மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்.
நீங்கள் ஒரு வாசகராகும்போது ஒரு புதிய வாழ்க்கை தொடங்குகிறது.
- தாமஸ் ஜெபர்சன்.
குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கமே போய்விட்டது என்பது பலரது குற்றச்சாட்டு. “எப்போ பாரு டி.வி.தான். புத்தகம் வாசிக்கணும்னு குழந்தைங்களுக்கு தானாவே தோணுவதேயில்லை” என்பது பெரியவர்களின் கவலை. பெரும்பாலான குழந்தைகள் வாசிப்பை வெறுத்து ஓடுவது ஏன்? எனது வாசிப்பு காலத்தில் ஷெர்லக் ஹோம்ஸ், அம்புலி மாமா, துப்பறியும் சாம்பு, சிஐடி சங்கர்லால் எல்லாம் இப்போது ஏன் எடுபடவில்லை? அதற்காக குழந்தைகளை குறை சொல்ல முடியுமா?
வாசிப்பின் பல போஸ்கள்
என் அப்பா ஓய்வு நேரத்தில் பல விதமான போஸ்களில் புத்தகம் வாசிப்பார். அதைப் பார்த்துப் பார்த்து வாசிப்பு எனும் சொர்க்கத்துக்குள் நான் நுழைந்தேன். இன்று பெற்றோர்கள் நாளிதழ்கள் படிப்பதே அபூர்வம். பிறகு குழந்தைகள் எப்படி வாசிக்கும்?
வாசிப்பை ஒரு பொழுதுபோக்காகக் குழந்தைகளில் பலர் நினைப்பதில்லை. இதற்குத் தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். தனது ‘குறை - சாதனைப் பள்ளி' (The under Achieving school) புத்தகத்தில் கல்வியாளர் ஜான் ஹோல்ட், “குழந்தைகளுக்குப் பொதுவாசிப்பில் ஆர்வம் ஏற்படாதிருப்பதற்குப் பள்ளிக்கூடமே காரணம்” என்கிறார்.
வாசிப்பின் அந்தரங்கம்
இந்த விஷயத்தில் பள்ளியில் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக உற்றுக் கண்காணித்து வெறுப்பேற்றுகிறார்கள் என்பார் அவர். வாசிப்பதை அவரவரது அமைதியான சொந்தத் தேடலாகக் கல்விமுறை அனுமதிப்பது இல்லை. வகுப்பறையில் ஒரு மாணவர் ஒரு புத்தகத்தை சத்தமாக வாசிக்க வைக்கப்படுவார்.
அதில் மாணவரால் உச்சரிக்க முடியாத சொற்கள் இருக்கும். அவர் அதைப் படிக்கத் தடுமாறும் போது எல்லோரின் முன்பாகவும் ‘தப்பு தப்பு' என சுட்டிக்காட்டப்படுகிறார். கிண்டலும் கேலியும் செய்யப்படுகிறது. வாசிப்பைக் குழந்தைகள் தங்கள் அந்தரங்க விஷயமாக வைத்துக்கொள்வதற்கு எதிரானவை இவை என்கிறார் ஜான் ஹோல்ட்.
மொழிப்பாடங்களோடு, துணைப்பாடம் என்று வாசிப்புக்கான புத்தகங்களை வைத்து, அதையும் ‘வரிக்கு வரி’ நடத்தி வதைப்பது அவசியமா? குழந்தைகள் எல்லாச் சொற்களையும் புரிந்துகொண்டு அர்த்தம் எழுதி எழுதி வாசிக்க வேண்டும் என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது? ஆசிரியர்களே எல்லாச் சொற்களுக்கும் அர்த்தம் சொல்ல முடியாதபோது குழந்தைகள் சும்மா மகிழ்ச்சிக்காக வாசிக்கக் கூடாதா? தொலைக்காட்சி கார்ட்டூன் சினிமாக்களை வரிக்கு வரி புரிந்துகொண்டா குழந்தைகள் ரசிக்கிறார்கள்?
‘சுடும்’ பழக்கம்
குழந்தைகளின் வாசிப்பு விஷயத்தில் இது போல ‘செய்யக் கூடாதவை'களைப் பட்டியலிடுகிறார் ஜான் ஹோல்ட். அதில் புத்தகங்களைத் திருடுவதோ, திருடுவதற்குக் குழந்தைகளை அனுமதிக்கும் விஷயமோ இல்லை. ஆனால், அந்தப் பழக்கத்தை எனக்குப் ‘பற்ற வைத்தது' என் மாணவர் பாண்டியராஜன்.
புதுவைக்கும் கடலூருக்கும் நடுவே உள்ள ஊருக்குள் யாரோ ஒரு நண்பரைச் சந்திக்க நுழைந்து முகவரி மாறிப்போனேன். கடைசியில் எனது மாணவர் பாண்டியராஜன் வீட்டு வாசலில் நின்றேன். வீட்டுக் கதவு திறந்தவுடன் ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டதை நம்ப முடியாமல் பார்த்தேன். தனது வீட்டு வாசற்படியில் தனது வகுப்பின் ஆசிரியர் நிற்பதை நம்ப முடியாமல் பாண்டியராஜன் நிற்கிறார்.
அவர் கூட்டாக நிறைய வாசிக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். சுஜாதாவின் நைலான் கயிறு, ஜெய காந்தனின் கங்கை எங்கே போகிறாள்.. இவற்றுடன் ஆர்தர் கிளார்க் அறிவியல் கதை, ஆர்.கே. நாராயணன், மார்க் ட்வெயின் என எனக்குப் புத்தகங்கள் சப்ளை செய்யத் தொடங்கினார் பாண்டியராஜன். ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு நூலகத்தின் ரப்பர் ஸ்டாம்பு. மாவட்டத்தைச் சுற்றி இவர் போகாத நூலகம் பாக்கி இல்லை. ஆனால், புத்தகங்களை அவர் எப்படி ‘எடுத்து' வருகிறார் என எனக்கு அப்போது தெரியாது.
எதுவரை முடியுமோ
வகுப்பில் அந்தப் புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல் என நான் இறங்கியபோது எனக்கே தலைகால் புரியவில்லை. வாரத்தில் ஒரு நாள் எதை வேண்டுமானாலும் வாசிக்கலாம் என சுதந்திர வாசிப்பு வகுப்பு (Free Reading Period) ஏற்படுத்தினேன். நானும் அம்புலி மாமா, கோகுலம், மஞ்சரி, சயின்ஸ் டுடே எனக் கொண்டுவந்து பொதுப்புத்தகப் புதையலைச் சேர்த்தேன். ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் அதை முழுசாக வாசித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் நாம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தத் தேவை இல்லை என்பது என் கருத்து. எதுவரை முடியுமோ, எதுவரை விருப்பமோ படித்தால் போதும். பிறகு நாம் மெல்ல மெல்ல இரண்டு சப்பாத்தியை மூன்றாக அதிகரிக்கலாம்.
சட்டம் தேவை
புத்தகக் கண்காட்சிகளுக்குக் குழந்தைகளை அழைத்துப் போவதை நாம் பண்பாட்டின் ஒரு அங்கமாக்க வேண்டும். அப்படியே புத்தகக் கண்காட்சிக்குச் சென்றாலும் குழந்தைக்குப் புத்தகம் வாங்கும்போது மட்டும் ‘வெட்டிச் செலவு' ஞாபகம் வரக் கூடாது. ‘கண்ட கண்ட கதைப் புத்தகம் வேண்டாம்' என மிரட்டி ‘ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி’ போன்ற தடியான புத்தகத்தை வாங்கிக் கொடுக்கக் கூடாது. வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில் “எதை வாங்கித் தந்தாலும் படிக்காதே” என்று மிரட்டக் கூடாது.
புத்தக வாசிப்பைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது குறித்து நம்மை மார்க் ட்வெயின் எச்சரிக்கிறார்: “அதற்கு பள்ளிக்கூடம் லாயக்கான இடமல்ல... கொதிக்கும் அடுப்புக்கல் மீது அமர்ந்துவிட்ட பூனை அதன் கிட்டே நெருங்கவே நெருங்காது. அது சில்லென்று இருந்தாலும் தொடாது. வீட்டில்தான் வாசிப்பு ஒரு மகிழ்ச்சி யான செயல்பாடாக, குதூகலமான பொழுதுபோக்காக அறிமுகம் ஆக வேண்டும்” என்கிறார் அவர்.
வாசிப்பு போதும்
பாண்டியராஜன் ஏதோ ஒரு நூலகத்தில் புத்தகம் சுட்டு மாட்டிக் கொண்டார். அந்த நாளில் வகுப்பறைப் புத்தக கிளப்பை உடனடியாக நான் கைகழுவினேன். இருந்தும் எனது வாசிப்பைப் பன்மடங்காக உயர்த்திய பெருமை பாண்டியராஜனுக்கே போக வேண்டும். வாசிப்பு வேட்டையன் என்றே நான் அவரை அழைப்பேன். அவரும் அவரது கிளப்பில் இருந்தவர்களுமான என் மாணவர்கள் இன்று உலகின் பல மூலைகளில் இருக்கிறார்கள். அன்றைய அந்த வாசிப்பு கிளப்பின் உறுப்பினர்கள் தமிழக அளவில் வினாடிவினா முதல் பேச்சு, கட்டுரை என ஒன்றையும் பாக்கி வைக்காமல் வெல்லும் திறன் பெற்றார்கள்.
அவர்கள் வாசிப்பதற்கு முன் வாசித்துவிட வேண்டும் என்றே நான் இப்போதும் தேடித் தேடிப் புத்தக வாசிப்பைத் தொடர்கிறேன். கடைசியாக திருச்சியில் ஒரு வாசகர் கூட்டத்தில் பாண்டியராஜனைச் சந்தித்தேன். “சர்வீஸ் கமிஷன் எழுதி டெபுடி தாசில்தாரா இருக்கேன் சார்” என்றார்! ஆளுமைப் பயிற்சி, தலைமைப் பண்புப் பயிற்சி, மனதை அடக்கி ஒருநிலைப்படுத்தும் பயிற்சி எனத் தன் குழந்தைகளை அனுப்புகிறார்கள் பெற்றோர். வாசிப்பு எனும் வழக்கத்தை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிட்டால் வேறு எந்தப் பயிற்சியும் வேண்டாம், வெற்றி நிச்சயம் என்பதற்கு பாண்டியராஜன் போன்ற மாணவர்கள் சாட்சி.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com