கோபால்
இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 மத்திய ஆட்சிப் பகுதிகளும் இருந்தன. ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு மத்திய ஆட்சிப் பகுதிகளாக ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019 ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தார். இதற்கான மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேறிவிட்டது. இதன் மூலம் இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது. மத்திய ஆட்சிப் பகுதிகளின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்களான சமஸ்தானங்கள்
1947-ல் இந்தியாவுக்கு விடுதலை கொடுத்துவிட்டு ஆங்கிலேய அரசு வெளியேறியபோது நாட்டில் 565 சமஸ்தானங்கள் இருந்தன. ஆங்கிலேயர்களுக்குக் கட்டுப்பட்டு சமஸ்தானங்களை ஆண்டுவந்த மன்னர்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றனர். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த சமஸ்தானங்கள் சுதந்திர இந்தியாவின் தனி மாநிலங்களாகவோ ஏற்கெனவே இருந்த மாநிலங்களின் பகுதிகளாகவோ இணைக்கப்பட்டன. பிரெஞ்சு, போர்த்துகீசிய அரசுகளின் ஆளுகைக்குள் இருந்த பகுதிகள் மத்திய ஆட்சிப் பகுதிகளாகவோ அருகிலிருந்த மாநிலங்களுடனோ இணைக்கப்பட்டன.
அரசியல் சாசனத்துடன் உருவான மாநிலங்கள்
1950 ஜனவரி 26 அன்று நடை முறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுத்தது. அதில் 27 மாநிலங்களாகத் தற்காலிகமாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அசாம், தமிழ்நாடு (1969 வரை மதராஸ்), ஒடிஷா (2011வரை ஒரிசா), உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இன்றும் இருக்கின்றன. இவை உருவான நாள் 1950 ஜனவரி 26 என்று கணக்கில் கொள்ளப் படுகிறது.
மொழிவாரி மாநிலங்கள்
தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பொட்டி ராமுலு 1952-ல் காலமானார். 1953-ல் மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட்டு ‘ஆந்திரப் பிரதேசம்’ என்ற முதல் மொழிவாரி மாநிலம் உருவானது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளிலி ருந்து மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் எழுந்தன.
1956இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி இந்தியா, ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், பம்பாய், ஜம்மு & காஷ்மீர், கேரளம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் (1973 வரை மைசூர் மாநிலம்), ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களாகவும் 6 மத்திய ஆட்சிப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டன.
இதில் இன்றும் தொடரும் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1956 நவம்பர் 1 அன்று உருவானதாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. விடுதலைக்குமுன் சமஸ்தானமாக இருந்த ஜம்மு& காஷ்மீர் 1956-ல்தான் முழுமையாக இந்திய ஒன்றியத்தின் பகுதியானது.