ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5
ஆசு என்றால் குற்றம் குறைகள். இரிதல் என்றால் அகற்றுதல், நீக்குதல். ஒருவரிடம் உள்ள குற்றம் குறைகளை நீக்கி நல்லாற்றுப்படுத்தும் பணியைச் செய்வதால் ‘ஆசிரியர்’ என்ற பெயர் உருவானது. மாணாக்கர் என்பதும் கூடக் காரணப் பெயர்தான். மாண்புடையவராக ஆக்கப்படும் நிலையில் இருப்பவர்தான் மாணாக்கர். எனவே ஆசிரியர் - மாணவர் உறவு என்பது குரு- சிஷ்ய உறவிலிருந்து வேறுபட்டது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு.
அத்தகைய சிறந்த ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவர் நிலைக்கு உயர்ந்தவர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (5 செப்டம்பர் 1888 17 ஏப்ரல் 1975). திருத்தணி அருகே பிறந்த அவர் திருத்தணி, திருப்பதியில் பள்ளிக்கல்வியை முடித்தார். வேலூர் ஊர்கிஸ் கல்லூரி மற்றும் சென்னையின் கிறிஸ்டியன் கல்லூரியிலும் படித்தார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றார்.
சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தத்துவத் துறையில் பேராசிரியராக தனது பணியை தொடங்கிய அவர் பின்னர் மைசூர் பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் மதிக்கப்பட்ட அவர் ஆந்திரா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இந்தியாவின் முதல் குடியரசுத்துணைத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1962- ல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அந்த வருடம் முதல் அவரது பிறந்த தினம் தேசிய ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.