இணைப்பிதழ்கள்

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: நீதி போதித்த பவித்ரன்

ஆயிஷா இரா.நடராசன்

உலகத்தின் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகளை ரொம்பவும் குறைத்தே மதிப்பிடு கிறோம். குழந்தைகளின் சின்ன சின்ன முயற்சிகளுக்கு பின்னே இருக்கும் பெரிய தியாகங்களைக் கவனிக்கத் தவறுகிறோம். - அமர்த்தியா சென்

இந்த ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளிக்கூடங்களில் நன்நடத்தை இயல் நடத்த வாரம் ஒரு வகுப்பு நேரத்தை ஒதுக்குமாறு கூறியுள்ளது.

அரசின் இந்த உத்திரவை வாசித்தபோது எனக்கு மாணவர் பவித்ரனின் ஞாபகமே வந்தது. யாரும் கற்பித்து மட்டும் வருவதல்ல சமூக நீதியும் சமூக அக்கறையும் நடத்தையும் என எனக்குக் காட்டியவர் பவித்ரன்.

குழந்தைகளுக்கான எல்லாக் கதைகளிலும் நீதிபோதனை செய்ய வேண்டும் என்பது பலரின் கருத்து. குழந்தைகளுக்கு நீதி தேவையா என்பது என் போன்றவர்கள் கேள்வி. குழந்தைகள் திட்டம் போட்டுக் கொள்ளை அடிப்பது இல்லை. பெரிய அளவில் பொய், வாக்குறுதிகள் தருவது இல்லை. லஞ்சம் அவர்களது வாழ்வில் இல்லை. எல்லா வகையான நீதியுமே பெரியவர்களுக்குத்தான் தேவை. இதை எல்லாம் அல்லது இதில் ஏதாவது ஒன்றையேனும் அல்லது ஒரு சதவீத அளவேனும் செய்யும் பெரியவர்கள் நாம். நாம் சொல்லும் நீதிகளைக் குழந்தைகள் ஏற்குமா, ஏற்காதா என்பது கூட ஒருபுறம் இருக்கட்டும். அதற்கும் எழுத்து தேர்வுகள் நடத்துவது முறையா?

கவனம்

ஆனால் குழந்தைகள் வாழ்க்கை நெறியை கற்றுக்கொள்ளவே செய்கின்றன. அமெரிக்க உளவியாளர் லாரன்ஸ் கோல்பர்க் (Lawrence Kohl berg) பல வருடங்கள் நன்னெறி உருவாக்கம் குறித்து குழந்தைகளிடையே ஆய்வுசெய்தார். “குழந்தைகள் தங்களது அன்றாட நடத்தைகள், அவர்கள் பார்த்த பிறரது நடத்தைகளைத் திறந்த மனதோடு பிறருடன் உரையாடுவதன்மூலம், விவாதிப்பதன் மூலம், நல்ல நடத்தை, தீய பாதைகளை கண்டடைகிறார்கள்” என்று அவர் அறிவித்தார். அதில் அவர்கள் தொலைக்காட்சியில் , சினிமா போன்ற ஊடகங்களில் பார்க்கும் நடத்தைகளும் அடக்கம். “குழந்தைகள் எல்லாவற்றையுமே உன்னிப்பாக கவனிக்கிறார்கள்” என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கு தங்களது அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட தொலைக்காட்சியில் கண்டதை, ரசித்ததை வகுப்பறையில் திறந்த மனதோடு கலந்துரையாட நேரம் ஒதுக்கி இருக்கிறோமா நாம்? நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை தினசரிகளில் வாசித்து, செய்திகளை விமர்சிக்க வீட்டிலோ பள்ளியிலோ அவர்களுக்கு எத்தனை பேர் வாய்ப்புகள் தருகிறோம்? நம் பள்ளிகளின் எழுதப்படாத சட்டம் என்ன? கையைக் கட்டு… வாயைப் பொத்து… கவனி…. பேசாதே… இதைத்தானே கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்கிறது நமது பாடமுறை. அது வேறு என்ன நடத்தை நெறியை போதிக்க முடியும்?

பவித்ரன் தந்த அதிர்ச்சி

நான் பணிபுரியும் பள்ளியில் பல ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் இது. தீபாவளிக்கு மறுநாள் காலை பட்டாசு சத்தங்கள் ஓயாத அந்த விடுமுறை நாளில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் “ஏதாவது பலகாரம்.. பழைய துணி இருக்கா பிளீஸ்… இருந்தா குடுங்க” என்று வந்து நின்றார். என் தாயாரும் துணைவியாரும் ஏதேதோ கொடுத்து அனுப்பிவிட்டு, “பாவம்…இல்லாத வீட்டு பிள்ளை’’ என்று பேசிக்கொண்டபோது சட்டென நான் ஜன்னல் வழியே கவனித்தேன். எங்கள் பள்ளியில் படிக்கும் பையன். எனக்கு மனதில் படபடப்பு அதிகமானது. பக்கத்து வீட்டுக்காரரும் எட்டிப்பார்த்து. ‘‘உங்க ஸ்கூல் பையனா” என்றார். அவர் வேறு ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியர்… நான் சாலையை பார்த்தபடி வெளியே நின்றேன்.

‘‘இந்தக் காலப் பசங்க அப்படி… இந்த மாதிரி வீடுவீடா போய் பிச்சையா வாங்கி அதை வித்துப் படத்துக்கு போவானுங்க சார்…’’ அவரது பேச்சில் இருந்த நக்கல் என்னை உசுப்பேற்றி இருக்க வேண்டும். ‘‘என்ன நடக்குதுனு பின்னால் போய்ப் பார்க்கலாமா’’ என்றேன். இருவருமாக நடந்தபோது சொன்னார். ‘இதெல்லாம் பெற்றோர்களால் வருவது சார். வீட்ல இதைக்கூடவா கவனிக்க மாட்டாங்க…’ பிறகு குரலை தாழ்த்தி ‘இவன்… அந்த சமூகமாக இருப்பான்’ அது குழந்தையின் சாதி பற்றியது என உணர்ந்து மனம் வலித்தது. நாம் குழந்தைகளை எவ்வளவு மோசமாக அனுமானிக்கிறோம். நன்னடத்தை வகுப்பெடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது. அந்த சிறுவனின் பின்னே சென்ற நாங்கள் எங்கள் ஊரின் பார்வையற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் இருந்தோம்.

அங்கே பவித்ரன் நுழைந்ததும் ஏக குதூகலம். ‘‘அண்ணா வந்துட்டாரு’’ குழந்தைகள் வரவேற்றன. தான் வீடு வீடாய்ச் சேகரித்த உடைகளை, பலகாரங்களைப் பிரித்து வழங்கி தன் தீபாவளியைப் பகிர்ந்துகொண்ட அந்த மாணவனை நான் ஆரத்தழுவிக்கொண்டேன்.

அதிர்ச்சியிலிருந்து மீண்ட உடன் வந்த ஆசிரியர், விபரம் கேட்டார். ‘‘பாவம் இவங்களுக்கு யாருமே இல்ல சார்’’ என்று கண்கலங்க வைத்தார் பவித்ரன். அவருக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது? ‘‘டி.வி.ல பார்த்தேன். ஸ்மால் ஒன்டர் (கார்ட்டூன்) சீரியல்ல இதேமாதிரி வந்தது’’ என்றார். மதிப்பெண்கள் அல்ல. சமூகத்தை நோக்கிய மதிப்பீடுகளை வளர்க்கவே கல்வி. அதைப் பள்ளி மட்டுமே வழங்குவதில்லை என்று எனக்குக் காட்டிய பவித்ரன் இன்று ஒரு கலைக் கல்லூரி விரிவுரையாளர்.கடைசியாகப் பார்த்தபோது தானே புயலில் பாதித்தவர்களுக்குப் பாயும் பாத்திரங்களும் சேகரிக்க மாணவர்களோடு களத்தில் இருந்தார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

SCROLL FOR NEXT