இணைப்பிதழ்கள்

பட்டப்படிப்பில் முந்தும் தமிழகம்

செய்திப்பிரிவு

(மனுசன்) சந்திரன் மேல கால வைச்ச காலம் - நீ

கைநாட்டு வைக்கிறது அலங்கோலம்

- அறிவொளி இயக்கப் பாடல்

தாய்மொழியில் தனது பெயரைத் தட்டுத் தடுமாறி எழுதத் தெரிந்தவரை எழுத்தறிவு பெற்றவர் என மத்திய அரசு வரையறை செய்துள்ளது. எழுத்தறிவு இல்லாதவர் என்பவர் கையெழுத்து போடத் தெரியாததால் தனது கட்டை விரலில் மை தடவி தனது அடையாளமாக கைரேகையைப் பயன்படுத்துபவர். கிராம மக்கள் அவரைக் கைநாட்டு என அழைப்பார்கள்.

இத்தகைய எழுத்தறிவு நிலை உள்ளிட்ட கல்வி விவரங்களும் சமூக, பொருளாதார மற்றும் சாதி தொடர்பான கணக்கெடுப்பு 2011-ல் உள்ளன. அவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

பள்ளிக்கூடம் போகாமலே…

இதுவரை வெளியாகியுள்ள விபரங்களின்படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் கையெழுத்து போடத் தெரியாதவர்கள் சராசரியாக 100-க்கு 36 பேர் உள்ளனர்.

“பள்ளிக்கூடம் போகாமலே, பாடங்களைப் படிக்காமலே பாஸ்,பாஸ், சின்னப்ப தாஸ், தாஸ்” என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். அதுபோல, பள்ளிக்கே போகாமல் கையெழுத்துப் போடவும் எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்ட அத்தகைய சின்னப்ப தாஸ்கள் 100-க்கு 14 பேர் உள்ளனர். ஆரம்பப் பள்ளியை முடித்தவர்கள் 100-க்கு 18 பேர் உள்ளனர். எட்டாம் வகுப்புவரை முடித்தவர்கள் 100- க்கு 14 பேர், 10-ம் வகுப்புவரை முடித்தவர்கள் 100-க்கு 10 பேரும், 12-ம் வகுப்புவரை முடித்தவர்கள் 100-க்கு 5 பேரும், பட்டப்படிப்பும் அதற்கு மேற்பட்ட உயர்கல்வியும் படித்தவர்கள் 100-க்கு மூன்றுபேரும் உள்ளதாக அந்த விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ‘தாஸ்கள்’

தமிழகத்தின் கிராமப்புறங்களில் 100-க்கு 26 பேர் கையெழுத்து போடத்தெரியாதவர்கள். பள்ளி செல்லாமலே கையெழுத்து போடக் கற்றுக்கொண்ட திறமைசாலிகள் 100-க்கு எட்டுப் பேர்.

ஆரம்பப் பள்ளி முடித்தவர்கள் 100-க்கு 19 பேர். நடுத்தரப் பள்ளி முடித்தவர்கள் 100-க்கு 17 பேர். 10-வது வரை முடித்தவர்கள் 100-க்கு 14 பேர். 12-வது வரை முடித்தவர்கள் 100-க்கு 7 பேர். பட்டப்படிப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் 100-க்கு 7 பேர் உள்ளனர்.

பட்டப்படிப்பு போட்டி

பட்டப்படிப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் என்ற பிரிவில் அகில இந்திய சராசரியை விடத் தமிழகம் அதிகமாக இருப்பதைக் கவனியுங்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் தமிழகம் வீற்றிருக்கிறது. பட்டப்படிப்பைப் படித்து முடிக்கிற போட்டியில் தென்னிந்தியாவில் கேரளமும் புதுச்சேரியும் நம்மை முந்தியிருக்கின்றன.

சாதிகள் வாரியாகக் கல்வி கற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரமும் இந்தக் கணக்கெடுப்பில் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னமும் வெளியிடப்படவில்லை.

கல்வி எனும் ஏணி

இத்தகைய விவரங்களை வெளியிட்டால்தான் நாட்டின் கல்வி நிலையை புரிந்துகொள்ள முடியும் என்ற நிலை கிடையாது. ஏற்கெனவே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களின் கல்வி நிலை பற்றிய விவரங்கள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் வெளியிடப்படுகின்றன. அவையே கூட நமது நாட்டில் மக்கள் மத்தியில் கல்வி எப்படி பரவிவருகிறது என்பதற்கான மாதிரி ஆய்வுதான்.

பட்டியல் சாதியினராகட்டும் பழங்குடியினராகட்டும் அவர்கள் மத்தியில்கூட வசதியானவர், ஏழை, ஆண்,பெண் என்ற ஏற்றதாழ்வுகளால் பாதிக்கப்பட்டே கல்வி பரவிவருகிறது என்பதை அவை தெரிவிக்கின்றன. உதாரணமாக, பட்டியல் சாதியினரில் துப்புரவுப் பணியைப் பரம்பரையாகச் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, அவர்களுக்குள்ளேயே மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அருந்ததியர்கள், வால்மீகி, உள்ளிட்ட சாதிகள். அவர்களிடையே மிகக் குறைவான எழுத்தறிவு நிலையும் கல்வி நிலையும் காணப்படுகிறது. இதுதான் பழங்குடியினர் நிலையும். இத்தகைய நிலை அடுத்த கட்டப் பரிணாமமாகவே வெளியாக உள்ள சாதிரீதியான கல்வி நிலை பற்றிய விவரங்களும் இருக்கும்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி நிலை பற்றிய கணக்கெடுப்புகள்கூடச் சில மாநிலங்களில் தனித்தனியாக எடுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில்தான் அவை எடுக்கப் படாமலிருந்தன. உயர்சாதியினர் எனச் சொல்லப்படுகிற மக்களிடையே கல்வி நிலை எப்படியிருக்கிறது என்பதும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

கூட்டிக் கழிச்சுப் பாரு!

பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கல்வி நிலை விவரங்கள் வெளியானாலே போதும். அவற்றையும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் கல்வி நிலையையும் சேர்த்துக் கழித்துவிட்டால் மிச்சம் இருப்பது உயர்சாதியினரின் கல்வி நிலை பற்றிய விவரங்கள்தான் என்று மக்கள் கூட்டிக் கழித்துப் பார்த்துவிடுவார்கள்.

இதுவரை வெளியாகி உள்ள பொதுவான புள்ளிவிவரங்களுக்கு உள்ளே, சாதி எனும் ஏணியில் ஒப்பீட்டளவில் மேல்படிக்கட்டில் இருக்கிற மக்களில் ஒப்பீட்டளவில் அதிகம் பேர் படித்தவர்களாக இருப்பதும் அவர்களில்கூட ஆண்கள் அதிகமாகப் படித்திருப்பதும் பெண்கள் குறைவாகப் படித்திருப்பதுமாக குறிப்பான புள்ளிவிவரங்கள் உள்ளன. ஆண்- பெண் பாகுபாடும் சாதிப் பாகுபாடும் வர்க்கப் பாகுபாடும் கலந்து இருப்பதை இந்த விவரங்கள் காட்டுகின்றன.

ஆண்-பெண் பாகுபாடு

சாதிப் படிக்கட்டில் ஒப்பீட்டளவில் மேலே இருந்தாலும் கீழே இருந்தாலும் பெண்களின் கல்வி கூடுதலாகப் பாதிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடி இனங்களைச் சார்ந்த பெண்கள் தங்களுக்கான கல்வியை அடைவதற்கான பாதை நெடுந்தூரமாகத்தான் இருக்கிறது.

பெருமைதான், ஆனால்...

2011 ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அகில இந்திய அளவில் 100-க்கு 78 பேர் கையெழுத்து போடக் கற்றுக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கின்றன. 1947-ல் இந்தியா விடுதலையடைந்தபோது 100-க்கு 12 பேர்தான் கையெழுத்து போடத் தெரிந்தவர்கள். அந்த நிலையிலிருந்து நாம் எழுந்துவிட்டோம் என்ற பெருமிதம் நமக்கு வேண்டும்தான். ஆனாலும், உலக அளவில் எழுத்தறிவு சராசரியாக 100-க்கு 84 பேர் என்ற அளவில் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது நாம் பின்தங்கித்தான் இருக்கிறோம். எழுத்தறிவு இல்லாத மனிதர்கள் அதிகம் பேர் வாழும் நாடு எனும் பெயர் நமக்கு இன்னும் நீடிக்கிறது. இது நிச்சயம் பெருமைக்குரியது அல்ல. ஆனாலும், அதை விரைவில் மாற்றிவிடுவோம் என்று நம்பிக்கையையும் இளைய தலைமுறையினர் தரத்தான் செய்கிறார்கள்.

SCROLL FOR NEXT