இணைப்பிதழ்கள்

இப்படியும் பார்க்கலாம்: கதறல் வலிக்கிறது, பிரியாணி ருசிக்கிறது

ஷங்கர்பாபு

சில வருடங்களுக்கு முன் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட அதிர்ச்சிகள் எனக்கு இரு உண்மைகளை உணர்த்தின.

1) 1950-60களின் திரைப்படங்களில் குதிரை வண்டியில் ஒரு டாக்டர் உபகரணப் பெட்டியுடன் வந்து சிகிச்சை அளிப்பாரே, அந்தக் காலத்திலேயே இன்னும் நான் இருக்கிறேன்!

2) ஒருவர் மருத்துவமனையில் டோக்கனாக உருமாறிய பிறகு இன்றைய விஜயகாந்தை விமர்சிப்பவர்களும் ‘ரமணா’ விஜயகாந்த்துக்குக் கை தட்டுவார்கள்.

கோபித்துக்கொள்ளும் நல்ல மருத்துவர்களிடம் மன்னிப்பு கோரி என் தரப்பை விளக்குகிறேன்.

வேறு யாரிடம் கேட்பது?

சிறுநீரகத்தில் கல் என்று போனோம். காத்திருக்கச் சொன்னார்கள். இரவு 9.30க்கு ஊழியர் “ஸ்கேன் எடுங்க”என்றார்.

10 மணிக்குக்கூட டாக்டரைப் பார்க்க முடியவில்லை. வேறு எங்கோ சிகிச்சை முடித்து வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள்.10.15க்கு ஊழியர் “நாளைக்குக் காலைல ஆபரேஷன். டாக்டர் உங்களை அட்மிட் பண்ணச் சொன்னார்.”

தூக்கி வாரிப்போட்டது. என்னதான் மருத்துவம் முன்னேறியிருந்தாலும், நோயாளியைப் பார்க்காமலேயே அட்மிஷன், ஆபரேஷன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியானால்,நோயாளிக்கு தைரியமூட்டுதல், பண நிலையை விசாரித்தல் போன்ற அடிப்படைச் செயல்கள்?

கொஞ்சம் யோசிக்க...

“நாளைக்கு டாக்டரை விட்டீங்கன்னா, ஒரு வாரம் கழிச்சுதான் பாக்க முடியும்”

வழக்கம் போல் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ முடிவுகள் பத்திரிகைகளில் வரத் தொடங்கிடும். பத்திரிகை, டி.வி.யாளர்களின் பிரசன்னத்தில் வட்ட, மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்த மாணவ/மாணவியர் அனைவரும் எதிர்கால இலட்சியத்தைத் தவறாது சொல்வார்கள்.

“மருத்துவராகி ஏழைகளுக்குச் சேவை செய்யப் போகிறேன்...”

“அவராகி, இவராகி, அப்படியாகி, இப்படியாகி மக்களுக்குச் சேவை செய்யப் போகிறேன்...”

பத்திரிகைகளில் சேவையாளர்கள் வருடந்தோறும் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், சொன்னவர்களில் எத்தனை பேர் தாங்கள் சொன்னபடி நடந்திருக்கிறார்கள்? வெற்றி பெற்ற உணர்வு நிலையில் அந்த இளம் உள்ளங்கள் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்து, இன்று அவர்களை மடக்க முடியாதுதான். ஆனால், இவற்றை அந்தப் புத்திசாலி மாணவர்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?

ரிட்டர்ன் சவாரி கிடைக்காதா?

இத்தனை வருடங்களாக எத்தனையோ பேர் ஏழைகளுக்கு சேவை செய்யத் துடித்தவர்களில் ஒரு சதவீதத்தினரால் கூடவா, அந்த நல்ல நினைப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை? ஊருக்கு இரண்டு பேர் இருந்திருந்தால்கூட, அவரைப் பார்த்து இவர், இவரைப் பார்த்து இன்னொருவர் என்று ஒரு கூட்டமே உருவாகியிருக்குமே!

அதற்காக, பிற துறையினர் எல்லாம் குணக் குன்றில் ஏறி போஸ் கொடுப்பவர்கள் அல்லர்.

ஆட்டோ ஒன்றில் கட்டண அதிர்ச்சி அடைந்தேன். “ரிட்டர்ன் சவாரி கிடைக்காதுங்க... அதான்”. அதன்படி, நான் பயணிக்காத தூரத்திற்கும் கட்டணம் தந்தாக வேண்டும். இறங்கும் இடம் நெருங்கவும் ஒரு யோசனை. “இப்ப எங்க போவீங்க?”

“ஸ்டாண்டுக்குத்தான்” அதாவது, நான் ஏறிய இடம்.

“என்னைத் திரும்பவும் அதே இடத்துல விட்ருங்க.”

“_ _ _ இவ்வளவு ஆகும்...”

“ரிட்டர்ன் சவாரி கிடைக்காததால, அதுக்கும் சேத்துதான பணம் வாங்கறீங்க... அப்புறம் நான் எதுக்கு தனியா கொடுக்கணும்?”

சிறு ரகளை நடந்தது.

வாட்ஸ் அப்பில் வாடுகிறது!

புகழ்பெற்ற கோயில் ஒன்றில் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்தால் மூலவரையே நம்முடன் வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள் என்று நான் நினைப்பதுண்டு.

சில ஓட்டல்களில் விலைக்கும், வழங்கப்படும் உணவிற்கும் உள்ள நியாயம் புரிவதே இல்லை.

இப்படி எல்லாப் பிரிவினரையும் தாக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இதன் பொருள் இவர்கள் எல்லோரும் அநியாயம் செய்கிறவர்கள்; அடுத்தவர் பற்றிக் கவலையில்லாதவர்கள் என்பதல்ல!

ஏனென்றால், தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவின் அலறலைக் கேளுங்கள். அது அதர்மத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. கயமையைக் கண்டு இரண்டு அணு உலை அளவிற்குக் கொதிக்கிறது. வாட்ஸ் அப்பில் வாடுகிறது!

ஆனால் யதார்த்தம் என்ன?ஆட்டின் கதறலுக்காக வருந்துகிறோம். ஆனால் பிரியாணி ருசிக்கிறது என்கிறோம்!

எங்குதான் தப்பு நடக்கிறது?

ஒவ்வொரு உயிரியும் சுகம் காண விரும்புகையில் பூமியின் அதிபராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் மனிதன் இறுதிமூச்சு வரை சந்தோஷம் அடையும் வாய்ப்பை விடுவானா? அவனது சகல முயற்சிகளும் சந்தோஷத்தின் பொருட்டுதான்.

இங்குதான் பிரச்சினை. சந்தோஷத் தேடலில் அவன் எதிர்மறை சந்தோஷத்தைத் தன்னுள் அனுமதித்துவிடுகிறான்.

அது என்ன எதிர்மறை சந்தோஷம்?

“அழுகிய ஆப்பிள் ஒன்றை இளித்தவாயன் ஒருவனிடம் நைசாகத் தள்ளிவிட்டேன்” என்று எந்த வியாபாரியும் எல்லோரிடமும் பெருமையடித்துக்கொள்ள மாட்டார். ஆனால், “ஒரு வெளியூர்க்காரர் விசாரித்த முகவரி பக்கத்துலதான் இருந்தது. நான் நினைச்சிருந்தா கொஞ்சம் சுத்தி வந்து அதிகப் பணம் வாங்கியிருக்கலாம்... ஆனா, அப்படிச் செய்யலை...” என்று ஆட்டோக்காரர் ஒருவர் எல்லோரிடமும் பகிரங்கமாய் சந்தோஷப்பட முடியும்.

வெளியில் சொல்லி மகிழக்கூடியவை -- நேர்மறை சந்தோஷம். முக்காடு போட்டு இரகசியமாய் இருப்பவவை -- எதிர்மறை சந்தோஷம்.

இரண்டு வித சந்தோஷங்களும் உங்கள் முன் இருக்கின்றன. இரண்டும் ஒன்றாகத்தான் உங்களது காலிங் பெல்லை அடிக்கின்றன. எதை அனுமதிக்க வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள். யாவும் உங்கள் சந்தோஷத்தின் பொருட்டே!

நேர்மையை ருசிக்க வேண்டும்

நல்ல சிந்தனைகள் எல்லோரிடமும் தோன்றத்தான் செய்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் அவகாசத்தில் எதிர்மறை சந்தோஷங்களுக்குப் பழகிவிடுகிறோம். பின் அவற்றை இழக்க மனமில்லாமல் அவற்றில் திளைத்துவிடுகிறோம்.

நிச்சயமாகச் சொல்ல முடியும். இன்று லஞ்சம் வாங்கும் எந்த ஊழியரும் லஞ்சம் வாங்காமல் இருக்கிற நேர்மறை சந்தோஷத்தை முதன்முதலில் அனுபவித்திருந்தால் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க மாட்டார். “தரமான உணவைக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன்தான் எல்லா ஓட்டல்காரர்களும் ரிப்பன் கட் செய்கிறார்கள். பழைய உணவைச் சூடு செய்து போடுவதெல்லாம் நாளடைவில்தான். அவர்கள் அந்த சந்தோஷத்துக்குப் பழகிவிட்டார்கள்! இப்படி எல்லாப் பிரிவினரும் அவரவர் வாழ்க்கை சார்ந்து நேர்மறையான சந்தோஷம் அடைய முடியும்.

அவர்கள் வாடிய பயிரைக் கண்டு வாட்ஸ்அப் வார்த்தைகளில் வாட மாட்டார்கள். தண்ணீர் தேடி ஓடியிருப்பார்கள்!

கெட்ட பழக்கத்திற்குத்தான் அடிமை ஆக வேண்டுமா? கொஞ்சம் முயன்றால், நல்ல சந்தோஷங்களுக்கு நாம் அடிமையாக முடியாதா என்ன?

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

SCROLL FOR NEXT