பணியின்போது எதிர்பாராத சவால்களையும், சாகசங்களையும் விரும்பும் இளைஞர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது இந்தியக் கடலோரக் காவல்படை. நம் நாட்டின் கடல்பகுதிகளைப் பாதுகாப்பதுடன், கடல்மார்க்கமாக நடக்கும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது, கடலில் தத்தளிக்கும் கப்பல்கள் மற்றும் மீனவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளைக் கடலோரக் காவல்படையினர் மேற்கொள்கிறார்கள்.
யான்ரிக் எனப்படும் தொழில்நுட்பப் பணியாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இந்தியக் கடலோரக் காவல்படை. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் டிப்ளமா (பாலிடெக்னிக்) பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அவசியம். தேசிய அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் எனில் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும். வயது 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பொறியியல் பட்டயதாரர்கள் ஜூலை 23-ந் தேதிக்குள் ஆன்லைனில் (>www.joinindiancoastguard.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு தொடர்பான விரிவான விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.