இணைப்பிதழ்கள்

வாசிப்பின் வாசல் திறக்குமா? தமிழகப் பள்ளிக்கூட நூலகங்களின் நிலை

செய்திப்பிரிவு

ம.சுசித்ரா 

மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளை நூலகமாக மாற்றுவது, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,000 நூல்கள் கொண்ட நூலகம் செயல்படுவதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தமிழகக் கல்வித் துறை வலியுறுத்திவருகிறது. இதன்பொருட்டு, நாமக்கல் அருகே பொன்னேரிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த ஆண்டு இரு மாணவர்கள் மட்டுமே படித்த நிலையில் அப்பள்ளி நூலகமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பாக வெளியானது.

மறுமுனையில் பாடப் புத்தகங்களைக் கடந்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்தபட்சம் 1,000 புத்தகங்கள் இருக்க வேண்டும். நூலகம் இல்லாத பள்ளிகளில் மிகுதியாக உள்ள அறை, நாற்காலி, மேஜைகளை நூலகத்துக்காகப் பயன்படுத்த வேண்டும். நூலகப் பணியை மேற்கொள்ள ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி நூலகங்களின் நிலை குறித்து அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

கேட்டது கிடைக்கவில்லை! 

சில வாரங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை வெங் கலத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியை உதயலட்சுமி, தான் பணிபுரியும் பள்ளி நூலகத்தில் போதுமான நூல்கள் இல்லாததால் கல்வியாளர்களும் கல்வி ஆர்வலர்களும் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உதவும்படி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றியபடியே நூலகப் பொறுப்பாளராகவும் கடந்த இரண்டாண்டுகளாக இருந்துவருகிறேன்.

எங்கள் நூலகத்தில் 650 புத்தகங்கள் உள்ளன. வருடாவருடம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மதிப்புள்ள புத்தகங்களைப் பள்ளிக்கல்வித் துறை வழங்கிவருகிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை வெங்கலத்தூர் போன்ற கிராமப் பகுதியில் வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் வாசிப்பதற்குரியதாக இருப்பதில்லை. இதனால் கடந்த ஆண்டு எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தகப் பட்டியல் ஒன்றைக் கல்வித் துறைக்கு அனுப்பிவைத்தேன். பொதுவாகக் கேட்ட புத்தகங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இதனாலேதான் தன்னார்வலர்களின் உதவியைக் கோரி வருகிறேன்” என்கிறார் உதயலட்சுமி. 

சுமை குறைக்கப்படுமா? 

பொதுத் தேர்வுகளின் அழுத்தத்துடன் நுழைவுத் தேர்வின் அச்சுறுத்தலையும் இடைநிலை வகுப்புகளில் இருந்தே நம்முடைய பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில், “என்னுடைய பள்ளி நாட்களில் ‘பூந்தளிர்’, ‘ரத்னபாலா’, ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணா’ போன்றவற்றை வாசிப்பதற்கு நேரமும் சூழலும் இயல்பாகவே இருந்தன. இப்போது திரும்பிப் பார்த்தால்கூட அவை என் மனத்தில் பசுமையாக நிழலாடுகின்றன.

ஆனால், இன்று நம் மாணவர்கள் பாடப்புத்தகங்களின் பாரம் தாங்காமல் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அந்தச் சுமையைக் குறைத்தால், வாசிப்பின் ருசியை அவர்களால் உணர முடியும். அதற்கு முதல் கட்டமாக நூலக வேளை என்பது பாட அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல ஆசிரியர்களின் பணிச்சுமை யும் மாணவர்களின் படிப்புச் சுமையும் குறைக்கப்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த கல்வியாளர் என்.மாதவன். 

தனிநபர்களின் கூட்டு முயற்சி 

மாவட்டத்துக்கு மூன்று, நான்கு அரசுப் பள்ளிகளை மட்டும் ஸ்மார்ட் வகுப்புகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றிவிட்டு மீதமுள்ளவற்றைப் பராமரிப்பின்றி அரசு கைவிடும் போக்கைத் தொடர்ந்து கல்வியாளர்கள் சுட்டிக்காட்டிவருகிறார்கள். இதற்கிடையில், கல்வி மீது அக்கறைகொண்ட ஆசிரியர்களாலும் தனிநபர்களின் முயற்சியாலும் மட்டுமே சில அரசுப் பள்ளிகள் மூடப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டுவருகின்றன. இவ்வாறு மீட்கப்பட்டிருக்கும் குக்கிராமப் பள்ளிகளில் ஒன்று நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி. 

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 328 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியரும் நூலகப் பொறுப்பாளருமான ரேணுகா தேவி கூறியபோது, “அரசு ஆண்டுதோறும் சில நூல்களை நூலகத்துக்கு வழங்குகிறது. ஆனால் நூலகத்துக்கு அவசியமான அலமாரி, மேஜை, நாற்காலி, வாசிப்பின் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய நூல்கள் போன்றவற்றைப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் நிதி உதவியாலும் பொதுமக்களின் நன்கொடை மூலமாகவுமே வாங்கிச் சேகரித்திருக்கிறோம்.

சொல்லப்போனால், இப்பள்ளியின் நூலகர் என்ற முறையில் வீடுவீடாகச் சென்று உண்டியல் குலுக்கி, வசூலித்து, வாங்கிய புத்தகங்களின் பெயர்களை என்னால் சொல்லமுடியும். அடுத்த தலைமுறைக்கு அறிவொளி பாய்ச்சப் பாடப்புத்தகங்களைவிட நூலகப் புத்தகங்களே கைகொடுக் கின்றன. வெறுமனே புத்தகங்களை அடுக்கிவிட்டால் வாசிப்பு வந்துவிடுமா! எதைச் செய்தால் அவர்களை வாசிக்கவைக்க முடியும் என்பதைச் சோதனை முறையில் செய்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

பாட வகுப்பு களையும் முடித்துவிட்டு புத்தகத் திருவிழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது, கைக்காசைப் போட்டு அவர்களுக்குப் பிடித்தமான நூல்களை வாங்கித் தருவது போன்ற முயற்சிகளை அநேக ஆசிரியர்கள் கூட்டு முயற்சி யாகச் செய்துவருகிறோம்” என்கிறார். 

ஆன்மாவுக்கா, ஆஸ்துமாவுக்கா? 

தமிழகப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகப் பள்ளி நூலகப் புதுப்பித்தல் திட்டத்தை அரசு முன்வைப்பதாகவும் ஒரு கருத்துள்ளது. இது குறித்துப் பள்ளி ஆசிரியரும் கல்வியாளருமான லிபி ஆரண்யா, “தேவைக்கு அதிகமாக ஆசிரியர்களும் தேவைக்குக் குறைவான மாணவர்களும் தமிழகப் பள்ளிகளில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு அனுதினம் பல நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் பெருவாரியான அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. மரத்தடியில் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகள் பல. இந்நிலையில் பயன் படாமல் இருக்கும் அறை, கூடுதலாக இருக்கும் நாற்காலி, மேஜைகளை நூலகத்துக்குப் பயன்படுத்துங்கள் என்று உத்தரவிடுவதும், நூலக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று சொல்லி ஏற்கெனவே பணிச் சுமையில் இருக்கும் ஆசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையைத் திணிப்பதும் தவறு. புத்தகங்கள் நம்மை மேம்படுத்தும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. சொல்லப்போனால், ஒரு தன்னிறை வான நூலகத்தைக் கொண்ட 

கல்வி நிறுவனத்தில், மாணவர்களுக்குப் பாடப் புத்தகமே அவசியம் இல்லை என்பேன். அதேவேளையில் 1,000 புத்தகங்கள் என்ற வரையறையில் எந்தெந்தப் புத்தங்கள் பரிந்துரைக்கப்படும், அவற்றை முடிவுசெய்யப் போவது யார் போன்ற கேள்விகள் எழுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ‘புத்தகங்கள் ஆன்மாவுக்கு’ என்று வாய்கிழியப் பேசும் நம் கல்வி நிலையங்களில் பல மாணவர்களை நூலகத்தின் புத்தகங்களைத் தொட அனுமதிப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனம். அலமாரிக்குள்ளேயே நெடுங்காலமாக உறைந்துகிடக்கும் அப்படியான புத்தகங்களை இன்று நான் கையில் எடுத்தால், ‘புத்தகங்கள் ஆஸ்துமாவுக்கு’ என்றே சொல்ல நேரிடும்” என்கிறார். 

‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படு கின்றன’ என்பது போன்ற நூற்றுக்கணக்கான பொன்மொழிகள் நூலகங்களின் பெருமையைப் பேசுகின்றன. அப்படிப்பட்ட நூலகங் கள் நம் மாணவர்களை மேம்படுத்த வாசிப்பின் வாசல் உண்மையாகத் திறக்கப்பட வேண்டும். தனிநபர்களின் முயற்சி யால் ஆங்காங்கே சாத்தியப்படும் இத்திட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே ஒட்டுமொத்தமாக நடைமுறைப்படுத்த முடியும். வாசிப்பின் வாசலை அரசு உண்மையாகவே திறக்குமா?  

கட்டுரையாளர்,

தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in 

SCROLL FOR NEXT