சம்பளம் பேசுவதில் சாமர்த்தியசாலியா நீங்கள்?
அரசுப் பணியில் இதற்கு வாய்ப்புக் கிடையாது. ஆனால் தனியார் துறையில் நிரம்ப வாய்ப்பிருக்கிறது.
புதிதாக வேலைக்குச் சேர்பவருக்குக் குறைவாகவும், அனுபவசாலிகளுக்கு அதிக வாய்ப்பும் உள்ளது வாஸ்தவம்தான். ஆனால் இது நேர்காணலுக்குச் செல்லும் அனைவருக்கும் தேவையான முக்கியத் திறன். அமெரிக்கர்கள் இதில் சமர்த்தர்கள். பைசா செலவில் தயாராகும் கோலா பானத்தையும் அதிக விலைக்கு விற்கும் சாமர்த்தியம் வேறு யாருக்கு வரும்?
பாரம்பரியமாக நாம் பரம சாதுக்கள். வேலை கொடுப்பதே நிறுவனம் நமக்குச் செய்யும் நன்மை என்பது போல நன்றி உணர்வு கொண்டவர்கள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தாலும் சம்பளம் கேட்பதில் சற்றுத் தயக்கம் காட்டுபவர்கள். ஆனால் குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டால் மிகவும் சிறுமையாக உணர்பவர்கள். இன்றைய இளைஞர்கள் இப்படியல்ல என்பது நற்செய்தி.
தங்கள் எதிர்பார்ப்பைச் சரியான தொனியில் சரியான நேரத்தில் கேட்டு அதைச் சம்மதிக்கச் செய்வது ஒரு முக்கியத் திறன். அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். உங்கள் முதல் வேலை என்றால், அதுவும் பயிற்சி நிலைப் பணியாளர் என்றால் பெரும்பாலும் அங்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையாக இருக்கும். இதை விசாரித்தல் அவசியம். அப்படி இருப்பின் சம்பள பேரம் அவசியமில்லாதது.
ஆனால் கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட் இல்லாமல் நீங்களே வேலை தேடும் பட்சத்தில் சம்பள விகிதங்கள் பெருமளவில் மாறுபட்டதாகவே இருக்கும். அப்போது நீங்கள் உங்கள் சம்பள எதிர்பார்ப்பைச் சொல்வதும் அதை நிறைவேற்றிக்கொள்வதும் முக்கியம்.
நேர்காணலின் இறுதிப் பகுதியில் நேர்காணல் எடுப்பவர் சம்பளப் பேச்சைத் தொடங்குவது சம்பிரதாயம். அதுவரை காத்திருப்பதும் தவறில்லை. வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டால்தான் உங்கள் சம்பளம் விவாதிக்கப்படும் என்று அர்த்தமல்ல. உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று அறியவும், அதை ஒரு முக்கியத் தகவலாக உங்கள் தேர்ந்தெடுப்பில் எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் அதிகம் எதிர்பார்ப்பதால் கண்டிப்பாக நிராகரிக்கப்பட மாட்டீர்கள். ஆனால் உங்கள் எதிர்பார்ப்பிற்கான நியாயத்தையும் தர்க்கத்தையும் சொல்லுதல் அவசியம். முதல் வேலைக்கும் இது பொருந்தும்.
அனுபவசாலிகள் கண்டிப்பாகத் தங்கள் கடைசிச் சம்பளச் சான்றிதழ் கொண்டுசெல்லுதல் அவசியம். சான்றிதழ் இல்லாமல் சம்பளத்தைக் கூட்டிச் சொல்லுதல் பயன் தராது. உங்கள் தேர்வைப் பாதிக்கும். குறைவான சம்பளத்தைச் சொல்லி ஏன் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதற்குச் சரியான காரணங்களைச் சொல்லலாம். இந்தப் பணியில் எப்படி உங்களால் நிறுவனத்திற்கு மதிப்பு கூட்ட முடியும் என்பதை விளக்குங்கள்.
தலைமைப் பொறுப்பு களுக்காகப் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். அவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை மிகக் கடைசியாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் அதற்கு முன் இந்த நிறுவனத்திற்கு தான் என்ன செய்ய முடியும் என்பதை ஒரு செயல் திட்டமாகவே விவரிப்பார்கள். இது அவர்கள் நிலையை உறுதிப்படுத்தி, மதிப்பை உணர்த்தி அவர்களின் எதிர்பார்ப்பை நியாயப்படுத்தும்.
பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் ஒவ்வொரு நிலைக்கு இன்ன சமபளம் என ஒரு வரையறை உண்டு. உதாரணத்திற்கு ஒரு மேலாளர் என்றால் ஆறு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் என்றிருக்கும். தகுதி, பணி அனுபவம், கடைசிச் சம்பளம், எதிர்பார்ப்பு எல்லாம் வைத்துப் பார்த்து ஒரு சி.டி.சி.யை (Cost to the Company) நிர்ணயிப்பார்கள்.
உங்கள் பேரம் இந்த ரேஞ்சுக்குள் தான் நிகழ வாய்ப்பிருக்கிறது. சில சேவை நிறுவனங்களில் இது பரந்து காணப்படும். அங்கே பேர வாய்ப்பு அதிகம். உற்பத்தித் துறை போன்ற பழைய துறைகளில் இதற்குக் குறுகிய வாய்ப்புதான் உண்டு.
சம்பளம் பொருளாதார வசதிக்கு மட்டுமல்ல, ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தையும் நிர்ணயிக்கிறது. அதனால் சமபளம் பேசுவதற்கு முன் சில சங்கதிகளைக் கவனிக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் வலைதளத்தைப் பாருங்கள். அதன் சம்பளம், வேலைத் தலைப்புகள்,
வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றைத் தெரிந்தவர்கள் மூலம் விசாரியுங்கள். உங்கள் தகுதி, அனுபவம், தனித்திறன் இவற்றில் எவை எவை இந்த நிறுவனத்திற்குத் தேவை எனப் பட்டியல் இடுங்கள். அதை நேர்காணலில் பதிவுசெய்யுங்கள். இதுதான் உங்கள் சம்பளம் பற்றிய எதிர்பார்ப்பை நியாயம் செய்யப்போகிறது.
நான் பலமுறை நேராகவே கேட்பேன்: “இவ்வளவு சம்பளம் எதற்குத் தர வேண்டும்? காரணம் சொல்லுங்கள்.”
இந்தக் கேள்விக்குத் தொழில்முறை காரணங்கள் மட்டுமே சொல்லுங்கள். குடும்பம் அல்லது தனிப்பட்ட காரணங்கள் சொன்னால் அது உங்களுக்குப் பாதகமாக அமையலாம்.
கேட்ட சம்பளம் கிடைக்கும் சந்தோஷம் வேலையில் சேரும்போது சிலருக்கு நீடிப்பதில்லை. குறிப்பாகத்,
தன் நிலையிலேயே பணியில் சேரும் சகாவிற்கு அதிகச் சம்பளம் என்று தெரிய வரும்போது!
தொடர்புக்கு:
டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com