வி. மகேஸ்வரி
ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் நாயன்மார்களும் அவதரித்த தமிழகத்தில் தார்மீகம், தெய்விகம் சிறக்க வெளிப்படுவது மார்கழி மாதம். இசை, இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகள் காலையிலும் மாலையிலும் இறை உணர்வுடன் நிகழ்வதும் மார்கழி மாதமே. பகவத் கீதையில் கிருஷ்ணர் திருவாய் மலர்ந்து அருளி மகிழ்ந்ததும், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டது மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்றுதான்.
வாழ்வில் முன்னேற்றம் அடைய சோம்பேறித்தனமே எதிரி. அதை வீழ்த்துவதற்கு அதிகாலையில் துயில் எழுந்து, நீராடி நம்மை உற்சாகத்துடனும் அன்றாடம் பணிபுரிய தெளிந்த சிந்தனையுடன் பண்புக்கும் பயிற்சிக்கும் அடித் தளமாவதும் மார்கழி மாதமே. கடும் பனி பொழிகிற சூழ்நிலையிலும் விடியற் காலையில் நீராடி, கோலமிட்டு, ஆலயம் சென்று திருப்பாவை, திருவெம்பாவை பாடி, திருப்பள்ளி எழுச்சியை உற்சாகத்துடனும் அனுபவித்து உடல் புத்துணர்ச்சி பெறுவதும் மார்கழி மாதத் தருணத்தில்தான்.
வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு, ரங்கோலி வண்ணக் கோலமிட்டு, செம்மணிட்டு பசுஞ்சாணத்தில் பரங்கி பூசணி பூவை வைப்பது வழக்கம். இதை எல்லாப் பெண்களுக்கும் அகம் சார்ந்த பண்பாட்டைத் தருவதும் மார்கழி மாதமே. சூரிய பகவான் தனது கதிர் ஒளியை தனுசு ராசியிலிருந்து பிரவேசிப்பதும் மார்கழியில்தான்.
தனுர் மாதமாகிய அமாவாசையில் ஹனுமன் ஜெயந்தியும்; பவுர்ணமியில் திருஆருத்ரா தரிசனமும்; பெண்ணுக்கும் தாய்மைக்கும் பெருமை சேர்த்த சாரதா தேவியும், வீரத் துறவி விவேகானந்தர் அவதரித்ததும் மார்கழியில்தான். நம்மாழ்வர் மோட்சம் அடைந்ததும் ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜரின் குருநாதர் பெரிய நம்பிகள் தொண்டரடி பொடி ஆழ்வார், அழகிய மணவாள பெருமகன் போன்ற பெரியவர்கள் அவதரித்ததும் மார்கழியில்தான்.
வைஷ்ணவப் பெண்கள் கோதையாகிய சூடி கொடுத்த சுடர்கொடியின் பாதையில் திருப்பாவை நோன்பு இருப்பதும் இம்மார்கழியில்தான். நாயன்மார்கள் சடய நாயனார், ஈயற்பகையார், மானக்கஞ்சாரர், சாக்கியம், வாயிலார் போன்றோரின் குருபூஜை தினம் வருவதும் மார்கழியில்தான். எனவே, இந்த மார்கழியில் திருப்பாவை, திருவெம்பாவை, பகவத் கீதை பாராயணம் செய்து நடைபோடுவோமாக. பழையன
கழிதலும் புதியன புகுதலும் நிகழ மகிழ்வோம். மார்கழிக்கு வந்தனம் செய்வோம்.