இணைப்பிதழ்கள்

கைரேகை எப்போதுமே மாறாதா?

ஆதி

கட்டை விரல் அல்லது பெருவிரல் ரேகை பெருமளவில் மாறாது என்பதால்தான், முக்கியமான ஆவணங்களில் ஒருவருடைய கையெழுத்துக்குப் பதிலாக விரல்ரேகை பெறப்படுகிறது. தனித்தன்மை கொண்டது, வாழ்நாள் முழுக்க மாற்ற முடியாதது என்பதால், ஒருவருடைய மாறாத அடையாளமாக அது கருதப்படுகிறது.

ஒரு குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் சுருள்களும் முடிச்சுகளும் கொண்ட ரேகைகள் உருவாகின்றன. அப்படி உருவாகும் ஒருவருடைய கைரேகை பிறப்பு முதல் இறப்புவரை மாறாமலேயே இருக்குமா?

மாறாத தடயம்

நமது கை வழுவழுவென்று இருந்தால், எதையும் பிடிக்க முடியாது, வழுக்கிவிடும். நாம் இறுக்கமாகப் பிடிக்க உதவுபவை ரேகைகள். கைகளுக்கு உராய்வைத் தரும் வரிமடிப்புகள்தான் இந்த ரேகைகள். கண்ணாடி, உலோகம், பளபளப்பு ஏற்றப்பட்ட எல்லாப் பொருட்களிலும் ரேகைகள் பதியும்.

மேல் தோல் மடிப்பில் உள்ள சுரப்பிகளிலிருந்து வியர்வை சுரக்கும். சுரப்பியிலிருந்து வியர்வை வெளியாகிக் கொண்டே இருப்பதனாலேயே, ரேகைகள் இப்படிப் பதிந்துவிடுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் இப்படிக் கிடைக்கும் ரேகைகளே தடயம் அறியவும் புலனாய்வுக்கும் பயன்படுகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க, கைரேகை பயன்படுத்தப்படும் முறை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது. எதிர்பாராதவிதமாக ஒருவர் இறந்துவிடும்போது, அடையாளம் காணவும் கைரேகை பயன்படுத்தப்படுகிறது.

முதுமை மாற்றங்கள்

எல்லாம் சரி, வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உடல் வளர்ச்சியும், தளர்வும் அடைந்துகொண்டிருக்கும் நிலையில் கைரேகை மட்டும் வாழ்நாள் முழுக்க மாறாமல் இருக்குமா? கையில் ஏதேனும் வெட்டினாலோ, சிராய்ப்போ, அமிலமோ அல்லது தோல் பிரச்சினையாலோ கைரேகைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம். இருந்தபோதும் ஒரு மாத இடைவெளியில் ரேகைகள் திரும்ப உருவாகிவிடும்.

வயதாக ஆக, விரல் நுனிகளில் உள்ள தோலின் நெகிழ்வுத்தன்மை குறைந்துவிடும், அதனால் வரிமடிப்புகள் தடித்துவிடுகின்றன. ஆனால், அதற்காக விரலின் ரேகை மாறிவிடாது. ஆனால் வயதான காலத்தில் அதை ஸ்கேன் செய்வதோ, அச்சிடுவதோ பிரச்சினையாகி விடுகிறது.

SCROLL FOR NEXT