இணைப்பிதழ்கள்

வேலை வாய்ப்பு: தபால்துறையில் காலியிடங்கள்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 தபால்காரர் (போஸ்ட்மேன்) பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் எனில் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் திறனறித் தேர்வு (Aptitude Test) மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் . இதில், பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் (அனைத்தும் எஸ்.எஸ்.எல்.சி. தரம்) ஆகிய நான்கு பாடங்களிலிருந்து தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனியே குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

எனவே, அனைத்துப் பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் எதுவும் கிடையாது. எனவே, நிச்சயமான, விடை தெரியாத கேள்விக்குக்கூட நன்கு யோசித்து விடையளிக்கலாம்.

எழுத்துத் தேர்வானது, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு அக்டோபர் மாதம் 4-ந் தேதிக்குள் ஆன்லைனில் (>www.dopchennai.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் இதர கூடுதல் விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தபால்காரர் பணியில் சேருபவர்கள் கடைசி வரையில் அதே பணியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் 3 ஆண்டு பணி முடித்த பின்பு, பதவி உயர்வுக்கான துறைத் தேர்வெழுதி அஞ்சல் உதவியாளராக (Postal Assistant) பதவி உயர்வு பெறலாம். தொடர்ந்து, மேல்பதவிகளுக்குச் செல்லவும் வாய்ப்பு உண்டு.

SCROLL FOR NEXT