இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - ஆதாருக்கு அங்கீகாரம்

மிது கார்த்தி

ஆதார் அட்டைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிப்ரவரி 29-ல் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஜேட்லி பேசும்போது, “ஆதார் திட்டத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் நேரடியாகச் சென்றடையும். அதாவது, அரசு வழங்கும் பயன்கள், மானியங்கள், சேவைகள் அனைத்தும் ஆதார் அட்டையின் மூலமே மேற்கொள்ளப்படும். நாட்டில் இதுவரை 98 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் ஈர்ப்பு அலை ஆய்வு

ஈர்ப்பு அலைகளை ஆராய இந்தியாவில் லிகோ மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 29-ல் அறிவித்தார். மாதந்தோறும் வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடும் அவர், “ஈர்ப்பு அலைகள் பற்றி தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியாவில் லிகோ (Laser Interferometer Gravitational - Wave Observatory (LIGO) மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈர்ப்பு அலைகள் ஆராய்ச்சியில் இந்தியாவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். ஈர்ப்பு அலைகளை அமெரிக்காவின் லிகோ ஆய்வு மையம் கண்டுபிடித்தது. அமெரிக்காவில் ஏற்கெனவே 2 இடங்களில் லிகோ மையம் உள்ளது. அதேபோன்ற நவீன லிகோ ஆய்வு மையம் இந்தியாவில் ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

பி.ஏ.சங்மா மறைவு

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா 68 வயதில் மாரடைப்பால் மார்ச் 4 அன்று காலமானார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். சங்மா, காங்கிரஸ் கட்சி சார்பில் மேகாலயாவில் 1988 - 90 வரை முதல்வராகப் பதவி வகித்தவர்.

மக்களவைக்கு 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991-96 வரை நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர்களில் ஒருவர். மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது மக்களவை சபாநாயகராக 1996-98 வரை இருந்தார். 2012-ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.

ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிப்பு

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளம், அஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை மார்ச் 4 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி டெல்லியில் அறிவித்தார். தமிழகம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16 அன்று தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி மே 5-ம் தேதி வரை ஆறு கட்டங்களாகவும், அஸாமில் ஏப்ரல் 4, ஏப்ரல் 11 என இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவித்தார்.

SCROLL FOR NEXT