இணைப்பிதழ்கள்

பணித்திறன் பெறுவோம்: வங்கி வேலைக்கு தயாரா?

ஷங்கர்

இந்தியாவின் அரசுத்துறை வங்கிகளைப் பொருத்தவரை, பணியாளர் தேர்வுகள் ஒழுங்கான நடைமுறைகளைப் பின்பற்றி சீரான இடைவெளிகளில் நடப்பவை. தற்போது அனைத்து அரசுத்துறை வங்கிகளுக்கான பணியாளர் தேர்வுகளும் மும்பையில் அமைந்துள்ள இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்ஷன்(ஐபிபிஎஸ்) என்ற ஏஜென்சி நடத்துகிறது. வங்கிகளில் காலி இடங்களைப் பொருத்து ஒவ்வொரு ஆண்டும் ஐபிபிஎஸ் வருடம்தோறும் தேர்வுகளை நடத்துகிறது.

2014-ம் ஆண்டு வரை, வங்கி அதிகாரி மற்றும் கிளர்க் வேலைக்கு ஒரே ஒரு தேர்வு எழுதினால் போதும். இந்த எழுத்துத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்ணில் தேர்வானவர்கள் நேர்காணலில் தேர்வுசெய்யப்படுவார்கள். 2015-ம் ஆண்டிலிருந்து ஆரம்பநிலைத் தேர்வு ஒன்றைக் கூடுதலாக இருதரப்பினருக்கும் சேர்த்துள்ளனர்.

ப்ரோபேஷனரி ஆபிசர்

எல்லாப் பின்னணிகளைச் சேர்ந்த பட்டதாரிகளும் அரசுத்துறை வங்கி அதிகாரி பணிக்குத் தகுதியானவர்கள்தான். அதிகாரிகள் பணிக்கான ஆரம்பநிலைத் தேர்வில் ஒரு மணி நேரத்தில் 100 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஆங்கில மொழி தொடர்பாக 30 கேள்விகளும், குவாண்டிடேட்டிவ் ஆப்டியூட் மற்றும் ரீசனிங் சார்ந்து 35 கேள்விகளும் கேட்கப்படும். இந்தத் தேர்வு முழுக்கவும் ஆன்லைன் மூலமாக நடைபெறும்.

அடுத்து நடைபெறும் பிரதான தேர்வில் இரண்டு மணி நேரத்தில் 200 கேள்விகள் பதிலளிக்க வேண்டும். ரீசனிங் மற்றும் குவாண்டிடேட்டிவ் ஆப்டியூட் சார்ந்து 50 கேள்விகளும், ஆங்கில மொழியறிவு, பொது அறிவு(வங்கித்துறை சார்ந்த) சார்ந்து 40 கேள்விகளும், கணிப்பொறி சார்ந்து 20 கேள்விகளும் கேட்கப்படும்.

ஆபிசர்கள் மற்றும் கிளார்க் என இரண்டு பணிகளுக்குமான தேர்வுகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை தான். ஆனால் ஒன்று, கிளார்க் நிலை தேர்வுகள் அதிகாரிகளுக்கான தேர்வுகளை விட எளிமையானவை. ஒவ்வொரு சரியான பதிலுக்கும், ஒரு மதிப்பெண். ஆனால் தவறான பதிலுக்கு நான்கில் ஒரு பங்கு(கால் மதிப்பெண்) குறைக்கப்படும்.

ஆன்லைன், எழுத்துத் தேர்வுகளுக்கு தயாராக

ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதால் ஐபிபிஎஸ் தேர்வுகள் தகுதி படைத்தவர்களுக்குச் சிறந்த வாய்ப்பாகும். இந்தத் தேர்வெழுத ஒருவர் திட்டமிட்டால், காலியிடங்கள் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஆரம்ப நிலைத் தேர்வு மற்றும் பிரதான தேர்வு இரண்டுக்கும் தனித்தனியான தயாரிப்புகளும் அவசியமில்லை. இரண்டுக்கும் சேர்த்தே தயாராகலாம்.

தர்க்க அறிவு சோதிக்கப்படும்

ரீசனிங்க் சோதனை தேர்வுக்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிர்கள், மூளை விளையாட்டுகள்(ப்ரெய்ன் டீசர்கள்) அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள் தேர்வு எழுதுபவரின் பகுப்பாய்வு மற்றும் தர்க்கத்திறன்களைச் சோதிப்பதற்கானவை. உதாரணமாக, ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்த படம் எப்படியிருக்கும் என்றோ அல்லது பொருத்தமான அடுத்த படம் எதுவென்றோ நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். கேள்விகள் கேட்கப்படும் முறையை(பேட்டர்னை) புரிந்துகொண்டு அதன்பின்னர் நிறைய பயிற்சிக் கேள்விகளுக்குப் பதிலளித்து பழகவேண்டும்.

சரளமாக ஆங்கிலம் அறிதல்

குழப்பப்பட்ட வாக்கியங்களை ஒழுங்குபடுத்துதல், கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பத்தியிலிருந்து சரியான விடைகளைத் தேர்வு செய்வது, ஆங்கில வாக்கியங்களில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பது, காலியிடத்தில் சரியான வார்த்தையை நிரப்புவது ஆகியவை இப்பிரிவில் இருக்கும். இப்பிரிவைப் பொருத்தவரை ஆங்கில மொழியின் அடிப்படை இலக்கணம், வாக்கிய அமைப்பு, வார்த்தைவளம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில் திறமை பெற்றவராக இருத்தல் வேண்டும். ஆங்கில செய்தித்தாள்கள், பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசித்து ஆங்கிலத்தில் சரளமாக வேண்டும். அத்துடன் இப்பிரிவில் கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்பை வைத்துக்கொண்டு பயிற்சி செய்வதும் அவசியம்.

கணக்கில் குட்டிப் புலி

கணிதத்தில் நல்ல புலமை உள்ளவர்கள் இந்தப் பிரிவில் எளிதாக தேறிவிடுவார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை படித்த கணிதம் போதும். பெரும்பாலான கேள்விகள் அரித்மெடிக், ஜியாமட்ரி சார்ந்து கேட்கப்படும். போட்மாஸ்(BODMAS) விதி, மற்றும் விகிதங்கள், பின்னங்கள், நேரம் - வேகம், தலைகீழ் விகிதம் சார்ந்த சூத்திரங்களைப் பற்றிய அறிவு இருத்தல் அவசியம். தொடர்ந்த தீவிரமான பயிற்சியின் மூலம் நிறைய மதிப்பெண்கள் எடுக்கமுடியும்.

சுற்றும் முற்றும்

இந்தியப் பொருளாதாரம், இந்திய வங்கித்துறை, நிதி அமைப்பு, கார்ப்பரேட் நடைமுறைகள், ஜன் தான் யோஜ்னா போன்ற அரசுத் திட்டங்கள் பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். இந்தப் பிரிவில் எளிமையாகத் தேர்வுபெற அன்றாடச் செய்திகளை சிறப்பாகத் தரும் பத்திரிகை மற்றும் செய்தித்தாள்களை தொடர்ந்து படிப்பது அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட இயர்புக்குகளையும் வாங்கிப் படித்தல் அவசியம்.

கணினி அறிவு

இன்றைய வங்கித்துறை, கணிப்பொறிகளையும் தகவல் தொழில்நுட்பத்தையும் மட்டுமே நம்பியுள்ளது. வங்கித்துறையில் பணியாற்ற விரும்பும் யாரும் கணிப்பொறி சார்ந்த அடிப்படைகளைக் கற்றிருப்பது அவசியம். ஹார்ட்வேர், சாப்ட்வேர் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், வேர்ட் ப்ராசஸிங், எக்சல், பவர்பாய்ண்ட், இன்டர்நெட்(மின்னஞ்சல்,ப்ளாக்குகள், வெப்சைட்), வைரஸ்கள், தகவல் பாதுகாப்பு, இ-காமர்ஸ் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்திருந்தால் கணிப்பொறிப் பிரிவு கேள்விகளில் நல்ல மதிப்பெண்களை எடுக்கலாம்.

வேகமும் துல்லியமும் தேவை

ஐபிபிஎஸ் தேர்வில், வேகமும் துல்லியமும் அவசியமானது. தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் பாடங்கள் மற்றும் துறைகள் சார்ந்து நல்ல புரிதல் அவசியம். வேகமாகப் பதிலளிப்பதற்கு தொடர்ந்த பயிற்சி அவசியம். வேகத்திறனை அதிகரிக்க அவ்வப்போது பரிசோதனை செய்து பார்த்தல் அவசியம். இதற்கான மாதிரி புத்தகங்கள் கடைகளில் கிடைக்கிறது. முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் போட்டித்தேர்வு சார்ந்த பத்திரிகைகளில் வெளியாகும். அதையும் எடுத்து பயிற்சி செய்தல் அவசியம். ஐபிபிஎஸ் இணையதளத்திலும் மாதிரித் தேர்வுக்கான இணைப்பு உள்ளது.

நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?

நேர்காணலைப் பொருத்தவரை, விரிவாக இருக்கும். வங்கித்துறையின் நிலை, பொருளாதாரம், அன்றாட நிகழ்வுகள், தலைப்புச் செய்திகளான சம்பவங்கள், கல்விப் பின்னணி, குடும்பப் பின்னணி, முந்தைய தற்போதைய வேலை, வங்கி வேலையைத் தேர்வு செய்வதற்கான காரணங்கள் வரை கேட்கப்படும். வேலை சார்ந்து என்னென்ன எதிர்பார்ப்புகள்? உங்களுடைய பலங்கள் பலவீனங்கள் எவை? நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கத் தயாரா? போன்ற கேள்விகள் கேட்கப்படும். வங்கி வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நேர்காணல் குழுவினரிடம் நிரூபித்தல் அவசியம்.

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், சமீபத்தில் கொள்கை முடிவாக கிளார்க் நிலை ஊழியர்களுக்கு நேர்காணல் இல்லையென்றும், எழுத்துத் தேர்வுகளே பணிக்கு எடுப்பதற்குப் போதுமானது என்றும் அறிவித்துள்ளது. அதிகாரிகளைப் பொருத்தவரை நேர்காணல் முறை தொடர்கிறது.

SCROLL FOR NEXT