இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஓ.என்.ஜி.சி. பட்டியலின மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவிருக்கிறது. பொறியியல், மருத்துவம், முதுநிலை ஜியாலஜி, முதுநிலை ஜியோ ஃபிசிக்ஸ், எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டு படித்துவரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவிகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. (ஆகையால் பட்டியலின மாணவிகள் இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம்.) பட்டப் படிப்பை முடிக்கும்வரை மாதந்தோறும் ரூ.4000/- என்ற ரீதியில் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதன்படி பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள்வரையும், எம்.பி.ஏ., முதுநிலை ஜியாலஜி, முதுநிலை ஜியோஃபிசிக்ஸ் படித்துவரும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள்வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் பி.இ., எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை மாணவர்கள் பிளஸ் 2-விலும், இளநிலைப் படிப்பிலும் முறையே 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
| விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 அக்டோபர் 2019 |
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நிதி
இந்திய அரசின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளிக்கும் துறை செயல்பட்டுவருகிறது. இத்துறை பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நிதி உதவி அளித்துவருகிறது. 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைபாடு உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒன்பதாம் அல்லது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குப் பராமரிப்புத் தொகையாக மாதந்தோறும் ரூ.800/-, புத்தக மானியமாக ஆண்டுக்கு ரூ.1000/-, மாற்றுத் திறனாளிக்கான சிறப்புத் தொகையாக ஆண்டுக்கு ரூ.2000/- முதல் ரூ.4000/-வரை வழங்கப்படும்.
| ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 அக்டோபர் 2019 விண்ணப்பிக்க: http://www.b4s.in/vetrikodi/PSF1 |