மக்களாட்சியை நிலைநிறுத்தியோர்க்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் மக்களாட்சியை நிலைநிறுத்தப் பங்காற்றிய துனிசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisia’s ‘National Dialogue Quartet’) என்ற அமைப்புக்கு 2015-ம் ஆண்டுக்கான ‘அமைதிக்கான நோபல் பரிசு’ அக்டோபர் 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
நாடுகளிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவர்கள், ராணுவத் தாக்குதல்களை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவர்கள், அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக திகழ்ந்தவர்கள் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று நோபல் பரிசை உருவாக்கிய ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த உயில் கூறுகிறது.
மருத்துவம், இலக்கியம், வேதியியல், இயற்பியல்,பொருளாதாரம் எனும் ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம், ஒரு பதக்கம் மற்றும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகின்றன.
புளூட்டோவின் மிகப்பெரிய நிலவின் படம்
புளூட்டோவின் மிகப்பெரிய நிலவான சாரோனை நாசா அனுப்பிய நியூ ஹொரைசான் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு இல்லாத வகையில் அதி நுட்பமாகவும், துல்லியமாகவும் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. இது அக்டோபர் 3-ம் தேதி வெளியானது.
புளூட்டோவுக்கு சாரோன் உட்பட 5 நிலவுகள் உள்ளன. இவற்றில் சாரோன் மிகப்பெரியது. புளூட்டோவைப் போல வெவ்வேறு வித வண்ணங்களை சாரோன் கொண்டிருக்கவில்லை. வடதுருவப் பகுதியில் சிவப்பு நிறம் அதிகமாகக் காணப்படுகிறது.
சாரோனின் 1,214 கி.மீ. பரப்பை இந்த புகைப்படம் விவரிக்கிறது. புகைப்படத்தில், பிளவுகள், கணவாய்கள் உள்ளிட்டவை பதிவாகியுள்ளன.
“சாரோன் நிலவின் உட்பகுதியில் உறைந்த கடல் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து விவாதித்து வருகிறோம். சில இடங்களில் உள்ள பிளவுகள், நீருடன் லாவாவை மேற்பரப்புக்குத் தள்ளுவதற்கு வாய்ப்புகளும் உண்டு. இவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என நியூ ஹொரைசான் குழு உறுப்பினர் பால் சென்க் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தடை வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வு நியமனம்
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்து உயர் நீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
பொதுநல மனு ஒன்றை விசாரித்த ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் ஜம்மு அமர்வு, பசு வதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நகர் அமர்வு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனை மீதான தடையை 2 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அத்துடன், இந்த விவகாரத்துக்கு தீர்வு காண 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மாட்டிறைச்சி தடைக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிபதிகள் முசாபர் ஹுசைன் அட்டர், அலி முகமது மக்ரே மற்றும் தஷி ரப்ஸ்தான் ஆகிய மூவர் அடங்கிய அமர்வை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் அறிவித்தது.
சாகித்ய அகாடமி பொறுப்பை துறந்தார் சச்சிதானந்தன்
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப்பும் சாகித்ய அகாடமியின் பதவியைத் துறப்பதாக எழுத்தாளர் சச்சிதானந்தனும் கூறியுள்ளனர்.
சச்சிதானந்தன் சாகித்ய அகாடமியின் முன்னாள் செயலாளரும்கூட. சாகித்ய அகாடமி, எழுத்தாளர்கள் கொள்கைகளுக்கு துணை நிற்கவும்; அரசியல் சாசனம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை பேணவும் தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலையை கண்டித்து சாகித்ய அகாடமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சச்சிதானந்தன் வலியுறுத்தி வந்தார்.
முன்னதாக, எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸைத் தொடர்ந்து இவர்கள் சாகித்ய அகாடமியை விமர்சித்துள்ளனர்.
2014-ல் சாகித்ய விருது பெற்று மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரனும், பொதுக்குழு உறுப்பினர் எழுத்தாளர் பி.கே.பாரக்கடவு, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்து ராஜினாமா மற்றும் விருதைத் திருப்பித் தரல் அறிவிப்புகளைச் செய்துள்ளார்.
முன்னதாக அக்டோபர் 9 அன்று எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார்.