பரீட்சை எழுதும் ஓர் அறைக்குள் நுழைந்து நோட்டம் விட்டால், ஓரிருவரைத் தவிர எல்லோருமே வலது கையால்தான் பரீட்சையை எழுதிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலோர் வலதுகைப் பழக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
சில உயிரினங்கள் ஒற்றைக் கண், ஒற்றைக் கால் அல்லது ஒற்றைப் பாதம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றன. அதேநேரம் அந்த உயிரினங்களில் இருந்து மனிதர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். 90 சதவீத மனிதர்கள் வலதுகைப் பழக்கம்கொண்டவர்களே.
மொழியே காரணம்?
வலதுகைப் பழக்கத்துக்கும் மொழிப் பயன்பாட்டுக்கும் தொடர்பு உள்ளதாக, ஒரு கொள்கை கூறுகிறது. மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதற்குச் சிறந்த இயக்கு ஆற்றல் (Motor skill) அவசியம். மூளையின் ஒரு பாதிதான் பேச்சையும் இயக்கு ஆற்றலையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் வலதுகைப் பழக்கம் கொண்டவர்களுக்கு, இடது அரைப் பகுதி மூளைதான் பேச்சைக் கட்டுப்படுத்துகிறது, கை உட்பட உடலின் இயக்கு ஆற்றலையும் அதுவே கட்டுப்படுத்துகிறது. மொழியைச் சிறப்பாகக் கையாளும் திறனைக் கொண்ட இடது அரை மூளையே, வலது கைப் பழக்கத்துக்கும் முக்கிய காரணம் என்று இந்தக் கொள்கை சொல்கிறது.
முழு விளக்கமா?
அதேநேரம், இடது கைப் பழக்க முள்ளவர்களுக்கும் இடது பக்க மூளையே மொழியைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களும் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். எனவே, வலது கைப் பழக்கத்துக்கு மொழியைச் சிறப்பாகக் கையாளும் திறன் காரணம் என்ற கொள்கையை ஓரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
அது மட்டுமல்லாமல், 50 சதவீதம் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள், 50 சதவீதம் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் என்ற இரண்டு பிரிவினர் உலகில் உருவாகாதது ஏன் என்பதையும் இந்தக் கொள்கை விளக்கவில்லை.
இடது கை ஆதாயம்
சரி, அது இருக்கட்டும். உலகில் பெரும்பாலோர் வலது கைப் பழக்கத்தையே கொண்டிருப்பதால் பல விஷயங்கள் எளிதாக வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இரு சக்கர வாகனத்தை இயக்கும் ஆக்சிலேட்டரை வலது பக்கம் வைத்திருப்பதைச் சொல்லலாம்.
இருந்தபோதும், ஒரு பெருங்கூட்டத்தில் மாறுபட்டு நிற்பவர்கள் கூடுதல் ஆதாயம் பெறுவது இயல்புதானே. விளையாட்டில் இடது கை பேட்ஸ்மேன்கள், டென்னிஸ் வீரர்கள், வாள்சண்டை-குத்துச்சண்டை வீரர்கள் எளிதில் ஜெயித்துவிடுவார்கள். இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதை, வலதுகை பழக்கம் கொண்டவர்களால் முழுமையாகக் கணிக்க முடியாமல் போவதுதான் இதற்குக் காரணம்.
இந்த வீரர்களைப் போலவே இடதுகைப் பழக்கம் கொண்ட நமது மூதாதையர்களில் சிலர், தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக்கொண்டே வந்ததன் காரணமாக இடதுகைப் பழக்கம் முற்றிலும் மறைந்துபோகாமல், இப்போதுவரை தப்பிப் பிழைத்திருக்கிறது.