சில்லறை வணிகத் துறை தனது ஊழியர்களின் தேவையை அதிகரிப்பது போலத் தோன்றுகிறது. அடுத்த வருடம் இந்தத் துறையில் நான்கு முதல் ஐந்து லட்சம் வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.
இப்போதைய நிலையை ஒப்பிட்டால் 15 முதல் 20 சதவீதம் வரையிலான அதிகரிப்பு.ஏற்கெனவே இந்தத் துறையில் பணியாற்றுவோர்க்கும் 10 முதல் 12 சதவீதம் வரையிலான சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உண்டு. குறிப்பிட்ட சில பதவிகளுக்கு 30 சதவீத உயர்வும் இருக்கலாம்.
சில்லறை வணிகத் துறையில் உருவாகும் போக்குகள் பற்றிய ஆய்வை அக்ரீட்டி என மேலாண்மை ஆலோசனை நிறுவனம் எடுத்துள்ளது. அதன் நிர்வாக இயக்குநர் பரம்ஜித் ஆனந்த் “இந்தத் துறை முழுவதுமே வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு பெருமளவு அதிகரிக்கும்” என்கிறார்.
“ பிரம்மாண்டமானது சில்லறைத் துறை. துணி, மளிகை, மருந்து, சேவைத் தொழில்கள் என நேரடியாகவும் மறைமுகவும் சில்லறை வணிகம் செயல்படுகிறது. அதற்கு மிகப் பெரும் அளவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்” என்றார்.
2016- ம் வருடத்தில் சில்லறை வணிகம் 1,100 கோடி ரூபாய்களிலிருந்து 1,300 கோடி ரூபாய்கள் வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறை 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 9 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்புகளை இந்தத் துறை அளிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்தை இந்தத் துறை அளிக்கிறது.
“சில்லறை வணிகத்தை மிகவும் பயமுறுத்துவது மின்- வணிகமுறை எனப்படும் ஆன்லைன் வர்த்தகம். அதை நோக்கி மக்கள் போவதால் சில்லறை வணிகத் துறையும் தன்னை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, சில்லறை வணிகத் துறையும் தொழில்நுட்ப அறிவுள்ள தொழிலாளர்களைத் தேடுகிறது” என்கிறார் பரம்ஜித்.
திறமைமிக்கவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கல்லூரி வளாகங்களில் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான முகாம்களையும் சில்லறை வணிகத் துறை நடத்த உள்ளது. வாடிக்கையாளர்களிடம் பொருள்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிற பணிகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
“பொதுவாக, நகரங்களில் அத்தகைய பணிகளுக்காக நிறைய ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். ஒருவரை வேலைக்கு எடுப்பதற்கு முன்பாக அவருக்குத் திறன் அடிப்படையிலான பயிற்சியைத் தந்து தேர்வு செய்வது என்பது தற்போது முக்கியமானதாகவும் மாறிவருகிறது” என்கிறார் பரம்ஜித்.
© தி இந்து ஆங்கிலத்திலிருந்து சுருக்கமானத் தமிழாக்கம் நீதி