந்த கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர் பணியில் சேர்வதற்குப் பி.எச்டி. அவசியம். இந்தியப் பல்கலைக்கழகங்களில் பொதுக்கொள்கை சார்ந்த படிப்பில் சேர்வதற்குப் போட்டி உள்ளது. பொதுக்கொள்கை சார்ந்த கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் பல்கலைக்கழகங்களும் கல்விநிலையங்களும் வேலைவாய்ப்பையும் அளிக்கின்றன. அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் அவர்கள் பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களான ஐ.ஐ.எம், ஐ.எஸ்.பி .(இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ்) போன்ற இடங்களிலும் பொதுக்கொள்கை சார்ந்த படிப்புகள் உள்ளன.
அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்
பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சட்டம், மேலாண்மை, சர்வதேச உறவுகள், புவியியல், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் பொதுக்கொள்கையைக் கல்வியாகக் கற்றவர்களுக்கு நிறையப் பணிகள் உள்ளன. நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் பொதுக்கொள்கை விஞ்ஞானிகளுக்குத் தேவைகள் உள்ளன.
அழுத்தத்தை நீக்கி மனிதாபிமானத்தை உருவாக்க
ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதற்கும், செயலாற்றலைப் பெருக்குவதற்கும் ஒரு நிறுவனத்தின் நிதி மற்றும் மனிதவளக் கொள்கைகளை நிர்வகிப்பதற்கும் நிர்வாகப் பணியில் உள்ளவர்களுக்குப் பொதுக்கொள்கை சார்ந்த கல்வி உதவிகரமாக இருக்கும். வேலை அழுத்தம் சார்ந்த சூழ்நிலைகளில் ஊழியர்களை உறுதியாகப் பராமரிப்பதற்கும் அவர்களை அழுத்தமான சூழ்நிலைகளிலிருந்து விடுவிப்பதற்கும் இக்கல்வி உதவும். பொதுக்கொள்கைகளை அதிக மனிதாபிமானமிக்கதாக உருவாக்கப் பொதுக்கொள்கை சார்ந்த கல்வி துணைசெய்யும்.
எங்கே பொதுக்கொள்கை படிக்கலாம்?
>> இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், பெங்களூரு
>> இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், காஷிபூர்
>> ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
>> அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
>> லக்னோ பல்கலைக்கழகம்
>> இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்
>> இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசி - எம்டிஐ குர்காவோன் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
>> சென்டர் ஃபார் பப்ளிக் பாலிசி ரிசர்ச்
>> இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்ப்பரேட் அஃபயர்ஸ்
>> இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ்