இணைப்பிதழ்கள்

பொருளாதாரத்தைக் காப்பாற்றும் வழி

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி

ஒரு பொருளாதாரம் எப்போது மோச மடைகிறது? அதன் கட்டுப்பாட்டு கருவிகளும் திசைகாட்டும் கருவியும் கெட்டுப்போகும்போது. ஒரு விமானம்போல் அது சுழன்று விழுந்து நொறுங்கும்.

உதாரணமாக, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் போன்றவை 1975-95 காலகட்டத்தில் வேகமாக வளர்ந்தன.வருட வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்துக்கும் மேலாக இருந்தது. 2005-ல் அமெரிக்காவை ஜப்பான் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலகவங்கியும் சர்வதேச நிதியமும் இதை ‘கிழக்காசிய அற்புதம்‘ என்றன. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அதுதான் ‘மாதிரி’ என்றன. ஆனால், இந்த நாடுகளின் பொருளாதாரத்தில் 1997-ல் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. பிறகு ‘அற்புதம்’ பற்றிய எல்லாப் பேச்சுகளும் ஓய்ந்துவிட்டன. அதிலிருந்து ஜப்பான் இன்னமும் மீளமுடியாமல் கிடக்கிறது.

தற்போது இந்தியப் பொருளாதாரம் நெருக்கடி யான, நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. 2016-ன் ஆரம்பத்திலேயே இது நடக்கலாம். இதைச் சரிசெய்ய முடியுமா? உடனடியாகவும், நீண்டகாலப் பலன்களைத் தரும் அடிப்படையிலும் சில திருத்தங்களைச் செய்தால் காப்பாற்றலாம். மத்திய அரசின் கையில் அத்தகைய நடவடிக்கைகள் தற்போதுவரை இல்லை.

நெருக்கடிக்கான தீர்வுகள்

வர உள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அரசியல்வாதிகளையும் பொருளாதார நிபுணர்களையும் கொண்ட குழுஅமைக்கப் பட்டாக வேண்டும். இந்தியச் சமுதாயத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளக் கூடியவர் களாகவும், பொருளாதாரத்தின் சமநிலை மாறிக்கொண்டே யிருக்கிற தன்மையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களாகவும், அவர்கள் இருக்க வேண்டும். தற்போதைய அரசில் இருக்கும் பொருளாதார நிபுணர்கள், முந்தைய அரசில் இருந்தவர்களே. அவர்கள் ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிறுவனங்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள்.

இந்த நிறுவனங்கள் 1970-களில் லத்தீன் அமெரிக்காவிலும், 1990-களில் கிழக்காசியா விலும், ஏன் 2008-ல் அமெரிக்காவிலும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை முன்கூட்டியே கணிக்கவோ, தீர்வுகளை வழங்கவோ தவறிப் பரிதாபமாகத் தோற்றவை. இவற்றின் ஆய்வுகளுக்கு ‘வெற்று புள்ளிவிவரங்களின் தொகுப்பு’ என்பதைத் தவிர வேறு மதிப்பு ஒன்றுமில்லை. எனவே, நெருக்கடி மேலாண்மைக் குழுவில் உள்ளவர்கள், இந்தியப் பாரம்பரியத்தில் வந்தவர்களாக இருக்க வேண்டும். சர்வதேச நிதி நிறுவனங்களுக்குச் சார்பானவர்களாக இருக்கக்கூடாது.

இரண்டாவதாக, நெருக்கடியைச் சமாளிக்க எந்தவகையான சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, முதலில் எந்தப் பிரச்சினையின் மீது நாம் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்றும், எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். எனது நோக்கில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உடனடிப் பதில்களும் கொள்கை மாற்றங்களும் தேவை.

பதில் தேடும் கேள்விகள்

l கச்சா எண்ணெய் விலை சரிவதும் ரூபாய்க்கு மாற்றான டாலர் மதிப்பு குறைவதுமாக இருக்கும்போது, 23 ஏற்றுமதிப் பொருட்கள் கடந்த 14 மாதங்களாக ஏன் தொடர்ந்து பின்தங்குகின்றன?

l தேசிய உள்நாட்டு முதலீடுகளில் கணிசமானது குடும்பங்களின் சேமிப்பு. 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 சதவீதமாக இருந்த அது, 2015-ல் 28 சதவீதமாக குறைந்தது ஏன்?

l பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் ஏன் அதிகமாக உயர்ந்துள்ளன?

l ‘மேக் இன் இந்தியா’ எனும் நோக்கத்தை நிஜமாக்க உள்கட்டமைப்புக்காகச் சுமார் 1 லட்சம் கோடி டாலர்கள் ( 66 லட்சம் கோடி ரூபாய்கள்) தேவைப்படும். ஆனால், 2005-06 ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ..44,511 கோடியைவிட குறைவாக, 2015-16 நிதியாண்டில் 75 திட்டங்களில் ரூ.. 42,749 கோடிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது ஏன்?

l திறனுள்ள மற்றும் ஓரளவு திறனுள்ள உழைப்பாளிகளுக்கு அதிக வேலைகளை வழங்கக்கூடிய உற்பத்தித் துறை 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு இடையிலான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருப்பது ஏன்?

l இந்தியாவின் விவசாய உற்பத்திப் பொருள்கள் உலகில் மிகவும் மலிவானவையாக இருக்கும்போது, அவற்றின் உற்பத்தியை ஏன் நம்மால் இரு மடங்காக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை?

என்ன செய்ய வேண்டும்?

முதலில் தனிநபர் வருமானவரியை ஒழிக்க வேண்டும். வங்கிகளின் வட்டிவிகிதங்களை 10 சதவீதத்துக்கும் கீழே குறைத்து மூலதனச் செலவைக் குறைக்கவேண்டும். ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பை 50 ரூபாய் என மாற்றி, 2016 ம் நிதியாண்டில் அதை நிலைப்படுத்த வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் டாலர் பரிமாற்றச் செலாவணி விகிதத்தைக் குறைக்கவேண்டும்.

பங்கேற்பு பத்திரங்களை ஒழிப்பதன் மூலம் 2005-ன் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி, சுமார் ஒரு டிரில்லியன் டாலர் (சுமார் 66 லட்சம் கோடி ரூபாய்கள்) கருப்புப்பணத்தை வெளியே கொண்டுவர வேண்டும். ரூபாயை அச்சடிப்பதன் மூலம் அடிப்படைக் கட்டுமான உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முழுமையாக நிதியளிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய உற்பத்தித் துறைக்கும் ஏற்றுமதிக்கும் மந்தத்தை ஏற்படுத்திவிட்டார். காய்ச்சலில் இருக்கிற நோயாளியின் உடல் வெப்பத்தை (பணவீக்கம்) தணிக்க வேண்டும் என நம்புகிற மருத்துவர் தரும் சிகிச்சை (மூலதன வறட்சி) நோயாளியைக் கொல்லக்கூடியது. வட்டி விகிதங்களை உயர்த்தி, அதையே நிலையாக வைத்திருப்பதற்கு மூலதனத் தடையை அவர் விலையாகக் கொடுக்கிறார். அதனால், சிறு-குறு தொழில்களுக்கும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அவசியமான உற்பத்தி முதலீடுகளைக் கொன்றுவிட்டார்.

தேவைப்படும் மாற்றங்கள்

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் உணவையும் பாலையும் ஏற்றுமதி செய்யும்வகையில் விவசாயத்தை உலகளாவிய துறையாக மாற்றுவதற்குத் தேவையான உள் கட்டமைப்புகளை நெருக்கடி மேலாண்மைக் குழு உருவாக்க வேண்டும்.

நீண்டகாலத் தீர்வுகளாக, புதிய கண்டறிதல்கள் மூலம், நமது நாட்டில் உள்ள தோரியம் கனிமத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்து மின் தட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும். நீண்ட கடலோரங்களில் கடல்நீரிலிருந்து குடிநீர் தயாரித்து, கடலோர மாநிலங்களுக்குப் போதுமான நீரை அளிக்கவேண்டும். தொழில்நுட்பப் பிரச்சினைகளை முறியடித்து கால்வாய்கள் மூலம் கங்கை, காவிரி போன்ற முக்கிய ஆறுகளை இணைத்து ஒரு நீர் தொகுப்பு மையத்தை உருவாக்கவேண்டும். சுற்றுச் சூழலுக்குத் தீங்கு செய்யாமலும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாகவும் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் போன்ற புதிய மாற்றுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மாற்று சிந்தாந்த ஆற்றல்

பொருளாதாரக் கொள்கைக்கு ஒரு மாற்று சித்தாந்த ஆற்றலை அரசு வழங்க வேண்டும். குறிப்பாக,

l ஒவ்வொரு தனிநபரையும் ஊக்கத்தொகைகள் மூலமாக அரசு வசப்படுத்த வேண்டும், கட்டாயப்படுத்தல்கள் மூலமாக அல்ல.

l உறுதியளிக்கப்பட்ட முறையில் சந்தைகளை அணுகுவதை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய போட்டிப் பொருளாதாரம் மூலமாகவும், அமெரிக்கா- ஜப்பான்- இஸ்ரேலின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலமாகவும்தான் வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற முடியும். இதனை அரசியல் கடமையாக்க வேண்டும்.

l அத்தகைய வேகமான முன் னேற்றம் அமைதியான முறையில் நடப்பதற்குத் தேசியப் பாதுகாப்பு அம்சங் களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

l சமூக,பொருளாதார விவகாரங் களில் அரசின் தலையீடு குறைவாகவும், வாழ்க்கைத் தரத்துக்கான தேவைகளை அளிப்பதில் அதிகமாகவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் முன்னேறிய வகையிலும் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

l நவீனமான கல்வி மூலம் தனிநபரைப் பொருளியல்ரீதியாகவும் ஆன்மிகரீதியாகவும் ஆற்றல் படுத்துவதே அரசின் முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும்.

l சொத்து மீதான பிடிப்புக்கு மாறாகப் புரவலர் தன்மை, தொண்டு மனப்பான்மை, வருமானத்தை நல்லமுறையில் பங்கிடுதல் போன்றவை பொருளாதார முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்க உதவவேண்டும்.

l பொதுவாக, குடும்பத்துக்கு விசுவாசமாகவும் சமூகத்தின் மீது அக்கறையில்லாமலும் இந்தியர்கள் உள்ளனர். ஒரு மாபெரும் தேசத்தை கட்டி எழுப்பு வதற்கு இடையூறாக இரண்டு நூற்றாண்டு கால வறுமையின் காரணமான, நடத்தைக் குறைபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. இந்திய வரலாற்றின் அடிப்படையில், சரியான பார்வையின் மூலம் பலமான தேசிய அடையாளத்தை உருவாக்கி, அதை வலுப்படுத்துவதன் மூலம் இவற்றை சரிசெய்யலாம்.

புதிய உயரங்கள்

இந்தியா எப்போதும் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு, புத்துணர்வோடு மேம்பட்ட வளர்ச்சிப் பாதைக்கு மீண்டுள்ளது. 1965-67 உணவு நெருக்கடி பசுமைப் புரட்சிக்கும் தன்னிறைவுக்கும் வித்திட்டது. 1990-91 அந்நியச் செலாவணி நெருக்கடியால் சோவியத் பாணி பொருளாதாரத்திலிருந்து விலகி, உயர் வளர்ச்சி விகிதங்களுக்குப் போனோம்.

தற்போது வரவுள்ள பொருளாதார நெருக்கடி யையும் நம்மை ஊக்குவிப்பதற்கான வழியாக மாற்றவேண்டும். உயர் வளர்ச்சி விகிதத்தைச் சாதிப்பதாகவும், புதியன கண்டறி தல்கள் வழியாகப் புதிய உயரங்களுக்கு போகக்கூ டியதாகவும் இதை மாற்ற வேண்டும்.

- கட்டுரையாளர், முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் மத்திய அமைச்சர்

© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: த. நீதிராஜன்

SCROLL FOR NEXT