Indian Institute of Technology என்பதன் சுருக்கம் I.I.T. என்பது தெரிந்ததுதான். N.I.T. என்பது National Institute of Technology என்பதன் சுருக்கம். அதாவது தேசிய தொழில் நுட்பக் கழகம். இந்தியாவில் உள்ள சில குறிப் பிட்ட பொறியியல் கல்வி நிறுவ னங்களை இப்படி அழைக்கிறார் கள். இவை தொடக்கத்தில் மண் டல பொறியியல் கல்லூரிகள் (RECs) என்று அழைக்கப்பட்டன. 2002-ல் இந்திய அரசு இவற்றைப் படிப்படியாக, தேசிய தொழில் நுட்பக் கழகங்களாக மேம்படுத்த முடிவெடுத்தது. இப்படி 20 NIT-க்கள் இப்போது உள்ளன. தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் சட்டம் என்பதன் கீழ் இவை தன்னிச்சையான தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக செயல் படுகின்றன. ஒவ்வொரு N.I.T.யும் தனக்கான பாடத்திட்டத்தைத் தானே வகுத்துக் கொள்ளலாம்.
இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள் (IIITs) என்பவை யும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவைதான். இப்படிப்பட்ட நான்கு கழகங்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியால் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் 20 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்களை பொது - தனியார் கூட்டமைப்பில் ஏற்படுத்த திட்ட மிட்டிருக்கிறார்கள்.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு பற்றிய கட்டுரையில் N.I.T.மற்றும் I.I.I.T. ஆகியவற்றைக் குறிப்பிடக் காரணம் உண்டு. எல்லாவற்றுக் கும் நுழைவுத் தேர்வு ஒன்று தான். இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு ஐ.ஐ.டி.யில் நீங்கள் விரும்பிய கல்விப் பிரிவில் சேர முடியா விட்டால்கூட N.I.T. அல்லது I.I.I.T.க்களில் சேர முடியும். ஆக ஐ.ஐ.டி.யின் கதவு ஒருவேளை உங்களுக்கு மூடிவிட்டால் கூட தரம் வாய்ந்த வேறு கல்வி அமைப்புகளில் சேர்ந்து உங்கள் வருங்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
இந்திய அறிவியல் நிறுவ னம் (I.I.Sc.) பெங்களூரில் உள்ள உலகத் தரம் வாய்ந்த முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இதன் முதல் இந்திய இயக்குநர் சர் சி.வி.ராமன். 2011லிருந்து இது Bachelor of Science (Research) Program எனும் பட்டப் படிப்பையும் வழங்கு கிறது. இதில் சேர்வதற்கான அடிப் படையாக ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய ஒவ்வொன்றிலும் 30 கேள்விகள் என்று மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உண்டு. (இந்தக் கட்டுரையில் இடம் பெறும் நுழைவுத் தேர்வு குறித்த தகவல்கள் 2015-ல் நடை பெற்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் அளிக்கப்படுகின் றன. இதை அழுத்தமாகச் சொல்வதற்குக் காரணம் உண்டு. அதைப் பிறகு பார்ப்போம்).
2016-ல் நடக்கவிருக்கும் நுழை வுத் தேர்வை முதல்முறையாக எழுத வேண்டுமென்றால் ப்ளஸ் 2 தேர்வை 2014 அல்லது 2015-ல் முடித்திருக்க வேண்டும். அல்லது 2016-ல் ப்ளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுவதாக இருக்க வேண்டும். வெற்றி பெறவில்லையென்றால் அடுத்த இரு முயற்சிகளை உங்கள் வயது வரம்பிற்குட்பட்டு எடுக்கலாம்.
நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடவே அனுப்ப வேண்டிய புகைப்படம், கட்டை விரல் ரேகை, கையெழுத்து போன்றவற்றை ஸ்கேன் செய்து டவுன்லோடு செய்து அனுப்ப வேண்டியிருக் கும். தேர்வுக் கட்டணத்தைக் கடன் அட்டை மூலமாகக் குறிப்பிட்ட வங்கிகளில் செலுத்தலாம்.
பி.டெக்.கில் சேர JEE (Mains) தேர்வையும், அடுத்து JEE (Advanced) தேர்வையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றோம். நினைவிருக்கிறதா?
‘அடடா, எதற்காக இரண்டு நுழைவுத் தேர்வுகள்? ஒன்று போதாதோ?’ என்று உங்களில் சிலர் ஆதங்கப்பட்டிருப்பீர்கள்.
உங்கள் ஆதங்கம் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளை எட்டி விட்டது. சிறிது காலமாகவே இது தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என்ன விவாதம்? என்ன முடிவு வர வாய்ப்பு உண்டு? கொஞ்சம் பொறுங்கள் நண்பர்களே.
உலகம் முழுவதும் ஒரே நாளில் மிக அதிகம்பேர் எழுதும் நுழைவுத் தேர்வு என்பது ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுதான். சுமார் 15 லட்சம்பேர். இந்தத் தேர்வுக்கான பயிற்சியின் தொடக்கம் அனுபவம் வாய்ந்தவர்களால் உங்களுக்கு இலவசமாகவே கிடைத்தால் எப்படி இருக்கும்?
இந்த விவரங்களை நாளைக்கே இப்பகுதியில் அறியலாம் என்றால் மேலும் சந்தோஷம்தானே?