இணைப்பிதழ்கள்

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: அநீதியைத் தட்டிக்கேட்ட நாகராஜ் பிரகாஷ்

ஆயிஷா இரா.நடராசன்

குழந்தையிடம் போய் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என கேட்கிறார்கள். கல்வியின் நோக்கம் அதுவல்ல கல்வியின் நோக்கம் சமூக மாற்றம். மார்டின் லூதர்கிங் (ஜூனியர்).

ஒரு குழந்தை வளர்ந்து, வேலைக்குப்போய் ‘கை நிறைய’ சம்பாதிக்கக் கல்வி தயார்படுத்துகிறது எனச் சொல்கிறோம். ஆனால் யதார்த்தம் என்ன?

பள்ளி - கல்லூரிப் படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பதில்லை. வேதியியலில் முதுகலைப் பட்டதாரி வங்கி மேலாளராக இருக்கிறார். பொருளியலும் கணக்கு பதிவியலும் படித்தவர் வங்கி வேலை கிடைக்காமல் ஜவுளிக்கடை சிப்பந்தி. ஆக, நம் கல்வியின் நோக்கம் பணி இடமல்ல. அதேநேரத்தில் சமூக மாற்றத்தை, விடுதலையை நோக்கிய கல்வியாகவும் இது இல்லை. எது நடந்தாலும் தட்டிக்கேட்க விரும்பாத, எதற்கும் வளைந்து கொடுக்கும் சமரசக் குடிமக்களை உருவாக்கவே அரும்பாடுபடுகிறது இந்தக் கல்வித் திட்டம். “உனக்குத் தேவை மதிப்பெண். பாடத்தில் உள்ளதை மட்டும் படி, வேறெதிலும் கவனம் செலுத்தாதே” எனும் குட்பாய் கலாச்சாரம் பள்ளிக்கே உரியது அல்லவா!

எது நியாயம்?

ஆணவக் கொலை உட்படச் சர்வ சாதாரணமாகப் பல பேர் கண்முன் நடக்கும் கொடிய குற்றங்களை இச்சமூகம் எத்தகைய எதிர்ப்புமின்றி அனுமதிப்பதும் பாலியல் வன்முறைகளைச் சகஜமாகக் கடப்பதும் எதையும் கேள்வி கேட்காதே எனும் நமது பள்ளி வகுப்பறை திட்டத்திலிருந்து தொடங்கியதுதான். எது சரியான பதில் எனத் தேடுவதைவிட்டு, எது நியாயமான அணுகுமுறை என்னும் கூர்மையான விமர்சனப் பார்வையைக் கல்வியால் கொடுக்க முடியவில்லை. காரணம் மதிப்பெண்ணைத் துரத்தும் தேர்வுக் கலாசாரம்.

விமர்சனப்பூர்வ கல்வி முறை

சமூக அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சமூக விடுதலையைக் கோரும் கல்விமுறை, விமர்சனபூர்வக் கற்பித்தல் முறை (Critical Pedagogy) என்று அழைக்கப்படுகிறது. பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லோ பிரையரே இதை அறிமுகப் படுத்தினார். பின்னர் அதன் அடிப்படை கூறுகளை நிறுவி வகுப்பறை செயல்பாடாக மாற்றியவர் கனடாவின் கலாசார விமர்சகர் ஹென்றி கைராக்ஸ் (Henry Giroux). தங்களைச் சுற்றி நடப்பவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதே இக்கல்வியின் குறிக்கோள்.

இந்த வகுப்பறையில் பொதுப் பிரச்சினைகளில் தங்களைப் பொருத்திப்பார்த்து மாணவர்கள் விவாதிப்பார்கள். கற்றதை ஆராய்தல், மறுகற்றல், எதிர்வினை புரிதல், மதிப்பீடு செய்தல் ஆகிய நான்கு படிநிலைகளில் இந்த விவாதம் நடைபெறும். இந்த வகுப்பறையில் ஆசிரியரும் மாணவர்களில் ஒருவராகவும், கற்றலைத் தொடருபவராகவும் செயல்படுவார். கியூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் இக்கல்வி வெற்றிகரமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. வகுப்பறையில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றத்தைக் கறுப்பின மக்களின் விடுதலைக்காக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்கள் பாதிரியார் டெஸ்மாண்ட் டுட்டு மற்றும் ரோஸா பார்க்ஸ் அம்மையார் ஆகியோர்.

நமதுச் சூழலில் கண்முன்னே நடக்கும் ஒரு அநீதியைத் தட்டிக்கேட்க நம் கல்வியில் வழி என்ன என்பதை எனக்குக் காட்டியவர் மாணவர் நாகராஜ் பிரகாஷ்.

சமூக அவலத்துக்கு எதிர்க் குரல்

இதற்குமுன் நான் பணிபுரிந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவராக எனக்கு அறிமுகமானவர் நாகராஜ் பிரகாஷ். வகுப்பறையில் அனைவரும் அமைதியாக இருந்தாலும் எதற்காவது எப்படியாவது தனது குரலைப் பதிவு செய்வார். பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு அவர்மீது எரிச்சல் வெறுப்பு உண்டு. ‘புரிகிறதா, அடுத்த பாரா படிக்கலாமா!’ என்றதும் உடனடியாக ‘இது புரியவில்லை அது தெளிவில்லை, திரும்பச் சொல்லுங்க சார்’ எனக் குரல் எழுப்பிக்கொண்டே இருப்பார். ‘உனக்குப் புரிஞ்சா, உலகத்துக்கே புரிஞ்ச மாதிரிடா” என்பது போன்ற கிண்டலுக்கெல்லாம் அடங்கவே மாட்டார். ஆனால், ஆசிரியர்களே என்ன தைரியம் என வியந்த சம்பவம் நடந்தது.

வகுப்புக் கணித ஆசிரியை இரண்டு, மூன்று நாள் விடுப்பில் சென்று திரும்பி இருந்தார். திருமணமாகிச் சில மாதங்களே ஆன நிலையில் ஏதோ பிரச்சினை என்பது மட்டும் எங்களுக்குப் புரிந்தது. ஆனால் ஒரு நாள் மதியம் ஆசிரியையின் தாய் பள்ளிக்கு வந்து நேரடியாக நாகராஜ் பிரகாஷை அழைத்துக் கண்ணீர் மல்க நன்றி சொன்னதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

பிறகு விசாரித்தபோது, கணவரால் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட அந்த ஆசிரியை வகுப்பறையிலேயே புலம்பியிருக்கிறார். நாகராஜ் பிரகாஷ் நமக்கெதுக்கு வம்பு என இருக்காமல் இரண்டு மூன்று வகுப்புத் தோழர்களோடு (அவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி மகன்) சென்று ஆசிரியையின் கணவரை நேரில் சந்தித்துப் பேச சிக்கலின் தீவிரம் உணர்ந்து கணவர் திருந்தி ஆசிரியையோடு இணைந்து வாழச் சம்மதித்துவிட்டார்.வகுப்பறையில் கேள்விகள் கேட்டுத் துளைக்கும் ஒரு மாணவரே அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முன் உதாரணமாகத் திகழ முடியும் என்பதை எனக்குப் புரிய வைத்த நாகராஜ் பிரகாஷ் இன்று ஒரு வழக்கறிஞர்.

(நிறைவடைந்தது)

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

SCROLL FOR NEXT