சிந்து சமவெளி மக்களின் கட்டிடக் கலை, சாலைகள், கலைப் பொருட்கள், சிற்பங்கள் போன்றவற்றை எல்லாம் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தொல்லியல் பொருட்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அந்த நாகரிக மக்கள் என்ன சாப்பிட்டார்கள், தண்ணீருக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் எப்படிக் கண்டறிவது? அதற்கும் வழிகள் இருக்கின்றன. தொல்லியல் எச்சங்களாகக் கிடைக்கும் உணவுப் பொருட்கள், உணவு, தண்ணீருக்காகக் கட்டமைப்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் இதை யூகித்து அறிகிறார்கள். அவற்றைப் பற்றி பார்ப்போம்:
உணவு
சிந்து சமவெளி மக்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கணப்பு அடுப்பு மூலம் ரொட்டியைச் சுட்டு எடுத்திருக்கிறார்கள். இது முக்கியமான சமையல் தொழில்நுட்ப வளர்ச்சியாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நாகரிகத்தில் விவசாயம் செழிப்பாக நடந்துள்ளது. அதன் காரணமாக விளைவிக்கப்பட்ட தானியங்களைச் சேமிக்க, பொதுக் கிடங்கும் இருந்துள்ளது. சிந்து சமவெளியில் கிடைத்த விதைகள் மூலம் அம்மக்கள் முலாம் பழம், திராட்சை போன்ற பழங்களைச் சாப்பிட்டிருப்பது தெரிகிறது.
பெரிய சங்கு, கிளிஞ்சல்கள் கோப்பைகளைப் போலவும், சில நேரம் சடங்குகளில் தண்ணீரைத் தெளிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிணறுகளில் தண்ணீர் குடிக்க விலை குறைவான மண்குவளைகளைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்துள்ளனர். இப்போதும் வட மாநிலங்களில் தேநீர், மோர், குல்ஃபி போன்றவை மண்குவளைகளில் வைத்துத் தருவது வழக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து சமவெளி மக்கள் சிலருக்குப் பற்கள் சரியாக இல்லை என்பது தெரிகிறது. இறைச்சிக்குப் பதிலாகக் காய்கறி, பழங்கள் போன்ற மென்மையான உணவை அவர்கள் அதிகம் சாப்பிட்டதால், அப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
தண்ணீர்
மொகஞ்சதாரோவில் சராசரியாக மூன்றில் ஒரு வீடுகளில் கிணறு இருந்துள்ளது. சில சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன. தோலாவிராவில் பாறையைத் தோண்டி தண்ணீரைத் தேக்கும் குளமாக மக்கள் பயன்படுத்தியுள்ளனர். தோலாவிராவில் மனிதர்கள் உருவாக்கிய 16 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளியில் மனிதர்கள் உருவாக்கிய மிகப் பெரிய நீர்த்தேக்கம் 500 மீட்டர் நீளம் கொண்டது.