தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Draughting Officer) பதவியில் 188 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. சிவில் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமா முடித்திருப்பவர்கள் (DCE) இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், அதேபோல், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். மேலும், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட ஆண்டுகள் தளர்வு உண்டு. இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு சம்பளம் தோராயமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவங்களை நெடுஞ்சாலைத் துறையின் இணையதளத்தில் (>www.tnhighways.gov.in ) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘இணை இயக்குநர் (நிர்வாகம்), முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத்துறை), பொதுப்பணித் துறை வளாகம், சேப்பாக்கம், சென்னை 600 005’ என்ற முகவரிக்கு நவம்பர் 18-ந் தேதிக்குள்அனுப்ப வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பினால் விண்ணப்பம் ரத்துசெய்யப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இடஒதுக்கீடு, தரவரிசை அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.