சு. தியடோர் பாஸ்கரன்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூவைப் போலத் தாவர உலகின் சில அதிசயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவற்றைக் கூர்ந்து நோக்கினால் இப்பூவுலகில் நம் வாழ்க்கை பற்றிய சில அடிப்படைக் கேள்விகள் எழுவதைக் காணலாம். தென் அமெரிக்காவிலிருந்து நம் நாட்டில் குடியேறியிருக்கும் நிஷகாந்தி என்றறியப்படும் பூச்செடியும் இப்படிப்பட்டதுதான். ஆண்டில் ஒரே ஒரு முறை, அதுவும் இரவில் மட்டுமே பூக்கும் செடி இது.
கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Epiphyllum oxypetalum. வளர்ப்பதற்குத் தண்ணீர் அதிகம் தேவையில்லை கையளவுள்ள ஒவ்வொரு வெண்ணிறப்பூவும், மனதைக் கவரும் அருமையான மணம் கொண்டது. ஒவ்வொரு பூவிலும் இருக்கும் மூன்று விதமான இதழ்கள், அதற்கு ஓர் எழிலார்ந்த தோற்றத்தைத் தருகின்றன. சில செடிகளில் நூறு பூக்கள் மலர்ந்தது பதிவாகி இருக்கிறது. எங்கள் தோட்டச் செடி ஒன்றில் 21 மலர்கள் பூத்தன. பளீரென்ற வெண்மையான இம்மலர்கள், செடியில் விளக்குகளை ஏற்றி வைத்தாற்போன்ற ஒரு மயக்கத்தை தோற்றுவித்தன.
தொன்மக் கதைகள்
ஒவ்வோர் ஆண்டும் சரியாக ஜூலை மாதத்தில் ஒரு நாள் இரவு இந்தச் செடிகள் மலர்ந்து, பின் சில மணி நேரத்தில் மூடிவிடும். அதற்குப் பின் அடுத்த ஆண்டுதான். எந்தப் பூக்கடையிலும் வாங்க முடியாத அரிய மலர் இது.
மெக்சிகோ காடுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தச் செடி, அங்கு அடிமரங்களைத் தொற்றி வளர்கிறது. இன்று உலகெங்கும் பரவி Dutchman’s cactus, Orchid cactus, Jungle cactus என்று பல பெயர்களால் அறியப்படுகிறது.
ஆங்காங்கே அதைச் சுற்றி உள்ளூர்த் தொன்மங்களும் உருவாகியிருக்கின்றன. இலங்கையில், 'சொர்க்கத்தின் பூ' என்றறியப்படும் இது, விண்ணுலகினர் மேலுலகிலிருந்து புத்தருக்கு அஞ்சலி செலுத்த மண்ணுலகில் தோன்றுவதாக ஐதீகம். புனிதப் பாத மலையில் நடக்கும் புத்த பூர்ணிமா விழா நேரத்தில் இந்தப் பூ மலர்வது, இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இது ‘பெத்லகேமின் நட்சத்திரம்' (Star of Bethlehem) என்று அறியப்படுகிறது. ஏசு பிறந்திருந்த நேரத்தில், அவரைத் தேடி வந்த மூன்று கீழைத்தேச மன்னர்களை வழிநடத்திய நட்சத்திரத்தின் குறியீடாக, இதை அவர்கள் பார்க்கிறார்கள். பழனியில் இந்தச் செடி ஒன்று பூத்தபோது, இந்த மலர்களை வழிபட்டால் முருகன் அருள் கிடைக்கும் என்று மக்கள் பூஜை செய்ததாக, நாளிதழ் ஒன்றில் படித்தது நினைவுக்கு வருகிறது.
குலேபகாவலிப் பூ
வட இந்தியாவில் இதற்கு பிரம்மகமல் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆனால், பாரம்பரியமாக பிரம்மகமல் என்றறியப்படும் மலர் இமயமலையில், உத்தரகண்டில் உள்ள மலர்ப் பள்ளத்தாக்குப் பகுதியில் வளரும் ஒரு புதர்ச்செடியில் பூப்பது. அந்த மலர் ஒரு கூடை மாதிரி
பிரம்மாண்டமாக இருக்கும்.
தமிழில் நிஷகாந்திக்கு ஏதாவது பெயர் உருவாகியிருக்கிறதா என்று தேடினேன். தாவரவியல் பற்றி எழும் கேள்விகளுக்கு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த நரசிம்மன் அவர்களிடம் கேட்பது என் வழக்கம். அவர் சில இடங்களில் இந்தச் செடிக்கு ‘குலேபகாவலி' என்று பெயரிட்டுள்ளனர் என்றார். எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி' படத்தில் சாபத்தால் கண்பார்வை இழந்த தன் தந்தையைக் குணப்படுத்தும் ஆற்றல் படைத்த ஓர் அரிய பூவைத் தேடி கதாநாயகன் தாசன் புறப்பட்டுச் சென்று, அதில் வெற்றியும் பெறுவான்.
இந்தப் படம் வருவதற்கு முன்பே இந்தக் கதை தமிழ்நாட்டில் பிரபலமாயிருந்தது. அதனால், இந்தப் பெயர் அந்த மலருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம். நிஷகாந்தி என்ற பெயரிலும் இது இங்கு அறியப்படுகிறது. கேரளத்தில், ஒவ்வோர் ஆண்டும் அரசு நடத்தும் இசை விழாவுக்கு 'நிஷகாந்தி விழா' என்று பெயரிடப்படுள்ளது.
விடை தெரியாத கேள்விகள்
இரவில் மலரும் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு இரவாடிகள்தாமே உதவ முடியும்? நிஷகாந்திச் செடிக்கு Humming bird moth எனப் பெயர் கொண்ட ஒரு அந்திப்பூச்சி இந்த வேலையைச் செய்கிறது. இந்த அரிய பூச்சியை எங்கள் தோட்டத்தில் விடியற்காலையில் ஒரே ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். வேறு நாடுகளில் சில சிறிய வெளவால்களும் இந்த வேலையைச் செய்கின்றன என்று படித்திருக்கிறேன். அன்றிரவுதான் இச்செடி மலரும் என்று அந்த உயிரினங்களுக்கு எவ்வாறு தெரிகிறது?
ஏன் சில தாவரங்கள் இரவில் மலர்கின்றன? மனிதர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது, வெளியே இரவில் ஓர் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில்
கொள்ள வேண்டும். ஆந்தைகள், பாம்புகள் போன்ற இரைகொல்லிகள் ஓசையின்றி நடமாடிக்கொண்டிருக்கின்றன. வெளவால், காட்டுப்பன்றி போன்ற உயிரினங்கள் இரை தேடிக்கொண்டிருக்கின்றன. இருட்டில் இரைதேடும் சில பூச்சிகளின் துணையுடன் தங்கள் வாழ்க்கையின் அடிப்படை வேலையான இனப்பெருக்கத்தை, மகரந்தச் சேர்க்கை மூலம் சில தாவரங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.
ஆனால், அது ஏன் ஓர் இரவில் மட்டும், அதிலும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டும்? இது அறிய முடியாத ரகசியமா? பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் இந்தப் பூ மலரும்போது, ஒரு சிறு விருந்து வைப்பது இந்தப் பூச்செடி வளர்ப்போரிடையே ஒரு வழமையாகிவிட்டது. குவிந்திருக்கும் பூங்கொத்துகளில் தோன்றும் அறிகுறிகளைப் பார்த்து, இன்று இரவு பூக்கும் என்றறிந்து எங்கள் வீட்டுக்கு அருகில் வாழும் நண்பர்களுக்கு தொலைபேசியில் இம்மலர் பற்றிக் கூறி, வந்து பார்க்க அழைப்புவிடுத்தேன்.
எங்கள் வீட்டுக்கு எட்டுப் பேர் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாமே பெண்கள்தாம். ஆண்கள் வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சிகளில் அடைபட்டுக் கிடந்தார்கள். அற்புதங்களின் ஸ்பரிசத்தைச் சிலர் உணர்வதேயில்லை.
கட்டுரையாளர்,
சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com