இணைப்பிதழ்கள்

வழிகாட்டி: இந்திய பல் மருத்துவ கவுன்சில்

டி. கார்த்திக்

பல் மருத்துவத்துக்கெனத் தனியாக பி.டி.எஸ். கல்லூரிகள் இருப்பது போல, அவற்றை ஒழுங்குபடுத்தத் தனியாக அமைப்பும் உள்ளது. அது, அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் (டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா). எம்.பி.பி.எஸ்., எம்.டி. மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகளை வழங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் போன்றதுதான் இந்த அமைப்பு.

பல் மருத்துவக் கல்வியையும் பல் மருத்துவத் தொழிலையும் ஒழுங்குபடுத்துவதற்காகத் தொடங்கப்பட்டதே பல் மருத்துவ கவுன்சில். இந்த அமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இந்த அமைப்பு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1948-ம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்தக் கவுன்சிலுக்கான திருத்தச் சட்டம் 1992-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி புதிய பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பது, ஏற்கெனவே உள்ள பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல் மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிப்பது ஆகியவற்றைப் பல் மருத்துவ கவுன்சில் செய்து வருகிறது.

பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சீரான பல மருத்துவப் பாடத் திட்டங்கள், பல் மருத்துவப் படிப்புப் பயிற்சியின் போது பல் மருத்துவர்கள், பல் சுகாதாரம், பல் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவது, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, பல மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தித் தரத்தை உறுதி செய்வது, பல் மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.

இந்த அமைப்புக்கென http://www.dciindia.org/index.aspx என்ற இணையதளம் உள்ளது. இதில் முக்கியமான அறிவிப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலத்தில் எத்தனை அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கல்லூரிகளின் அங்கீகார நிலை, எத்தனை இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளன போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலின் தர வரிசைப் பட்டியலுக்கு உட்படுத்தப்பட்ட கல்லூரிகள், வழங்கப்பட்ட கிரேடு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பல் மருத்துவம் தொடர்பான இதர தகவல்கள், விதிமுறைகள் இணையத்தில் உள்ளன.

தமிழகத்தில் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் இந்த அமைப்பின் அங்கீகாரங்கள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்வது மாணவர்களுக்கு நல்லது.

SCROLL FOR NEXT