இணைப்பிதழ்கள்

நேர்காணல்: வெற்றி நிச்சயம்

செய்திப்பிரிவு

வங்கித் தேர்வுகளுக்கான போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கான பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சியளிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிவரும் நிறுவனமாக RACE என்று அழைக்கப்படும் ‘போட்டித் தேர்வுகளுக்கான அகாடமி’ உருவாகிவருகிறது.

சென்னையின் பரபரப்பான மையங்களில் ஒன்றான தியாகராய நகர் பஸ் நிலையத்துக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் அது இயங்குகிறது. ஒரு வார இறுதிநாளின் காலை நேரத்தில் தேனடையைத் தேனீக்கள் மொய்த்திருப்பதைப் போல மாணவர்கள் அங்கே குவிந்திருந் தார்கள். வட்ட வட்டமான மேஜைகளில் பல குழுக்களாக அமர்ந்து அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எளிமையான தனது அறையில் தங்களது குறுகிய கால வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் பரத் சீமான்.

பயிற்சிகளுக்கு வருபவர்களில் பெண்கள் அதிகம் என்கிறார் அவர். அதிலும் கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கும் பெண்களும் பணிக்குச் செல்லும் பெண்களும் அதிகம் என்கிறார். இந்தப் பயிற்சிகளில் அதிகம் தேர்ச்சி பெற்று அரசு வேலைகளுக்கான பணி நியமனங்கள் பெறுவதிலும் பெண்கள்தான் அதிகம் என்றும் அவர் கூறுகிறார். கிராமப்புறங்களிலிருந்து அதிகம் பேர் வருகிறார்கள் என்பது உண்மை என்றாலும் நகர்ப்புறங்களிலிருந்தும் கணிசமானவர்கள் வருகிறார்கள். பல்வேறு ஐ.டி தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் அந்த வேலையைச் செய்துகொண்டே அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுகிறார்கள்.

முதலில் இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கான ஒரு இணையதளத்தை பரத் ஆரம்பித் துள்ளார். பிறகு இந்திய அளவில் இத்தகைய பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வுசெய்துள்ளார். மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்ட வகையில் மாணவர்களின் தேவைகளுக்குப் பொருந்தும் விதமான ஒரு அணுகுமுறையை அவர் முன்னிறுத்துவதாகச் சொல்கிறார். இங்கே படித்து முடித்து அரசுத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களே ‘Mentor (வழிகாட்டிகள்)’ என்ற பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். இரவு நேரத்தில்தான் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில் இருப்பவர்களுக்காக இரவிலும் நிறுவனம் இயங்குகிறது. இதனால் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் உரிமையோடு புழங்குவதுபோல மாணவர்கள் உணர்கின்றனர்.

ஆனாலும் ஒரு பள்ளியைப் போலக் கட்டுப்பாடு மிக்க முறையில் பயிற்சிகள் நடத்தப்படு கின்றன என்கிறார் அவர். 45 நாட்களுக்கான பயிற்சி என்று அறிவிக்கப்பட்டாலும் அரசு வேலைக்கான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சிபெறும்வரை மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அரசு நடத்துகிற தேர்வுகளைப் போல உண்மையான தேர்வுகள் அவரவர்களின் நேரத்துக்கு ஏற்பத் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அவற்றில் அவர்கள் தேர்ச்சிபெறும்வரை அவர்கள் பங்குபெறத் தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதேபோல நிறுவனங்கள் நடத்துகிற நேர்காணல்களில் பங்கேற்பதற்கான திறமையை மாணவர்கள் பெறுவதற்கு நிஜமான நேர்காணல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அவற்றில் மாணவர்களின் செயல்பாடு மதிப்பிடப்பட்டு மேலும் பயிற்சியளிக்கப்படுகிறது.

மாணவர்களின் தேவையைக் கணக்கில் கொண்டு நான்காயிரம் சதுர அடியில் பெரிய நூலகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்தத் தேர்வுகளைச் சந்திப்பதற்குத் தேவையான பாடத்திட்டத்தை அனுபவமிக்க ஆசிரியர்கள் தயாரித்துள்ளனர். பாடத்திட்டத்தாலும் நடைமுறைப் பயிற்சிகளாலும் ஒரு பெரும் நம்பிக்கை இங்கே பயிற்சி எடுத்துக்கொள்பவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. தாங்கள் பயிற்சி எடுத்த பிறகு தங்களின் உறவினர்கள், நண்பர்களைக் கொண்டுவந்து சேர்க்கிற போக்கும் அதிகரித்துள்ளது என்கிறார் அவர்.

இதுவரையிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுத்துள்ளனர். 2015-ல் 419 பேருக்கு ஸ்டேட் பாங்க் அதிகாரிகள் பணிகளும் மற்றப் பொதுத்துறை வங்கிகளில் 2,647 பேருக்கு அதிகாரிகள் பணிகளும் இங்கே பயின்றோருக்குக் கிடைத்துள்ளன. தங்களின் மாணவர்களுக்கும் இத்தகைய பயிற்சியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கல்லூரிகளும் தற்போது எங்களை அணுகுகின்றனர். RACE- ன் வெற்றிப் பயணம் தொடர்கிறது என்கிறார் பரத்.

SCROLL FOR NEXT