இணைப்பிதழ்கள்

அந்த நாள் 41: திருமலை தந்த திருவிழா நகரம்

செய்திப்பிரிவு

ஆதி வள்ளியப்பன் 

“மதுரைன்னா உனக்கு என்ன ஞாபகம் வரும் செழியன்?”
“மதுரை ஒரு மிகப் பெரிய கிராமம், குழலி”
“அப்படிச் சொல்றது எங்க ஊருக்கு உண்மையிலேயே பெருமைதான். மதுரைன்னு சொன்னதுமே எங்களுக்கெல்லாம் திருவிழாக்களும் கொண்டாட்டமும்தான் ஞாபகத்துக்கு வரும். அப்படி மதுரைய விழா நகரா மாத்தினவரு யாரு தெரியுமா?”
“யாரு?”
“திருமலை நாயக்கர்தான். ஆண்டுதோறும் தென்தமிழக மக்களையும் உலக சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்குற சித்திரைத் திருவிழா அவர் காலத்துலதான் உருவாச்சு.
அவர் காலத்துக்கு முன்னாடிவரை மாசி (மார்ச்) மாசத்துல நடைபெற்று வந்த மீனாட்சி திருக்கல்யாண விழாவையும் மீனாட்சியம்மன் கோயில் தேர் திருவிழாவையும் சித்திரை மாசத்துக்கு திருமலை நாயக்கர் மாத்தினார். இந்தத் திருவிழாவின் எட்டாம் நாள்ல மீனாட்சியம்மனுக்கு முடிசூட்டி, அம்மனிடமிருந்து மன்னர் செங்கோலைப் பெறும் நிகழ்ச்சியும் திருமலை நாயக்கர் காலத்துல சேர்க்கப்பட்டுச்சு.”
“சித்திரைத் திருவிழாவை பார்த்திருக்கேன். வேறென்ன திருவிழாக்கள் எல்லாம் மதுரைல பிரபலம்?”
“வைகாசி மாசத்துல வசந்த விழா, ஆவணி மாசத்துல திருவிளையாடல், புரட்டாசி மாசத்துல நவராத்திரி விழான்னு வருசத்துக்கு நாலு திருவிழாக்கள் அவரோட காலத்திலேர்ந்தே தொடருது. இந்த விழாக்களால மதுரைக்குத் தனி அடையாளமும் கிடைச்சுது.” 

“ஆனா, எல்லாமே கோயில் சார்ந்த விழாக்கள் தானே?”
“ஆமா, கோயில் சார்ந்தவைதான். திருமலை நாயக்கர் காலத்துல நிறைய கோயில் திருப்பணிகளும் நடந்துச்சு. மதுரை மீனாட்சியம்மன் கோயில் (புது மண்டபம்), அழகர் கோயில், திருப்பரங்குன்றம், திருப்புவனம், வில்லிப்புத்தூர் கோயில்கள்ல திருமலை நாயக்கர் பல மண்டபங்களைக் கட்டினார். இந்தக் கோயில்கள்ல அவருக்குச் சிலையும் உண்டு. நாயக்க மன்னர்கள்ல திருமலைக்குத்தான் கோயில்கள்ல சிலை அதிகம். 
மதுரை மீனாட்சியம்மன் கோயில், ரங்கம், ராமேஸ்வரம், பழனின்னு கோயில்களோட நிர்வாகத்தையும் திருமலை ஒழுங்குபடுத்தினார். அவருடைய ஆட்சிக் காலத்துல ‘ராய கோபுரம்’னு சொல்லப்படுற அரச கோபுரத்தைக் கட்டுறதுக்கான பணி பல கோயில்கள்ல தொடங்கப்பட்டுச்சு. ஆனா, அந்த வேலை முடியல, எல்லாமே மொட்டைக் கோபுரங்களா தேங்கிடுச்சு.”

“இப்படி கோயில், திருவிழாக்களை திருமலை நாயக்கர் ஆதரிச்சதைப் பார்த்தா இந்து மதக் கோயில்களை மட்டும்தான் ஆதரிச்சிருக்காரோன்னு சந்தேகம் வருதே?”
“இல்ல. அவரு எல்லா மதத்தினரையும் ஆதரிச்சிருக்கார். சைவ, வைணவ மதங்களைத் தாண்டி கிறிஸ்தவ மதத்துக்கும் திருமலை ஆதரவளிச்சார். பாதிரியார் ராபர்ட் டி நோபிலி போன்றவங்க திருமலை நாயக்கரை நேர்ல பார்த்து ஆதரவு பெற்று கிறிஸ்தவத்தை வளர்த்திருக்காங்க.

அதேமாதிரி, திருமலை நாயக்கர் காலத்துல பாசன வசதி, போக்குவரத்துக்கு ஏற்ற சாலைகள், சாலைகளில் பயணிப்போர் தங்குவதற்கான சத்திரங்கள், பசியுடன் இருப்பவர்களுக்கு உணவும் தண்ணீரும் தருவதற்கான ஏற்பாடுகள் போன்றவையும் செய்யப்பட்டிருந்துச்சு.”
“மொத்தத்துல நாயக்கர் காலத்துல சிறந்த அரசர் திருமலைன்னு சொல்ல வர்றியா, குழலி.”
“பொ.ஆ. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்துல ஆட்சி நடத்தியவர்களிலேயே சிறந்தவர்னு சொல்ல வர்றேன், செழியன்.”

குலச்சின்னம் காளை 

மரத்துக்கு அடியில் அமர்ந்திருக்கும் காளை உருவத்தை தனது குலச்சின்னமாக திருமலை நாயக்கர் கொண்டிருந்தார். மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் அவர் நாட்டிய கொடிமரங்களில் இந்தச் சின்னங்களை இன்றைக்கும் பார்க்கலாம். கடவுளர் உருவங்கள் பொறித்த பல நாணயங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப் பாடம்

குமரகுருபரரும் நாட்டார் இலக்கியங்களும்

திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்த தமிழ் கவிஞர் குமரகுருபரர், ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ என்ற பிரபல நூலை எழுதினார். ‘மீனாட்சியம்மை குறம்’ என்ற சிற்றிலக்கியத்தில் திருமலை நாயக்கரை குமரகுருபரர் புகழ்ந்து பாடியுள்ளார். அக்காலப் போர்கள், சமூக நிலைமையை விளக்கும் வகையில் ‘ராமப்பய்யன் அம்மானை’, ‘ரவி குட்டிப்போர்’, ‘மதுரை வீரன் கதை’ போன்ற வாய்மொழி இலக்கியங்களும் திருமலை நாயக்கர் காலத்தில் தோன்றியவையே.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

SCROLL FOR NEXT