பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா ஜனவரி 24 அன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு கடந்த 2014-ம் ஆண்டு கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்.
3 ஆண்டுகால வரம்பு கொண்ட கட்சித் தலைமைப் பதவியை ஓராண்டில் ராஜ்நாத் சிங் ராஜினாமா செய்ததால் மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு அமித் ஷா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் முடிவுற்றதால், தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு அமித் ஷா மட்டுமே மனு தாக்கல் செய்ததால் அவர் வெற்றி பெற்றார். அவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.
வீர தீர விருது
சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் உள்பட 4 பேருக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா ஜனவரி 26 அன்று வழங்கினார். தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் குடியரசு தின விழா நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா, வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்குப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய சென்னை கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் எம்.எஸ்.பாஸ்கர், ச.முகமது யூனுஸ், கடலில் சிக்கி போராடியவரைக் காப்பாற்றிய நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாசன், நாகையில் கடல் அலையில் சிக்கிய 3 பேரைக் காப்பாற்றிய சிறுவன் ரிஷி ஆகியோருக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் இவர்களுக்கு வழங்கினார்.
கிரிக்கெட்: மீண்டும் முதலிடம்
நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஜனவரி 28 அன்று முதலிடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததால் இந்திய அணி தானாக முதலிடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்திய அணி 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்ளூர் தொடரை 3-0 கைப்பற்றியதால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தது.
சாம்பியன் ஜோடி
மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி ஜனவரி 29 அன்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடியை எதிர்த்து செக் குடியரசின் அன்ட்ரியா, லூஸி ஹெரடெக்கா ஜோடி விளையாடியது. இதில் சானியா ஜோடி 7-6 (1), 6-3 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சானியா-ஹிங்கிஸ் ஜோடி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 3-வது முறையாகப் பட்டம் வென்று அசத்தியுள்ளது. கடந்த ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்க ஓபனிலும் இந்த ஜோடி பட்டம் வென்றது. சானியா-ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக 36 வெற்றிகளையும் குவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி முதல் பட்டியல்
முதல் கட்டமாக அமைக்கப்படவுள்ள 20 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலை மத்திய அரசு ஜனவரி 28 அன்று வெளியிட்டது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இந்தப் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, கொச்சி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, பெல்காம், டெல்லி உள்பட 20 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. முதல் கட்டமாக இந்நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக ஆக்கப்படவுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
தொகுப்பு: மிது கார்த்தி