இந்தியாவின் கணித மேதையான சீனிவாச இராமானுஜனின் பெயரில் உலகளவில் இரு கணிதப் பரிசுகளும், ஒரு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகின்றன.
ICTP இராமானுஜன் பரிசு
வளரும் நாடுகளில் மிகச் சிறப்பான கணித ஆய்வைப் புரிபவருக்கு இத்தாலி நாட்டில் உள்ள ‘International Council for Theoretical Physics’ (ICTP) என்ற அமைப்பு இராமானுஜன் பெயரில் உயரிய கணிதப் பரிசை ஒவ்வோராண்டும் வழங்கி வருகிறது (www.ictp.it ) இந்தப் பரிசு, 2005-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகிறது.
இந்தப் பரிசைப் பெறுபவருக்கு அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கணித ஆய்வை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அவரது பொருளாதாரப் பின்னணி, எந்தச் சூழ்நிலையில் சாதித்தார் போன்ற அம்சங்களையும் கருதுவது இதன் சிறப்பம்சம்.
இந்தப் பரிசை வெல்பவருக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். மேலும் இத்தாலியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்துக்குப் போய் பரிசைப் பெற்று, அவர் புரிந்த ஆய்வைப் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஏபல் நினைவு அறக்கட்டளை, சர்வதேசக் கணிதக் கழகம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து இந்தப் பரிசை வழங்குகின்றன.
சுஜாதா இராமதுரை என்ற இந்தியக் கணித அறிஞரே இந்தப் பரிசை வென்ற முதல் பெண்மணி. இவருக்கு 2006-ல் இது வழங்கப்பட்டது. நடப்பாண்டில், இந்தியாவின் அமலேந்து கிருஷ்ணா என்பவருக்குச் சில மாதங்களுக்கு முன்பு இது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இவர்களே இதுவரை ICTP இராமானுஜன் பரிசை வென்ற இந்தியர்கள். அதிகபட்சமாக பிரேசில் நாட்டின் கணித அறிஞர்கள் மூன்று முறை இந்தப் பரிசை வென்றுள்ளார்கள்.
சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு
ஷண்முகா அறிவியல், கலை, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக் கழகம் எனப்படும் சாஸ்த்ரா கல்வி நிறுவனம் 1984-ல் தஞ்சையில் தொடங்கப்பட்டது. இராமானுஜன் வாழ்ந்த கும்பகோணத்தில், சீனிவாச இராமானுஜன் மையம் என்ற அமைப்பை, இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளர் எஸ். இராமமூர்த்தி, நவம்பர் 2000-ல் தொடங்கிவைத்தார். கணித மேதை இராமானுஜனுக்கு அகில இந்திய அளவில் ஒரு தேசிய நினைவிடத்தை உருவாக்குவது இந்த அமைப்பின் மற்றொரு குறிக்கோள்.
சீனிவாச இராமானுஜன் வாழ்ந்த இல்லத்தை விலைக்கு வாங்கி, அதனை இன்றுவரை சிறப்பாக இந்த மையம் பராமரிக்கிறது. இந்த இல்லத்தைப் பொது மக்களின் பார்வைக்காக, டிசம்பர் 2003-ல் அப்துல் கலாம் திறந்துவைத்தார். இன்று இந்த மையம் தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கிளையாக கும்பகோணத்தில் இயங்கிவருகிறது. இதில் இராமானுஜனின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய உருவப் படங்கள், மற்றும் முக்கியமான கணித ஆவணங்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இதை அனைவரும் கண்டு மகிழலாம்.
இராமானுஜன் மையம் ஒவ்வோராண்டும் இராமானுஜன் பரிசை வழங்குகிறது. ‘சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு’ என இது அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. ICTP இராமானுஜன் பரிசு போல, இந்தப் பரிசும் 2005 முதல் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
இராமானுஜன் சாதனை புரிந்திருந்த கணித உட்பிரிவுகளில் தலைசிறந்த பங்களிப்புகளை 32 வயதுக்குள் செய்பவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படும். இராமானுஜன் 32 வயது வரை வாழ்ந்ததால் இந்த வயது வரம்பு. இந்தப் பரிசை வெல்பவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் சரியாக இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22 ம் நாளில் கும்பகோணத்தில் அமைந்த சாஸ்த்ரா இராமானுஜன் மைய வளாகத்தில், இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. மஞ்சுல் பார்கவா, கண்ணன் சௌந்தரராஜன், 2005-லும், அக் ஷய் வெங்கடேஷ், 2008-லும் இந்தப் பரிசை வென்றுள்ளனர். இந்த மூவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டு கனடா நாட்டின் ஜேகோப் சிம்மர்மேன் இந்தப் பரிசைப் பெறுகிறார். இந்தப் பரிசை அதிக அளவில் அமெரிக்கக் கணித அறிஞர்களே இதுவரை வென்றுள்ளனர். சாஸ்த்ரா இராமானுஜன் பரிசை வென்றவர்கள் பிற்காலத்தில் கணிதத்தில் மிகச் சிறந்த பரிசுகளை வெல்கின்றனர். 2005-ல் இந்தப் பரிசைப் பெற்ற மஞ்சுல் பார்கவா, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, கணிதத்தின் மிகச் சிறந்த பரிசான பீல்ட்ஸ் பதக்கத்தை 2014 -ல் வென்றார்.
சீனிவாச இராமானுஜன் தங்கப் பதக்கம்
கணிதத்தில் அதிக அளவில் சாதனை புரிந்தோருக்கு, ‘சீனிவாச இராமானுஜன் பதக்கம்’ என்ற தங்கப் பதக்கத்தை இந்திய தேசிய அறிவியல் கழகம் (www.iisc.ernet.in) 1962 முதல் வழங்குகிறது. இந்தப் பதக்கம் மற்ற இரண்டு இராமானுஜன் பரிசுகள் போல ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
சீனிவாச இராமானுஜன் தங்கப் பதக்கத்தை, முதலில் இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் பெற்றார். 2006-ல் இந்தப் பதக்கம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமன் பரிமளா என்பவருக்கு வழங்கப்பட்டது. தற்சமயம் இவர் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ICTP இராமானுஜன் பரிசு பெற்ற சுஜாதா இராமதுரையின் முனைவர் பட்ட மேற்பார்வையாளராக இவர் விளங்கினார். 1987-ல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் இந்த விருதைப் பெற்றார். இந்தியக் கணித வரலாற்றில் சாதித்த பெண்களில் முக்கியமானவராக இராமன் பரிமளா திகழ்கிறார்.
- கட்டுரையாளர் கணிதப் பேராசிரியர்
தொடர்புக்கு: piemathematicians@yahoo.com