இணைப்பிதழ்கள்

வேலை வேண்டுமா? - மத்திய அரசு ஜூனியர் இன்ஜினீயர் பணி

செய்திப்பிரிவு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

மத்திய அரசின் பல்வேறு ஆணையங்கள், துறைகள், நிறுவனங்களில் ஜூனியர் இன்ஜினீயர் காலிப் பணியிடங்கள் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

மத்தியப் பொதுப்பணித் துறை, மத்திய நீர் ஆணையம், மத்திய நீர், மின் ஆராய்ச்சி நிறுவனம், எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்.) தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், குவான்டிட்டி சர்வேயிங் போன்ற பிரிவுகளில் இக்காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. ஜூனியர் இன்ஜினீயர் பணிக்குச் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் பாலிடெக்னிக் டிப்ளமா அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒருசில பதவிகளுக்குப் பணி அனுபவமும் அவசியம்.

தேர்வு விவரம்

துறை, பாடப் பிரிவுக்கு ஏற்ப 30, 32 என்று வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மொத்தக் காலியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தேர்வுகள் இடம்பெறும். ஆன்லைனில் நடைபெறும் முதல் தாளில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்துடன் நுண்ணறிவுத் திறன், ரீசனிங், பொது அறிவு ஆகியவற்றில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வு ஆன்லைன்வழித் தேர்வாக இருக்கும். தேர்வு நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 2-ம் கட்டத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இதில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து கேள்விகள் இடம்பெறும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் ஆன்லைனில் (ssc.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, வெவ்வேறு பிரிவினருக்கான வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்குரிய பாடத்திட்டம், பணி ஒதுக்கீட்டு முறை, சம்பளம் போன்ற விவரங்களை எஸ்.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்:

12 செப்டம்பர் 2019
எஸ்.எஸ்.சி. இணையதள முகவரி: ssc.nic.in

SCROLL FOR NEXT