உலகம் முழுவதையும் சோழ சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்ற உணர்வுகொண்டவர் ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன். ‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசரி வர்மன்’ என்று அவரைப் புகழ்கின்றன சோழர் கால கல்வெட்டுகள்.
கர்நாடகத்தின் குடமலை நாடு தொடங்கி வங்காளம் வரை வெற்றிகளைக் குவித்தார் ராஜேந்திரன். கடல் கடந்தும் படை நடத்தினார். இலங்கையையும் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியாவையும் வென்றார். அவர் போர் நடத்திச் சென்ற இடங்களின் தடங்களைக் காண்பதும் அவரால் எழுப்பப்பட்ட அடையாளச் சின்னங்களை ஆவணப்படுத்துவதற்காக ஒரு பயணத் திட்டம் உருவாகி உள்ளது.
‘ராஜேந்திர சோழன் கங்கை படையெழுச்சியின் தடம் காணும் பயணம்’ என்ற பெயரில் இந்தப் பயணத்தை - கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் ஆரம்பித்துள்ளது எனும் 14-10-15-ல் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்திலிருந்து இது தொடங்கியது. தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகன், சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் உதவிப்பேராசிரியர் ஜெ.சவுந்தரராஜன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்கள் எஸ். கண்ணன், ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் ஜி. சசிதரன், வரலாற்று ஆர்வலர் எம். ரமேஷ், ராஜேந்திர சோழன் ஆவணப்பட இயக்குநர் குணவதி மைந்தன் இவர்களோடு நானும் பங்கேற்றேன்.
சோழ கங்கத்தின் சிறப்பு
கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கியமான வரலாற்றுச் சின்னங்களை காட்டினார் வெங்கடேசன். அதில் ஒன்று, சூரியப் பிரபை. ஒரே கல்லால் ஆன ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் சிற்பம். இது வங்கப் போரின்போது அங்கிருந்து ராஜேந்திரனால் கொண்டுவரப்பட்டது. இன்னொன்று, எட்டுக் கைகளைக் கொண்ட கலிங்க துர்க்கை. இது கலிங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. “இது போல எட்டு சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எஞ்சி இருப்பது இது மட்டும்தான்” என விளக்கினார் கோமகன்.
கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திரன் நிறுவிய சோழ கங்கம் (பொன்னேரி) ஏரியை நோக்கிப் புறப்பட்டது பயணக் குழு. அதன் சிறப்பை விளக்கினார் வெங்கடேசன். “மன்னர்கள் வெற்றிபெற்ற இடங்களில்தான் வெற்றிச் சின்னங்களை நிறுவுவது வழக்கம். ஆனால், ராஜேந்திர சோழன், இங்கே வந்து இந்த ஜல ஸ்தூபியை நிறுவியிருக்கிறார். திருவாலங்காட்டுச் செப்பேடு “பகீரதன் தனது சகோதரர்களுக்கும் தந்தைக்கும் மோட்சம் கொடுப்பதற்காகப் புனித கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான். அதை ராஜேந்திரன் தனது பராக்கிரமத்தால் இங்கு கொண்டுவந்தான் என்கிறது” என்றார்.
கூடுதுறையில் சோழர் கோயில்
கர்நாடகத்தை நோக்கிப் பயணம் தொடர்கிறது. வழியில் எதிர்கொள்கிறது பவானியின் கூடுதுறை. குடகில் பிறந்ததும், ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பட்டினப்பாலை சிலாகிப்பதுமான காவிரியும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஜனிக்கும் பவானியும் கூடுகிற இடம் இது. இங்கேயும் சோழர்கள் காலத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அது சங்கமேஸ்வரர் கோயில். இப்போது இந்தக் கோயில் எடுத்துக் கட்டப்பட்டுவிட்டபோதும் சோழர்கள் கட்டிய பழைய கோயில் காவிரிக் கரையில் இருக்கிறது. சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கோயிலில் காயத்திரி லிங்கேஸ்வரர் வடக்கே பவானி - காவிரி சங்கமத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
பண்ணாரி நோக்கிப் பயணம் தொடர்கிறது. திம்மம் மலை உச்சியை அடைகிறோம். “நாம் கடல் மட்டத்திலிருந்து 2,656 அடி உயரத்தில் இருக்கிறோம்’’ என்றார் சிவராமகிருஷ்ணன்.
வீரக்கற்கள்
மலை உச்சியிலிருந்து இறங்கும் சாலையில் சற்று தூரம் போனால், தாளவாடி வந்து விடுகிறது. “இந்தப் பகுதிக்கு ஏற்கெனவே ஆய்வுக்கு வந்திருக்கிறேன். இந்தப் பகுதியில் போரில் இறந்த வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகற்கள் இருக்கு” என்று ஆர்வமூட்டுகிறார் வெங்கடேசன். வழியில், எப்போதாவது தண்ணீர் ஓடும் சொர்ணமுகி ஆறு குறுக்கிடுகிறது. அதைக் கடந்தால் தொட்டுவிடும் தூரத்தில் தொட்டகஜனூர்.
சற்றுத் தூரத்திலேயே சாலையின் வலது ஓரத்தில் இரண்டு நடுகற்கள். ஒட்டுமொத்தக் குழுவும் அதைச் சூழ்ந்துகொண்டு ஆர்வத்தோடு ஆராய்கிறது. “போரில் இறந்த வீரர்களுக்கு வைக்கப்படும் வீரக் கல்தான் இது” என்கிறார் வெங்கடேசன். “சோழர் காலத்துக் கல்லாக இருக்க முடியாது. சோழர்கள் வீரக் கற்களில் சிவலிங்க வடிவத்தைச் செதுக்கியதாகத் தரவுகள் இல்லை. இது 13-ம் நூற்றாண்டுக்குப் பின்பு ஹொய்சாளர்களோ விஜயநகரப் பேரரசர்களோ வைத்திருக்கலாம். போர் வீரனுக்குத்தான் என்பதில்லை. அந்தக் காலத்தில், வட்டாரத் தலைவர்கள் இறந்தால்கூட கற்கள் நடப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் கண்ணன். தாளவாடி நோக்கித் திரும்புகிறது பயணம்.
- பயணம் தொடரும்