இணைப்பிதழ்கள்

வேலை வேண்டுமா?- அரசு வங்கிகளில் கிளார்க் பணி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, உள்பட 19 அரசு வங்கிகளில் 2016-17-ம் நிதி ஆண்டில் ஏற்படும் கிளார்க் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection-IBPS) வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் எழுத்துத் தேர்வை நடத்த இருக்கிறது.

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டது இந்தத் தேர்வு. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 19 வங்கிகளும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப உள்ளன.

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் ஐ.பி.பி.எ.ஸ். தேர்வை எழுதலாம். அடிப்படை கணினி அறிவு கட்டாயம். குறைந்தபட்ச வயது 20. அதிகபட்சம் 28 ஆக இருக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஆன்லைன் வழியில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், கணிதத் திறன், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 1 மணி நேரம் நடக்கும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில், ரீசனிங், ஆங்கிலம், கணிதத் திறன், பொது அறிவு, கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இதுவும் ஆன்லைன் தேர்வாக இருக்கும். தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.

முதல் கட்டத் தேர்வான முதல் நிலைத் தேர்வுக்கு செப்டம்பர் மாதம் 1-ந் தேதிக்குள் ஆன்லைனில் (>www.ibps.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை, பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்பட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

SCROLL FOR NEXT