நமது அன்றாட வாழ்க்கை இயல்பான பல சலனங்களைக் கொண்டது. இதில் பல விஷயங்கள் மாறாமல் இருக்கும். பல அம்சங்கள் பழகிப்போயிருக்கும். யோசிக்காமலேயே செய்துவிடக்கூடிய செயல்கள் அதில் பல இருக்கும். இது ஒரு வகையில் வசதியானது. வழக்கமான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள மெனக்கெட வேண்டியதில்லை. அதே சமயத்தில் இது நம்மைச் சிக்கவைக்கும் ஒரு பொறி. நம்மைப் பல விஷயங்களைக் கவனிக்கவிடாமல் செய்யும் கண்கட்டு வித்தை.
இப்படிக் கவனிக்காமல் போய்விடும் ஏதேனும் ஒரு விஷயம் திடீரென்று நமக்கு தரிசனமாகும். அது தரும் வியப்பு அல்லது அதிர்ச்சி நம்மை உலுக்கி எடுத்துவிடும். அதை ஒட்டிப் பல விதமான தீர்மானங்கள் மனதில் எழும். இந்தத் தீர்மானங்கள் எவ்வளவு வலுவானவை? அவற்றின் நிலை என்ன?
மாலை நேரம். ஜான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறான். மெதுவாக நடந்து வருகிறான். அன்றாட வாழ்க்கையில் சந்தேகத்துக்கோ ஆச்சரியங்களுக்கோ இடமில்லை. எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. எனவே பரபரப்பில்லாமல், மெதுவாக நடந்து வருகிறான்.
அவனுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது அவன் மனைவி கேட்டி வாசலில் புன்னகையுடன் வரவேற்பாள். அலுவலகக் களைப்பையெல்லாம் போக்கக்கூடிய கதகதப்பு அந்தப் புன்னகையில் இருக்கும். சாப்பிட ஏதாவது கொடுப்பாள். பிறகு காபி அல்லது ஏதேனும் பானம். மாலைப் பத்திரிகைகள், சின்னச் சின்ன உரையாடல்கள். ஏழு மணிக்குப் பிறகு அளவான உணவு. அன்பான பேச்சு.
அதன் பிறகு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தால் அந்தக் குடியிருப்பின் சலனங்கள் இருவரையும் ஈர்த்துக்கொள்ளும். ஏதோ ஒரு வீட்டிலிருந்து வரும் புல்லாங்குழல் இசை, கீழே சிலர் விளையாடிக்கொண்டிருக்கும் ஓசைகள், சாலையில் செல்லும் வாகனங்கள்…
சரியாக மணி எட்டே கால் ஆனதும் ஜான் எழுந்துகொள்வான். தொப்பியை அணிந்துகொள்வான். ஒரு குச்சியை எடுத்துக்கொள்வான். “எங்கே போகிறாய்?” என்று கேட்டி கேட்பாள். “நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்புவான்.
ஜான் வீடு திரும்பும்போது மணி பத்தோ பதினொன்றோ ஆகியிருக்கும். கேட்டி சில சமயம் தூங்கிவிட்டிருப்பாள். சில சமயம் விழித்திருப்பாள். சமையலறைக்குச் சென்று பார்த்தால் சாப்பிட ஏதாவது ஒன்று தயாராக இருக்கும். சாப்பிட்டு வந்து படுத்துக்கொள்வான்.
இவை அனைத்தும் ஒரு நாளும் மாறாமல் நடக்கும். இன்று அதில் பிசிறு தட்டிவிட்டது. ஜான் வீட்டை அடைந்ததும் அவனை வரவேற்கப் புன்னகையுடன் நிற்கும் மனைவி இல்லை. சற்றே பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவனை எதிர்கொண்டது ஒரு கடிதம்.
“என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று தந்தி வந்தது. நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். எப்போது வருவேன் என்று தெரியாது. ஐஸ் பெட்டியில் ஆட்டிறைச்சி உள்ளது. பால்காரருக்கு 50 செண்ட் கொடுத்துவிடு. கேஸ் நிறுவனத்துக்கு மறக்காமல் போன் செய்து புகாரைப் பதிவுசெய்துவிடு. இங்குள்ள நிலவரத்தை நாளைக்குச் சொல்கிறேன். - அவசரத்துடன் - கேட்டி.”
திருமணமான இந்த இரண்டு ஆண்டுகளில் ஜான் ஒரு நாளும் தனியாக இருந்ததில்லை. இன்றும், இன்னும் சில நாட்களும் தான் தனியாக இருக்கப்போகிறோம் என்னும் எண்ணமே அவனுக்கு வலியைத் தந்தது.
வீட்டுக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். வீடு அலங்கோலமாகக் கிடந்தது. பாட்டிலில் தண்ணீர் இல்லை. செய்தித்தாள்கள் அடுக்கிவைக்கப்பட வில்லை. துணிமணிகள் கலைந்து கிடந்தன. தரை அசுத்தமாக இருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் போட்டது போட்டபடி இருந்தன. எதுவும் இயல்பாக இல்லை.
வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். கேட்டியின் துணிமணிகளை எடுத்துவைக்கும்போது அவனுக்குள் அதிர்வலைகள் பரவின. கேட்டி இல்லாத ஒரு நாளை அவன் கற்பனைகூடச் செய்து பார்த்ததில்லை. மனதில் துக்கம் பொங்கியது. பழக்கமே இல்லாத அந்தச் சூழலை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஜான் ஐஸ் பெட்டியிலிருந்து இறைச்சியை எடுத்துக்கொண்டான். காபி தயாரித்துக்கொண்டான். தனியாகச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால் சாப்பிடவே பிடிக்கவில்லை.
அலங்கோலமாக இருக்கும் வீட்டைப் பார்க்கப் பார்க்கத் தாங்க முடியவில்லை. தனிமை அவனை வாட்டியது. எதையும் செய்வதற்கான மனநிலை இல்லை. தனது உணர்வுகளைப் பற்றியெல்லாம் இதுவரை அவன் அலசியதே இல்லை. தனது மகிழ்ச்சிக்கு கேட்டி இன்றியமையாதவள் என்பது தெளிவாகப் புரிந்தது.
அப்படிப்பட்ட கேட்டியைத் தான் எப்படி நடத்திவருகிறோம் என்பது அவனுக்குத் திடீரென்று உறைக்க ஆரம்பித்தது. “நான் அவளைக் கண்டுகொள்வதே இல்லை. தினமும் வெளியே போய் விளையாடுகிறேன். நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கிறேன். பாவம், அவள் வீட்டில் தனியாக இருப்பாள். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன். அவளை வெளியே அழைத்துக்கொண்டு போவேன். அவளை மகிழ்ச்சி அடையச்செய்வேன்…” ஜான் தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டான்.
வெளியிலிருந்து வரும் ஓசைகள் அவனைக் கவரவில்லை. அவன் நினைத்தால் வெளியில் சென்று காலாற நடக்கலாம். நண்பர்களைப் பார்த்துவிட்டு வரலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால், எதுவுமே பிடிக்கவில்லை. நாற்காலியின் மீது கேட்டியின் கவுன் இருந்தது. அழகான அந்த உடை கேட்டியின் நினைவை மேலும் கிளறிவிட்டது. ஜானின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தன. அவள் திரும்பி வரும்போது எல்லாமே மாறியிருக்கும். இதுவரை அவளை அலட்சியப்படுத்தியதற்கெல்லாம் நான் பிராயச்சித்தம் செய்வேன். அவள் இல்லாமல் எனக்கு ஏது வாழ்வு…
அப்போது வாசல் கதவு திறந்தது. கேட்டி உள்ளே வந்தாள். ஜான் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“அம்மாவுக்கு உடம்பு பரவாயில்லை. தந்தி அனுப்பியதுமே நிலைமை சரியாகிவிட்டதாம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். நான் அடுத்த ரயிலைப் பிடித்து வந்துவிட்டேன்” என்று சொல்லியபடி சமையலறைக்குள் சென்றாள்.
வீடு மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அன்றாட வாழ்க்கை என்னும் சக்கரம் சீரான ஓசையுடன், தங்கு தடையில்லாமல் தன் வழக்கமான ஓட்டத்தைத் தொடர்ந்தது.
ஜான் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 8.15. தன்னுடைய தொப்பியை எடுத்துக்கொண்டான். பில்லியர்ட்ஸ் குச்சியை எடுத்துக்கொண்டான். வாசலை நோக்கி நடந்தான்.
“எங்கே போகிறாய்?” என்றாள் கேட்டி.
“விளையாடிவிட்டு வருகிறேன்” என்றான் ஜான்.
ஓ. ஹென்றி என்னும் அமெரிக்க எழுத்தாளர் (1862-1910) எழுதிய ‘The Pendulum’ இந்தக் கதை இது. அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும்போது பல விஷயங்களைத் தவறவிடுகிறோம். நம்மைச் சுற்றிலும் பல விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பதே நமக்குத் தெரிவதில்லை. நம்முடன் இருப்பவர்களைப் பற்றி, நம் வாழ்க்கைக்கு அவர்கள் ஆற்றும் பங்கைப் பற்றி நாம் அறிவதே இல்லை.
அன்றாட வாழ்க்கை என்னும் பல் சக்கரம் சற்றே தடைப்பட்டுப்போகும்போதுதான் நமக்குச் சில விஷயங்கள் கண்ணிலேயே படுகின்றன. சில விஷயங்கள் உறைக்க ஆரம்பிக்கின்றன. அன்றாட வாழ்வில் நாம் அனுபவித்துவரும் வசதிகள், ஆசுவாசம் ஆகியவற்றின் அருமை அப்போதுதான் நமக்குப் புரிகிறது. அதற்குக் காரணமானவர்களைப் பற்றி யோசிக்கிறோம். இத்தனை நாளாக அவர்களைப் பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டோமே என்பதையும் யோசிக்கிறோம். உறவின் அருமையை உணராமல்போனதற்காக வருத்தமும் ஏற்படுகிறது.
ஜானுக்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவம் நமக்கும் ஏற்பட்டிருக்கும். அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காமல் கடந்துபோகும் அம்சங்கள், மனிதர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும். குற்ற உணர்வும் ஏற்பட்டிருக்கும். குற்ற உணர்ச்சி சில உறுதிப்பாடுகளை ஏற்படுத்தக்கூடியது. சில பிராயச்சித்தங்களைச் செய்ய நம்மைத் தூண்டக்கூடியது. இனிமேல் என் வாழ்க்கை இப்படி இருக்காது என்று சில சபதங்களைச் செய்வோம். ஜான் செய்ததைப் போல.
ஆனால் அதன் பிறகு நம் வாழ்க்கை மாறிவிடுமா? நமது கவனமும் சக மனிதர்கள் மீதான அக்கறையும் கூடிவிடுமா?
இங்குதான் ஓ. ஹென்றி மனித உளவியலின் நுட்பத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இயல்பு வாழ்க்கை திரும்பியதும் மனித மனம் மீண்டும் பழகிய பாதைக்குச் சென்றுவிடுகிறது. பழக்கம் தரும் அந்த வசதியை மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்துவிடுகிறது.
ஜானுக்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவம் நம்மில் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது? யோசித்துப் பார்க்கலாமே.