தொகுப்பு: கனி
அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது
செப்டம்பர் 24: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அவரது திரைத்துறைப் பங்களிப்புக்காக 2018-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் திரைத் துறையில் நுழைந்து பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1969-ம் ஆண்டு வெளியான ‘சாத் இந்துஸ்தானி’ படத்தின் மூலம் அவர் திரைத்துறைக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் செல்வந்தர்
செப்டம்பர் 25: 2019-ம் ஆண்டுக்கான செல்வந்தர்கள் பட்டியலை ‘ஐ.ஐ.எஃப்.எல். வெல்த் ஹுருன் இந்தியா’ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதல் இடத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 3.8 லட்சம் கோடி. ரூ. 1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்கள் 953 பேராக இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறார்கள். 2018-ம் ஆண்டில் ரூ. 1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 831-ஆக இருந்தது.
கடலில் மூழ்கவிருக்கும் நகரங்கள்
செப்டம்பர் 25: கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பல நகரங்கள் கடலுக்குள் மூழ்குவதைத் தடுக்க முடியாது என்று ஐ.நா.வின் பருவநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருங்கடல்கள், பனிப் பாறைகள், பனிக் கட்டிகள், பருவநிலை ஆகியவற்றுக்கு இருக்கும் தொடர்பை ஆய்வுச் செய்த விஞ்ஞானிகள், 2100-ம் ஆண்டில் கடல் நீர் மட்டம் 1 மீட்டர் அளவுக்கு உயரும் என்று கணித்திருக்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவர்
செப்டம்பர் 25: பல்கேரிய பொருளாதார நிபுணரான கிரிஸ்டலினா ஜார்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைமைச் செயல் அலுவலராக இருந்த அவர், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கேரியா நாட்டிலிருந்து முதன்முறையாக சர்வதேச நாணய நிதியத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் இவர். 1945-ம் ஆண்டு, சர்வதேச நாணய நிதியம் தொடங்கியதிலிருந்து ஐரோப்பியர்கள் அல்லாத யாரும் அந்த அமைப்புக்குத் தலைமை வகித்ததில்லை.
சந்திரயான் 2 ‘ஆர்பிட்டர்’ செயல்படுகிறது
செப்டம்பர் 26: சந்திரயான் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாகச் செயல்பட்டுவருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார். ஆனால், விக்ரம் லேண்டர் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 2021, டிசம்பரில் ‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதரை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் திறன்: 44-ம் இடத்தில் இந்தியா
செப்டம்பர் 26: உலக டிஜிட்டல் போட்டித்திறன் பட்டியலை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.எம்.டி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் 63 நாடுகள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இந்தியா 44-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு, 48-ம் இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு நான்கு இடங்கள் முன்னேறியிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
மாநிலங்களவை: 2 இடங்களுக்கு இடைத்தேர்தல்
செப்டம்பர் 26: மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (உத்தர பிரதேசம்), மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி (பிஹார்) ஆகியோர் மரணமடைந்ததால், காலியாக இருக்கும் இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 16 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் அக்டோபர் 16 அன்று நடைபெறவிருக்கிறது.
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகள் அறிவிப்பு
செப்டம்பர் 26: 2019-ம் ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகள் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பன்னிரண்டு விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டது. அறிவியலில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்புகள் செய்த காயரத் சாய்கிருஷ்ணன், சோமன் பசக், ராகவன் பி. சுனோஜ், தபஸ் குமார் உள்ளிட்ட பன்னிரண்டு விஞ்ஞானிகளுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை வழங்கினார்.
கூகுளின் 21-ம் பிறந்தநாள்
செப்டம்பர் 27: கூகுள் நிறுவனம், தன் இருபத்தியோராம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது. இதற்காகச் சிறப்பு டூடுலை அந்நிறுவனம் வெளியிட்டது. லாரி பேஜ், செர்ஜே பிரின் ஆகிய இரண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக முனைவர்பட்ட மாணவர்களால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்றைய இணையப் பயனாளர்கள் 75 சதவீதம் பேர் கூகுள் தேடுபொறி இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
காஷ்மீர்: அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும்
செப்டம்பர் 28: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த அரசியலமைப்பு அமர்வுக்கு நீதிபதி என்.வி. ரமணா தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.