இணைப்பிதழ்கள்

இப்படியும் பார்க்கலாம்: நெருக்கடி உங்களை மேலாண்மை செய்யுதா?

ஷங்கர்பாபு

அணை ஒன்றில் வேலை பார்க்கும் பொறியாளர் ஒருவர் தண்ணீரிலிருந்து மின்சாரம் கறக்கும் முறையை விளக்கினார். அணையிலிருந்து தண்ணீர் உள்ளே அனுமதிக்கப்படும் விதம், இயந்திரங்களின் சுழற்சி, அன்றாட வேலைகள், ஆபத்துக் கால நடவடிக்கைகளைச் சொன்னார்.

“மேம்போக்கா பாத்தா, இந்த வேலைகளை சாதாரண அறிவு கொண்ட யாராலும் செய்ய முடியும். ஆனால், அசாதாரணச் சூழ்நிலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு, இயந்திரத்தின் பாதுகாப்பு, இவற்றைக் கருத்தில் கொண்டு பதற்றப்படாமல் நடவடிக்கைகள் எடுப்பதற்காகத்தான் பயிற்சி பெற்ற நாங்கள் இருக்கிறோம்” என்றார் அவர். ‘சிக்கலான நேரத்தில் செயல்படும் விதம்’தான் அவர் பெருமையாகக் குறிப்பிட்டது.

உருக்குத் தொழிற்சாலையின் மூத்த மேலாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். நிலம் கொடுத்தோரின் கோரிக்கைகள், ஆட்கள் பற்றாக்குறை, இயந்திரக் கோளாறு, நிர்வாகத்தின் கொடுமைகள், தொழிற்சங்கத்தின் தலையீடுகள் என பல நெருக்கடிகளை விளக்கினார். “பேரிடர் மேலாண்மையில் நிபுணரா இருந்தாத்தான் இங்கு தாக்குப்பிடிக்க முடியும்” என்றார்.

எவ்வளவு சம்பவங்களைப் பார்த்திருப்பார் என்ற பிரமிப்புடன் சமீபத்தில் அவர் கையாண்ட சிக்கல் ஒன்றை விளக்குமாறு கேட்டு ஒரு புல்லரிப்புக்குத் தயாரானேன்.“முக்கியமான விருந்து. மஷ்ரூம்-65 பத்தாமப் போயிருச்சு. கடைசீல காலிப்ளவர்-65 போட்டு சமாளிச்சேன்” என்று மிகவும் சீரியஸாகச் சொன்னார். என் புல்லரிப்பு பலமடங்கு அதிகமானது.

வருமுன் காத்தல், வந்தபின் காத்தல், சேதாரத்தைக் குறைத்தல் என எதிர்பாராத நெருக்கடிகளால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் ‘நெருக்கடி மேலாண்மை’. மேலாண்மைத் துறையில் ஒரு புதிய வகையாக நெருக்கடி மேலாண்மை இருக்கிறது. கூடவே, இது தேசம், நிறுவனங்கள் போன்ற அமைப்புகளை நிர்வகிக்கவும் தேவைப்படுகிறது.

பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டும் அந்த வித்தையைப் பிரயோகித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அது சமீபத்தில் உருவாக்கப்பட்ட தத்துவம் என்பதும் எந்த அளவு உண்மை? ஒவ்வொருவரும் தன் சொந்த வாழ்விலும் இந்தக் கொள்கையைப் பயன்படுத்த முடிந்தால்? அந்த ஆற்றலை வளர்த்துக்கொண்டால்?

சுற்றுலா செல்கிறபோது புதிய இடத்திலுள்ள பார்க், அரண்மனை, கடைகளைப் பார்த்துவிட்டு அங்குள்ள கோயிலுக்குப் போகலாம் என முடிவு செய்திருப்போம். நேரமின்மை காரணமாக “கோயில்ல நடை அடைச்சிருவாங்க... அதனால முதல்ல கோவில்” என்ற முடிவுடன் வழி மாறிய வாகனங்கள்; பரீட்சையில் எந்தக் கேள்விக்கு இன்னும் நன்றாக பதிலை எழுத முடியும் என்று சட்டென முடிவெடுத்த கணங்கள்; விருந்தினரின் திடீர் வருகையின்போது பதறாமல் ரகசியமாய் பிஸ்கெட், பால் வாங்கி அவர்களை உபசரித்த தருணங்கள். இந்த விஷயத்தை இப்போது சொன்னால் பிரச்சினை ஏற்படும் என்று மனதுக்குள் பதுக்கிய விஷயங்கள் என எல்லோரும் பல்வேறு இடர்ப்பாடுகளை மேலாண்மை செய்துகொண்டுதானே ஒவ்வொரு நாட்களையும் கழித்துவருகிறோம்?

அவ்வளவு ஏன், பள்ளிக்கு மட்டம் போட நினைக்கும் ஒரு எல்.கே.ஜி. குழந்தையின் “வயிறு வலிக்குது” என்னும் வார்த்தைகூட ஒரு நெருக்கடி மேலாண்மைதான்.

மனிதர் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் இடர்களை சமாளித்துத்தான் வாழ்ந்துவருகின்றன. ஒரு நாணல் வெள்ளத்துக்கு வளைந்துகொடுக்கிறது. அந்நிய நாய் தன் எல்லைக்குள் நுழைந்ததும் பூர்வீக நாய் தனது ஏரியாவைத் தக்க வைத்துக்கொள்ள, தன் தோஸ்துகளுக்கு ‘வாய்ஸ் அப்பில்’ தகவல் தெரிவிக்கிறது.

சென்ற கட்டுரையில் ‘எதிர்பாராதது’ நடக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நடந்துவிட்டால்? மீள வேண்டும்; மீண்டுகொண்டுதான் இருக்கிறோம்.பூமியில் உயிர்கள் தோன்றிய அடுத்த நொடியே நடத்தப்பட்ட சப்ஜெக்ட் இது!

என்ன, இந்த பாடத்திட்டம் திணிக்கப்படும்போது மனிதர்கள் பெருங்கவலையும் அதிருப்தியும் அடைகிறார்கள்!

ஒத்திகை பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் சில நேரம் சொதப்புகின்றன. யதார்த்த வாழ்வில் ஒத்திகை என்னும் வார்த்தையே கிடையாது.

சரியாக 5.01-க்கு எழுந்திருப்பது, 7.40- க்கு வீட்டை விட்டு வெளியேறுவது,11.17- க்கு லட்சியம் நிறைவேற்றுவது என்றெல்லாம் திட்டப்படி நடக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, உங்களையும் சேர்த்து எல்லோரும் ரோபாட்டுகளாக இருக்க வேண்டும்! அதிலும் இயந்திரக் கோளாறு, மின்சாரம் குறைதல் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன.

இயற்கை எந்த உயிரையும் அப்படியொரு திட்டமிட்ட வாழ்க்கையை நடத்துவதற்காகப் படைக்கவில்லை. இயற்கையின் கையிலுள்ள கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது.

எனவே, இடர்ப்பாடுகளை எதிர்கொள்வது தான் இயல்பானதே தவிர, எல்லாமே திட்டப்படி நடப்பதுதான் ஆச்சரியமானது; அசாதாரணமானது. திட்டமிடுதல்களில் உண்மையான திறமை இல்லை. அதைத் தாண்டி விஷயங்கள் நடக்கும்போது, திட்டமிடாத விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

யாருமே இல்லாத ஆயிரம் அடிச் சாலையில் ஓட்ட தெரியாதவர்கூட வாகனத்தை ஓட்ட முடியும். ஆனால், வாழ்வின் சாலைகள் குறுகலானவை; கண்ணுக்குத் தெரியாத வாகனங்களும் அவற்றில் தறிகெட்டு ஓடும். ஒரு நாள் சொல்லப்பட்ட விதிகள் இன்னொரு நாளில் பிடுங்கப்படும் கொடுமை வேறு அங்கே இருக்கும்.

கம்ப்யூட்டர் கேம் போல வேறு வாகனங்களும், மாற்றுப் பாதைகளும் ஆங்காங்கே சென்றுகொண்டுதான் இருக்கும். நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். இதில் சலிப்பும் சோர்வும் அடைந்தால் இடர்ப்பாடுகள் உங்களை மேலாண்மை செய்துவிடும்!

உங்களின் திட்டங்கள் பெரும்பாலும் சுத்தத் தங்கம் மாதிரி. அந்த உலோகக் கட்டியுடன் அலைபவரை எல்லோரும் விசித்திரமாகத்தான் பார்ப்பார்கள். அதை வளைத்தும் நீட்டியும் ஆபரணங்கள் செய்ய அதில் மாற்றுத் திட்டங்கள், இடர்ப்பாடு மேலாண்மைகள் என்னும் செம்பையும் சேர்த்தாக வேண்டும்!

பல வருடங்களுக்கு முன்னால் நண்பனும் நானும் வேலைக்கான நேர்முகத்துக்குப் போயிருந்தோம். நேர்முகத் தேர்வு அறைக்குள் போய்த் திரும்பியவனிடம் “என்ன நடந்தது?” என்று கேட்டேன்.

“முதல்ல உன் பேர் என்னன்னு கேட்டாங்க. சூப்பரா சொன்னேன். அப்பா பேரு கேட்டாங்க. அவர் என்ன பண்றாரு; சொந்த ஊரு எல்லாம் கேட்டாங்க அட்டகாசமா பதில் சொன்னேன். நல்லாத்தான் போய்ட்டிருந்தது. திடீர்னு ஒருத்தர் சப்ஜெக்ட் பத்தி எல்லாம் கேக்க ஆரம்பிச் சாட்டாரு. டென்ஷன் ஆயிட்டேன்” என்றார்.

நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

SCROLL FOR NEXT