இணைப்பிதழ்கள்

காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் உருவான கதை

செய்திப்பிரிவு

தொகுப்பு: ம.சுசித்ரா

இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதும் சொத்துரிமை, அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை ஆகியவற்றில் தனக்கெனத் தனியொரு அரசியலமைப்புச் சட்டத்தை 1957-லிருந்து பின்பற்றிவருகிறது ஜம்மு&காஷ்மீர். அதற்குக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்மாநிலத்துக்கு என வகுக்கப்பட்ட 370, 35 ஏ ஆகிய சிறப்புச் சட்டங்கள்.

ஜம்மு & காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. தனிப்பட்ட சட்டக் குழுவால் அது வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35 ஏ பிரிவு களின் கீழ் கிடைத்துவந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த வாரம் நீக்கியது மத்திய அரசு.

இதனால், ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். அப்படியானால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக ஜம்மு&காஷ்மீர் மாறும். மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்படும். சட்டப் பிரிவு 356 இனி ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தும். ஏதேனும் நெருக்கடி நிலை உருவாகும் பட்சத்தில் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடப்படும். இந்திய தேசியக் கொடிதான் இனி காஷ்மீருக்குமானது. காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டு அது தனி யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. 35 ஏ சட்டப் பிரிவும் நீக்கப்பட்டதால் இனி இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும்.

வரலாறு சொல்லும் காலக்கண்ணாடி

இப்படிப்பட்ட 370, 35 ஏ சட்டப் பிரிவின் பின்னணி என்ன, காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் உருவான கதை என்ன என்பவை குறித்த சுருக்கமான பார்வை:
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாகவே இதன் கதை தொடங்கிவிட்டது.

1846 ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலம். அப்போது டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த மஹாராஜா குலாப் சிங் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்படுத்திக்கொண்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின்படி ஜம்மு-காஷ்மீர் பகுதியை விலைகொடுத்து வாங்கினார்.

1930கள் டோக்ரா வம்சாவளியைச் சேர்ந்த ஹரி சிங் காஷ்மீரை ஆண்டுவந்தார். அவருடைய ஆட்சியில் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் ஒடுக்கப்படுவதாகவும் இஸ்லாமியர் உணர்ந்தனர். அதிருப்தியின் வெளிப்பாடாகத் தேசிய மாநாட்டுக் கட்சி உருவெடுத்தது. ஷேக் முகமது அப்துல்லா அக்கட்சியை நிறுவினார்.

ஆகஸ்ட் 1947 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் தனி நாடானது. எந்தெந்தப் பகுதிகள் இந்தியா, பாகிஸ்தானுக்கு உட்பட்டவை என்பது முடிவுசெய்யப்பட்டது. அப்போது இந்திய துணைக்கண்டம் 565 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. ஜூனாகத், ஹைதராபாத், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மூன்றையும் பிரிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

அன்றைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல் அப்பகுதிகளை ஆண்டுவந்த குறுநில மன்னர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஜூனாகத், ஹைதராபாத் ஆகியவை இந்தியாவோடு இணைய ஒப்புக்கொண்டன. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் மன்னர் இந்துவாகவும் பெருவாரியான மக்கள் இஸ்லாமியராகவும் இருந்தனர். முக்கியமாக அது இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியாக இருந்தது.

இந்தக் குழப்பத்தின் காரணமாக எந்தத் தரப்பும் வேண்டாம் தனி நாடாகவே நீடிக்க விரும்புவதாக பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார் மன்னர் ஹரி சிங். ஆனால், இந்தியாவுடன் அப்படியான எந்த உடன்படிக்கையும் அன்று ஏற்படுத்தப்படவில்லை.

அக்டோபர் 1947: பாகிஸ்தானிலிருந்து பஷ்டூன் பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஊடுருவினர். இதைத் தொடர்ந்து மன்னர் ஹரி சிங்குக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். இந்நிலையில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, படேலிடம் இந்திய ராணுவத்தின் உதவியை ஹரி சிங் கோரிப் பெற்றார்.

ஜனவரி 1948 காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ஊடுருவுவதைத் தடுக்கும்படி ஐ.நா. சபையின் உதவியை நாடியது இந்தியா.

மார்ச் 1948 சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் ஜம்மு&காஷ்மீருக்கு இடைக்கால அரசாங்கத்தைநியமித்தார் ஹரி சிங். அதன் பிரதமரானார் ஷேக் அப்துல்லா.

ஜனவரி1949 ஐ.நா. தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தமான கராச்சிஉடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

ஜூலை 1949 சட்டப் பிரிவு 370-ஐ வடிவமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஷேக் அப்துல்லாவுடன் மூன்று உறுப்பினர்கள் இணைந்தனர்.

1950 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டது. இதில் சட்டப்பிரிவு 1, ஜம்மு&காஷ்மீர் இந்திய மாநிலம் என்கிறது, சட்டப்பிரிவு 370 அதற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கியது.

1951 ஜம்மு&காஷ்மீருக்கான அரசியலமைப்பு நிர்ணய சபை கூடியது. இதில் தேசிய மாநாட்டு கட்சியினர் மட்டுமே உறுப்பினராக பொறுப்பேற்றார்கள்.

1953 ஷேக் அப்துல்லா பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜம்மு&காஷ்மீரின் புதிய பிரதமராக பக்ஷி குலாம் முகமது பொறுப்பேற்றார்.

1956 ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. அது இந்தியாவின் அங்கம் என்று அறிவிக்கப்பட்டது.

1957 ஜம்மு&காஷ்மீருக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தின் அரசியலமைப்பு நிர்ணய சபை கலைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டசபை பொறுப்பேற்றது.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT