இணைப்பிதழ்கள்

அரசு நிர்வாகம் வளர்ந்த கதை

கி.ரமேஷ் பாபு

நிர்வாக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு நூலாக எழுதியவர் கவுடில்யர். இவர் மவுரியப் பேரசின் ஆலோசகர். இவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் அரசு நிர்வாகத்தை விளக்குகிறது. 15 புத்தகங்களாக இருக்கும் அர்த்த சாஸ்திரம் அரசரின் செயல்பாடுகள், நிர்வாக அதிகார அமைப்பு, ஊழல், உள்ளாட்சி நிர்வாகம், என பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது.

கவுடில்யர் நிர்வாகம்

கவுடில்யர் அதிகாரிகளை நியமிக்கும் முறைகளை ஏற்படுத்தியிருந்தார். நீதிமன்றங்களும், உரிமையியல், குற்றவியல் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. சட்டங்களும் இருந்தன. வரி வசூலிக்கும் அமைப்பும், முறையும் நடைமுறையில் இருந்தன. அரசின் முக்கியமான வருவாய் நிலவரியாகவும், ஏற்றுமதி-இறுக்குமதி வர்த்தகத்தின் மூலமும் கிடைத்தது.

நாடு, தலைநகரம், மாகாணங்கள், மாவட்டங்கள், பஞ்சாயத்துகள், நகரசபை, கிராம சபை எனப் பிரிக்கப்பட்டிருப்பதும், மத்தியில் ஒரு உயர் அதிகாரம் படைத்த அதிகாரிகள் குழு இருந்தது. ஆவணங்களைச் சேகரித்து முறைப்படுத்தும் அமைப்பும் இருந்தது.

அக்பர் நிர்வாகம்

அடுத்தபடியாக, பெரிய நிர்வாக அமைப்பை முகலாய ஆட்சி வைத்திருந்தது. அதற்கான பெருமை அக்பருக்குத்தான் என்கிறார் அயினி அக்பரி எனும் நூலை எழுதிய அபுல் பைசல். ஏறக்குறைய முந்தைய ஆட்சியாளர்களின் முறையையே முகலாயர்கள் பின்பற்றினாலும் மைய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இஸ்லாமிய அரசுகளான எகிப்து, பாரசீகம் ஆகியவற்றின் பல அம்சங்கள் இந்த ஆட்சியமைப்பில் இடம் பெற்றிருந்தன.

நிதி, ராணுவம், சொத்துக்கள் மற்றும் நீதி பரிபாலனத்துக்கு என நான்கு முக்கிய அமைச்சகங்கள் இருந்தன. அரசருக்கு உதவ வகீல், வசீர் எனும் இரு தலைமை அதிகாரிகள் இருந்தனர். இதில் வகீல் அரசின் பிரதிநிதி. அவருடைய உத்தரவின் கீழ்தான் அனைத்தும் நடைபெறும். வசீர் வரி வசூல் அதிகாரி. பிரதமராகவும் கருதப்பட்டார். மாகாணங்களை சுபாக்கள் என அழைத்தனர். இதன் தலைமை அதிகாரி சுபேதார் ஆவார். இவர் பணி ஒட்டுமொத்த மாகாண நிர்வாகத்தை நடத்துவது ஆகும். இவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் மாகாண திவான். அவர் தாசில்தார்களை நியமித்தார்.

அக்பர் காலத்தில் நிலங்களை வள மானவை, வளமற்றவை எனப் பிரித்தனர்.

பிரிட்டிஷ் நிர்வாகம்

இந்தியாவில் நவீன நிர்வாகத்தை ஏற்படுத்தியவர் கார்ன் வாலிஸ் பிரபு எனப்படுகிறார். இவர் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களும், நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.

வெல்லெஸ்லி பிரபு காலத்தில் தலைமைச் செயலர் நியமன முறை ஏற்பட்டது. முதலில் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே ஐசிஎஸ் அதிகாரிகள் ஆனார்கள். இது இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்பத்தியது. பின்னர் 1919 இந்திய அரசுச் சட்டம் வந்த பிறகு குடிமைப் பணித் தேர்வுகள் சீர்திருத்தப்பட்டு இந்தியர்களும் அதிகளவில் குடிமைப் பணி அதிகாரிகள் ஆனார்கள்.

ஐ.சி.எஸ்.தான் பின்னர் ஐ.ஏ.எஸ்.பணியாக மாறியது. படிப்படியாக இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு லீ கமிஷன் துணை புரிந்தது.

1935-ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மத்தியப் பணிகளில் மேலும் அதிக இந்தியர்களை அதிகாரிகளாக்க உதவியது. துறைகள் வாரியாக ஆட்சி நடைபெறுவது பிரிட்டிஷ் காலத்திலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ்காரர்கள் நில வரி முறைகளில் செய்த மாற்றமே மிக முக்கியமானது.

அதற்கு முன்பு நிலம் அரசருக்கு அல்லது அரசுக்குச் சொந்தம் என்பது மாறி தனியுடைமை முறை அமலுக்கு வந்தது அப்போதுதான். பெரிய நிலப்பிரபுக்கள் தோன்றினர்.

மாறாத கிராம நிர்வாகம்

மூன்று பெரும் நிர்வாக மாற்றங்களிலும் மாறாத ஒரே அம்சம். கிராமப்புற நிர்வாகம் மட்டும்தான். அதிகாரங்கள் அதிகரிக்கவோ, குறையவோ செய்தாலும் அதன் நிலை இன்றுவரை மாறவில்லை. இன்று கிராம நிர்வாகத்துக்கு அதிக நிதி, அதிகாரங்கள் வேண்டும் என்னும் கோரிக்கை எழுகிறது.

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தியடிகள் சொன்னாரே, அது புரிந்தால் அரசின் நிர்வாகமும் புரியும்.

SCROLL FOR NEXT