எனது நண்பர் நடராஜன் “என்னால் ஒரு சின்ன நாட்டுக்கே அரசியல் சாசனத்தை இயற்ற முடியும்” என்று சொல்வார். அது உண்மைதான். கூர்மையான கண்கள். சோசலிசம், கேபிடலிசம், கம்யூனிசம், பல உள்ளூர் இசங்கள் பேசி அறிவுக்களையை அவர் சொட்டுவார். சட்டம் படித்தவர். ஹோமியோபதி கற்றவர். தமிழ் இலக்கணம் தெரியும். ஆறு மொழிகள் தெரியும். டைம்பாம் செய்யக்கூட அவரால் முடியும் என்பது என் ஊகம்.
அவசியமாகும் மதிப்பு
அவர் எப்போதும் குறைபட்டுக்கொள்வார். “ஏன் இந்த உலகம் என்னை மதிக்கவில்லை? நான் இங்க பொறந்திருக்க வேண்டியவனே இல்லீங்க. வெளிநாட்ல பிறந்திருந்தா என் மதிப்பே வேற. இங்க எல்லாரும் பொறாமை பிடிச்சவனுக. கழுதைக்கும் குதிரைக்கும் வித்தியாசம் தெரியாதவனுக. அடுத்தவங்க முன்னேறினா இவங்களுக்குப் பொறுக்காது.” என்று பொரிந்து தள்ளுவார்.
அடுத்தவரின் மதிப்புக் காகவும்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். அவர்களிடம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்ற ஆசை சிறிதாவது இழையோடும். பேருந்தில் தனி இருக்கையில் அமர விரும்புவார்களே தவிர, ஆட்களே இல்லாத பேருந்தில் பயணம் செய்ய நேரிட்டால் பயந்துவிடுவார்கள். அடுத்தவரை அந்த அளவு சார்ந்திருக்கும் சமூக உயிரினம் நாம். எனவே, தனது இருப்பையும், முயற்சிகளின் நியாயத்தையும் தக்க வைக்கத் தன் மீது அடுத்தவர் வைத்திருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு அவசியமாகிறது.
மதிப்புக் கூட்டல்
ஒரு துணியை உங்களிடம் கொடுத்தால், அதன் தரத்தையும் அளவையும் பொறுத்து மேஜையிலோ படுக்கையிலோ விரிக்கலாம்; முகம் துடைக்கலாம்; அப்படிப்பட்ட பயன்பாடுகளில் துணியின் மதிப்பு குறைவுதான்.
அதே துணி அழகாக மடிக்கப்பட்டு, குண்டூசி குத்தப்பட்டு அழகான பேக்கிங்கில் ஆடையாக உருமாறும்போதுதான் அந்தத் துணி தனது மதிப்பைக் கூட்டிக்கொள்கிறது.
இன்றைய வியாபார உலகம் ‘மதிப்புக்கூட்டல்’ இல்லாமல் இயங்கவே முடியாது. தன்னால் வழக்கமாக என்ன தர முடியுமோ, அதைவிடக் கொஞ்சம் கூடுதலாக ஏதோ ஒன்று. பெரிய நிறுவனங்களின் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழும்,சிறிய காய்கறிக் கடைகள் கொசுறாகக் கொடுக்கும் கறிவேப்பிலையும் தங்களது மதிப்பைக் கூட்டிக்கொள்ளும் செயல்தான். வியாபார நிறுவனங்களுக்கு மட்டும் உரிய ‘value added’ என்ற கருத்தை நம் அன்றாட வாழ்வில் எப்படி பொருத்திப் பார்க்க முடியும்?
குருபீடங்களாகும் நாற்காலிகள்
ஆர்வமாய் எதையாவது கேட்டால் “சொல்லித் தர்றத மட்டும் படி. வந்துட்டானுக” என்றும் ஆசிரியர்கள் திட்டுவதுண்டு. தனிப்பட்ட அக்கறையிலும் ஆர்வத்திலும் நல்ல புத்தகங்களை வாங்கித்தரும் ஆசிரியர்களும் உண்டு. அத்தகைய இரண்டு விதமான ஆசிரியர்களிடமும் நான் படித்திருக்கிறேன். மரிய அந்தோணி டீச்சர் தன் சொந்தக் காசைப் போட்டு மாணவர்களுக்குப் பரிசளிப்பார். சோப்பு டப்பா, கலர் பென்சில் போன்ற எளிய பரிசுகள்தான். ஆனால், அவற்றைக் கொடுக்கவில்லை என்று யார் அவரை கேட்டார்கள்?
அத்தகைய ஆசிரியர்களால்தான் கட்டிடங்கள் பள்ளிக்கூடங்களாய் மாறுகின்றன. நாற்காலிகள் குருவின் பீடங்களாய் உயர்கின்றன.
வெற்று எண்ணங்கள்
என் நண்பர் ஒருவரின் கண்கள் பார்த்தது சாதாரணக் கட்டிடத்தையும் அல்ல; மர நாற்காலியையும் அல்ல. அதற்கும் கீழே...! ஒருநாள் அந்த நண்பர் கல்லூரி விரிவுரையாளரான தன் மகனைப் பற்றி பேசுகையில் “பி.எச்டி முடிச்சிட்டாம்னா, இன்னும் நல்ல சம்பளம் கொடுப்பாங்க. பிரச்சினை இல்லாத வாழ்க்கை. அதிகம் கஷ்டப்படுத்திக்காதேன்னு சொல்லியிருக்கேன். பசங்க படிச்சா படிக்கறான். படிக்கலைனா போய்த் தொலையறான். இவனுக பாஸானா நமக்கென்ன, பெயில் ஆனா நமக்கென்ன, சம்பளம் வந்தா சரிதான். என்ன நான் சொல்றது?” என்பார்.
அவனவன் கஷ்டப்பட்டு உழைத்து, பணத்தை அங்குமிங்கும் சேகரித்து மகனையோ மகளையோ கல்லூரிக்கு அனுப்பினால், பாடம் கற்றுத்தருபவர் மாணவர்களின் மீது அக்கறையை வெளிப்படுத்த வேண்டாமா?
நண்பரின் மகன் உண்மையில் எப்படியோ தெரியாது. ஆனால் நண்பர் வெளிப்படுத்தியது சக மனிதர்கள் மீதான தன் எண்ணத்தை! உடன் பழகுபவர்கள் ஒன்றும் மூடர்கள் இல்லையே! உடனே இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு நொடியில் அவரைப் போன்றோரின் வெற்று எண்ணங்களை அடையாளம் கண்டுவிடுவார்கள். பின் எங்கிருந்து அவர் மதிப்பைப் பெறுவார்?
மதிக்கப்படாத அறிவு
சக மனிதர்கள் மீது நாம் காட்டும் அக்கறைதானே நமது மதிப்பை அதிகரிக்கும்? இதுபோன்ற வகையறாக்களை அறிவாளிகள் என்று வேண்டுமானால் உலகம் ஒப்புக் கொள்ளும். ஆனால், அதன் மூலம் இவர்கள் மற்றவர்களின மதிப்பைப் பெறவே முடியாது.
புத்திக்கூர்மைக்கும் அடுத்தவர் மதிப்புக்கும் சம்பந்தமே இல்லை! உங்களின் அதிசயிக்கத்தக்க ஆற்றல் அடுத்தவரின் அன்பை அழைத்து வரப்போவதில்லை. அசத்துகிற மாதிரி பேசினால் அது அடுத்தவர் மீது நீங்கள் செலுத்தும் அக்கறையாகி விடாது.
உங்கள் அம்மா அப்பாவுக்கு, மனைவிக்கு, குழந்தைக்கு, கணவருக்கு நீங்கள் வாங்கித் தருகிற விலை உயர்ந்த உணவு- அவர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை ஆகிவிடாது. “சாப்பிட்டாயா?” என்று அக்கறையோடு விசாரிப்பதுதான் உங்கள் மதிப்பைக் கூட்டும்.
இதனால்தான் அடுத்தவரிடம் அக்கறை காட்டும் ப்யூன்கூட சில அலுவலகங்களில் மேலதிகாரியைவிட அதிகமாக மதிக்கப்படுகிறார் “நல்லாருக்கியா கண்ணூ?” என்று கேட்கும் காய்கறி விற்கும் பெண்ணுக்கு மதிப்பு கொடுத்து தன் மனசைக் கொட்டும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
நிறுவனங்களுக்கு வேண்டுமானால், தங்கள் மதிப்பைக் கூட்டிக்கொள்ள அதிகப் பணமும், முயற்சியும் தேவைப்படலாம். ஆனால் தனிமனித வாழ்வில் இதைச் சாதிக்கும் வழிகள் எளிமையானவை. அவை அன்பான ஆசிரியர்கள் பரிசாகத் தரும் பென்சில்கள் போல! அம்மாவிடம் நாம் கேட்கும் “சாப்பிட்டாயா?” போல!