டாக்டர். ஆர். கார்த்திகேயன்
எல்லோரும் மன அழுத்தம் என்பதை ஒரு நவீன விஷயமாகப் பேசுகிறார்கள். இது ஆதி மனிதனாக இருந்த காலத்திலேயே நமக்கெல்லாம் இருந்த விஷயம்தான். நம் பெரிய அண்ணன் சிம்பன்ஸிகூட இதைப் பெரும்பாலும் அனுபவித்தவர்தான். ஒன்றும் புதிதில்லை. அப்படி என்றால் ஏன் தற்போது இவ்வளவு கூச்சல்? காரணம் உள்ளது. அதை விவாதிக்கும் முன், ஒரு சின்ன ‘ஃப்ளாஷ் பேக்’. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அதிகாலைப் பொழுது.
குகையிலிருந்து ஆதி மனிதன் சோம்பலாய் வெளியே வருகிறான். எதிரில் வைத்தகண் வாங்காமல் ஒரு புலி உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆபத்தை உணர்ந்த ஒரு நொடியில் முடிவு செய்கிறான். ஒன்று சண்டையிட வேண்டும். அல்லது ஓடி விட வேண்டும். இந்த எண்ணம் வந்த அதே நொடியில் உடல் சக்தியைத் திரட்டுகிறது. சண்டையிட வேண்டுமானாலும் சரி, ஓட வேண்டுமானாலும் சரி, உடல் ஒத்துழைக்க வேண்டும்.
அதற்குக் கண் பார்வை கூர்மையாக வேண்டும். தசைகள் முறுக்கேற வேண்டும். தோல் தன்மை மாற வேண்டும். இதயம் அதிகமாகத் துடிக்க வேண்டும். இவை அனைத்தையும் நரம்பு மண்டலம் செய்து மனதுக்கு சிக்னல் கொடுக்க வேண்டும். பிறகு மனம் ஆபத்தை ஆராய்ந்து புலி குட்டியாக இருந்தால் சண்டைக்குச் சென்று விரட்டவோ கொல்லவோ முடிவு செய்யும். பெரிய புலியென்றால் உயிரைக் காக்க மைல்கணக்கில் அத்தனை தடைகளையும் தாண்டி மர உச்சியிலோ சிறு குகையிலோ பதுங்க ஓட வேண்டும்.
“யெஸ் சார்!” இதை Fight or Flight Response என்பார்கள். ஒரு நெருக்கடி நிலையை உணர்ந்து உடல் ரசாயன மாற்றங்கள் செய்துகொள்ளுதலைத்தான் Stress Response என்று பின்னர் அழைக்க ஆரம்பித்தனர். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இது மிகக் குறுகிய காலம் மட்டுமே உடலுக்கு நிகழும் மாற்றமாக இருந்தது. காரணம், புலி விரட்டப்பட்டவுடனோ புலிக்குத் தப்பிய பிறகோ உடல் பழையபடி தளர்வு நிலைக்கு உடனே திரும்பும். தசைகள் தளரும். தோல் சகஜ நிலைக்கு வரும். இதயத் துடிப்பு சீராகும். மனம் நிவாரணம் கண்டவுடன் பசி எடுக்கும். உறக்கம் வரும். மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பும்.
இங்குதான் நவீன வாழ்வில் சிக்கல் உள்ளது. இங்கு நெருக்கடிகள் பெரும்பாலும் உள்ளம் சார்ந்தவை. உடல்ரீதியான நெருக்கடி, உயிர் பயம் போன்றவை விலகியவுடன் இயல்புநிலை திரும்பும். ஆனால், உளச் சிக்கல்கள் நீடித்து நிலைப்பவை. எப்படி? உங்கள் பாஸ் அனைவர் முன்னிலையிலும் மிக மோசமாக நீங்கள் செய்த வேலை குறித்துக் குறை கூறுகிறார். கடுமையான வார்த்தைகள் சொல்லித் திட்டுகிறார். உடல் உடனே அதே ‘ஃபைட்- ஃப்ளைட் மோடு’க்குச் செல்லும். இதயம் துடிக்கும். ஜீரணம் தடைபடும். தசைகள் முறுக்கேறும். ஆனால், உங்களால் அங்குச் சண்டையும் போட முடியாது. ஓடிப்போகவும் முடியாது. அனைத்தையும் விழுங்கிக்கொண்டு “யெஸ் சார்!” என்று வேலையைத் தொடர் வேண்டும்.
உடலும் மனமும்
வீட்டிலும் இதே நிலைதான். தகாத சொற்களும், தர்க்கமில்லாச் சண்டைகளும் போடும் வாழ்க்கை. துணையிடமிருந்து ஓடிப் போகவும் முடியாது. எல்லா நேரத்திலும் சண்டை போடவும் முடியாது. இது தவிர, சமூகத்தில் காணும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் உடல் ஒரே விதமாகத்தான் எதிர்வினையாற்றுகிறது. பல இடங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் அந்த உணர்விலேயே பல மணி நேரம் தங்கிவிடுகிறோம். இயல்புநிலைக்குத் திரும்ப முடியாமல் நீடித்த மன உளைச்சல் நோய்களைக் கொண்டுவந்து குவிக்கிறது.
புலியை எதிர்கொண்ட ஆதிமனிதன் ஓடியோ சண்டையிட்டோ மன அழுத்தம் தந்த ரசாயனங்கள் சீர்பட உடல் உழைப்பைப் பயன்படுத்தினான். அன்று மன அழுத்தம் பற்றிய அறிவு அவனுக்கு இல்லை. ஆனால், அவன் வாழ்க்கை முறை அதைச் செய்ய வைத்தது. இன்று உடல் பயிற்சி பற்றி அனைத்தையும் படிக்கிறோம். ஆனால், அனைத்துக் காரியங்களையும் நடத்த இயந்திரங்களைக் கண்டுபிடித்துவிட்டோம். செய்கின்ற வேலைகளையும் ரோபோட்க்கள் பறிக்கச் சம்மதம் தெரிவித்துவருகிறோம்.
அதனால் ஒவ்வொரு மன உளைச்சல் தரும் சம்பவமும் உடலில் நோய்களாகும்வரை தங்கிவிடுகிறது. இதுதான் நவீன காலப் பிரச்சினை. அன்று அவனுக்கு உணவு பற்றிய கவலையும் உயிர் பற்றிய பயமும் மட்டும்தான் முக்கியமான மன அழுத்தம் தரும் காரணிகள். இன்று கண் விழித்தவுடனேயே பாஸ் முகம், ஈ.எம்.ஐ., கிரெடிட் கார்ட் பாக்கித் தொகை, தத்கல் டிக்கெட், முதுகு வலி, வாட்ஸ் அப் வதந்திகள் என மனம் சிதற, ஒவ்வொரு நெருக்கடி உணர்வும் உடலில் அமிலம் சுரக்க வைக்கிறது. மன அழுத்தங்களை உடல் உழைப்பால் சரி செய்யும் சூட்சுமம் அறிந்திருந்தான் ஆதி மனிதன். நாம் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை உள்ளே தேடாமல் மாத்திரை, மருந்துகள், இயந்திரங்கள் பொருட்கள், உறவுகள் என வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்!
கேள்வி: என் வயது 35. எனக்குத் தூக்கம் குறைந்துகொண்டே வருகிறது. மூன்று மணி நேரம்கூட இரவில் தூங்க முடிவதில்லை. மாத்திரை எடுக்கப் பயமாக இருக்கிறது. இரவைக் கடத்துவது எப்படி என்று தெரியவில்லை. மொபைல் பார்த்துக் களைப்பானாலும் தூக்கம் வருவதில்லை. தனியே வசிக்கிறேன். கணவர் அபுதாபியில் உள்ளார். தனிமையால்தான் தூக்கம் வரவில்லையா, என்ன சிகிச்சை எடுப்பது?
பதில்: பசியும் தூக்கமும் ஆரோக்கியத்தின் அறிகுறிகள். உடலோ மனமோ எந்தப் பாதிப்பை எதிர்கொண்டாலும் அது இவ்விரண்டில்தான் முதலில் வெளிப்படும். இன்று அமெரிக்காவில் தூக்கத்துக்கும் துக்கத்துக்கும் கொடுக்கப்படும் மாத்திரைகளே அதிகமாக விற்கப்படுகின்றன.
ஒரு மருத்துவரைப் பாருங்கள். உடல் அல்லது மனநோய் இல்லாத பட்சத்தில் இது வாழ்வியல் பிரச்சினை. தனிமை ஏதாவது ஒரு திரையைப் போதையாக்கிக் கொள்ளும். டி.வி. அல்லது மொபைல். இன்று பெரும்பாலும் மொபைல். இதை Electronic Screen Syndrome என்று சொல்கிறார்கள். 10 மணிக்கு மொபைலைச் செயலிழக்கச்செய்துவிட்டு நிசப்தமும் இருளும் சூழ்ந்த அறையில் உறங்கச் செல்லுங்கள். தூக்கம் வராவிட்டாலும் பரவாயில்லை. அந்தத் தொடர் ஓய்வு தூக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
| ‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com |
கட்டுரையாளர்,
மனிதவளப் பயிற்றுநர்