கல்வியில் ஊக்கம் என்பது தேர்ச்சி அடைவதற்கான வழியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் செயல்பாடு சமூகத்துக்கான பங்களிப்பை நோக்கி அவர்களைத் திருப்பவில்லை என்றால் அந்தக் கல்வி ஊக்கத்தால் என்ன பயன்?
- அன்னை தெரசா (நோபல் பரிசை ஏற்றுக் கொள்ளும்போது பேசிய உரை)
பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தை ‘கொடுப்பதில் மகிழும் வாரம்’ என கடைப்பிடிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. ‘தான் உத்சவ்’ ஆக (தானம் தரும் விழா) என்று இது மத்திய அரசுப் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த ஒரு வார காலத்தில் பள்ளியில் தன்னிடம் உள்ளதை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் சேர்ந்து வாழ்வதன் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துவதே இதன் நோக்கம்.
துன்பப்படுபவர்களைப் பார்த்துப் பதறும் மனநிலையைக் குழந்தைகள் இயல்பாகவே பெற்றவர்கள் என்பதை எனக்குக் காட்டியவர் எட்டாம் வகுப்பு மாணவியான ஜனனி.
கொடுப்பதில் மகிழும் வாரம்
நீ எந்த வகுப்பு படிக்கிறாய்? என்ன ரேங்க்? - குழந்தைகளிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான். ஒரு குழந்தைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் அறிவுரையின் முதல் வரி என்ன? “நல்லா… படிக்கணும் பாப்பா”, “கிளாஸ்லயே ஃபர்ஸ்ட் வரணும்”, ‘‘என்னாது 99-தானா? அடுத்த பரீட்சையில 100-க்கு 100 வரலனா என்கிட்ட பேசாத” என மிரட்டும் அம்மாக்களும், ‘‘அந்தப் பையன் வாங்கும்போது உன்னால முடியாதா” எனக் கொதிக்கும் அப்பாக்களும் இன்றைய சோகம்.
இந்த கட் ஆப் மதிப்பெண் கலாச்சாரத்தில் ‘கொடுப்பதில் மகிழும் வாரம்’ என்பதற்கு என்ன மதிப்பைக் குழந்தைகள் வழங்க முடியும்? பள்ளியில் நடக்கும் எத்தனையோ சடங்கு சம்பிரதாயங்களில் ஒன்றாக அதுவும் கரைந்து கடந்துவிடுவதே வழக்கம். ஆனாலும், இத்தகைய சூழலிலும் ஜனனி போன்றவர்கள் தங்களின் இயல்பை விட்டுவிடுவதில்லை.
மெக்கார்த்தேவின் கொடை
‘கொடுப்பதில் மகிழ்ச்சி’ என்பது 2009- ல் இந்தியாவில் ஒரு வகையான பெருநிறுவனங்களின் செயல்பாடாகவே கொண்டுவரப்பட்டது. உலக அளவில் இப்போது பல ‘வாரங்களும்’ ‘தினங்களும்’ வர்த்தகமயமாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அம்மாக்கள் தினம், அப்பாக்கள் தினம் எனத் தொடங்கும் இந்தப் பட்டியலில், நண்பர்கள் தினமும் காதலர் தினமும் சடங்குகள்போலச் சேர்ந்துவிட்டன.
வானொலி முதல் தொலைக்காட்சி வரையிலும் இவற்றுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. இந்த தினங்களில் ‘சந்தையில் கிடைப்பதை வாங்குங்கள். பிறரோடு பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்றுதான் ஆரம்பத்தில் சொன்னார்கள். ஆனால், அதைவிடவும் பல படிநிலைகள் மேலானதாக, ‘கொடுக்கும் வாரம்’ மாறியதற்கும் கல்வியின் அங்கமாக அது மாறியதற்கும் அமெரிக்கக் கருப்பினப் பெண்மணியான ஓசெலா மெக்கார்த்தே (1908 1999) தான் முக்கிய காரணம்.
மெக்கார்த்தே தொடக்கப் பள்ளி அளவிலேயே பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் கைவிட்டவர். நோய்வாய்ப்பட்ட தன் சித்திக்காகத் துணி துவைக்கும் வேலையை ஏற்றுக்கொண்டவர். 75 வருடங்களாக ஊர் மக்களின் துணிகளைத் துவைப்பதும் அவற்றுக்கு இஸ்திரி போடுவதும்தான் வாழ்க்கை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்குக் கிடைத்த கூலியை எல்லாம் சேர்த்துச் சேர்த்து வைத்தார் மெக்கார்த்தே.
அவர் 1995- ம் ஆண்டு உலகத்துக்குப் பேரதிர்ச்சி அளித்தார். அமெரிக்காவின் தி சதர்ன் மிஸ் பல்கலைக் கழகத்துக்கு தன் வாழ்நாள் உழைப்பில் சேகரித்த 1 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை (சுமார் ஒரு கோடி ரூபாய்) அளித்தார். அதை வைத்துக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் ஒரு அமைப்பை ஏற்படுத்துமாறு வேண்டினார். பள்ளியிலிருந்து பாதியில் நிறுத்தப்பட்டு வேலைக்குக் கட்டாயமாக அனுப்பப்பட்டுவிடாமல் குழந்தைகளைப் பாதுகாப்பது அவர் நோக்கம். கருப்பினக் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். Joy of Giving (கொடுப்பதில் மகிழ்ச்சி) என்பது அவரது வாசகமே.
கொடை மரமும் உண்டியல்களும்
அவரது இந்தக் கொடைக்குப் பிறகுதான் ‘கொடுப்பதில் மகிழ்ச்சி’ எனும் இந்த வாரத்தையை இன்று உலகம் அனுசரிக்கிறது. தேவைக்கு அதிகமாக உள்ள உடைகளைப் பெற்று இல்லாதவர்களுக்கு அளிப்பது, ஏழு நாளும் தினமும் ஒரு பரிசு என பல விதமாக இதைச் செயல்படுத்துகிறார்கள். ஆனால், குழந்தைகளே அதை முடிவு செய்யும்போதுதான் அதன் சிறப்பு மேம்படும் என எனக்குக் காட்டியவர் ஜனனி.
எங்கள் பள்ளியில் இந்த ‘கொடுப்பதில் மகிழ்ச்சி’ வாரத்தை அனுசரிக்க வித்தியாசமான யோசனைகள் இருந்தால் செய்யலாம் என அறிவித்தோம். அதனால் பள்ளியில் ஒரு மரத்தை ‘கொடை மரம்’ எனச் சில மாணவர்கள் தேர்வு செய்தனர். ‘யாருக்கு என்ன தேவையோ அதை ஒரு காகிதத்தில் எழுதிக் கட்டித் தொங்க விடுங்கள்’ என்றும் அறிவித்தார்கள். பலரும் பேனா, பென்சில் என்று தொடங்கி ஜியோமெட்ரிக் பாக்ஸ் வரை எழுதினார்கள். மறுநாள் அதே மரத்தில் அவை தொங்கின.
இதில் ஜனனி செய்ததுதான் பெரிய அதிசயம்.
எங்கள் பள்ளியின் துப்புரவுப் பணியாளர் மங்கை. அவர் கடுமையான ரத்த சோகையாலும் காச நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை தாம்பரத்துக்கோ ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாதுக்கோ அனுப்பிதான் சிகிச்சையளிக்க வேண்டும் என உள்ளூர் அரசு மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். இதைத் தெரிந்துகொண்ட ஜனனி தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியில் ஏழெட்டு இடங்களில் உண்டியல் வைத்தார். பள்ளியில் மாணவர்கள் தங்களால் முடிந்ததை வழங்கினார்கள். ‘கொடுப்பதில் மகிழ்ச்சி’ வாரத்தின் கடைசி நாள். உண்டியல்களை எல்லோருடைய முன்னிலையிலும் உடைத்து ஆயாம்மா மங்கையின் சிகிச்சைக்கான பணத்தை அந்தப் பள்ளியையே அவர் கொடுக்க வைத்தார். மகிழ்ச்சிக்குப் புதிய இலக்கணம் கண்டார் ஜனனி.
நாங்கள் அளித்த அந்தச் சின்னத் தொகையில்கூட மங்கை சிகிச்சை பெற்றார். அன்று பள்ளியில் அவர் கண்கலங்கிப் புதிய நம்பிக்கை பெற்றார். குழந்தைகள் பெற்ற அன்றைய அனுபவத்தைப் பாடப் புத்தகங்களால் சொல்லித்தர முடியாது.
தூய்மைப் பணியாளரின் துயரத்தைப் பகிர்ந்துகொண்ட ஜனனி தற்போது திண்டிவனத்தில் அரசு சுகாதார மையத்தின் செவிலியராகச் சேவையாற்றிவருகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com